கடலுக்குள் வாழும் காதல் ஜோடி

கனடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ்-எபன் ஸ்டோல்ஸ். இவர்களுக்கு அரியா (வயது 5), எல்லியா (2) என இரு மகள்கள்.

Update: 2019-06-16 10:10 GMT
னடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ்-எபன் ஸ்டோல்ஸ். இவர்களுக்கு அரியா (வயது 5), எல்லியா (2) என இரு மகள்கள். இந்தச் சிறிய குடும்பம் கடலில் படகு வீட்டில் வசிக்கிறது. அதனால் நீச்சல், படகு சவாரி, நீர்ச்சறுக்கு விளையாட்டு போன்ற சாகச விளையாட்டு களை பிடித்தமான பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார்கள். கடலில் வசிக்கும் டால்பின்கள்தான் அரியா, எல்லியாவின் நண்பர்கள்.

ஆரம்பத்தில் ஜெனிவிவ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த வேலை அலுப்பு தரவே, வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஆசிரியையாக வேலை பார்த்த ஸ்டோல்ஸை காதலித்து திருமணம் செய்தவர், தான் சேமித்துவைத்த பணத்தில் படகு ஒன்றை வாங்கி இருக்கிறார். அதில் ஒரு குடும்பம் வசிப்பதற்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்தினார்.

‘நிலத்தில் படகில் வசிப்பதைவிட நீருக்குள் வசித்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணம் மனதிற்குள் எழ, கடலை வசிப்பிடமாக மாற்றிவிட்டார். இரண்டு குழந்தைகளின் பிரசவத்திற்காக மட்டுமே ஜெனிவிவ்-எபன் ஸ்டோல்ஸ் தம்பதியர் கடலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள். கடலில் வசித்தாலும் இரு மகள்களும் எந்தவித சிரமமுமின்றி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டோல்ஸ் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்த அனுபவத்தில், மகள்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

‘‘கடற்கரையில் இருந்து பார்க்கும்போது அலைகளின் ஆர்ப்பரிப்புதான் வெளியே தெரியும். ஆனால் ஆழ்கடல் பகுதி ஏராளமான பொக்கிஷங்களை தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் தேடிப் பார்ப்பதும், அறிந்துகொள்வதும், புத்தகமாக எழுதுவதும் சுவாரசியமானதாக இருக்கிறது’’ என்கிறார் ஸ்டோல்ஸ்.

ஜெனிவிவ், தங்கள் படகு வீட்டை கடந்து செல்லும் கப்பல்கள், படகுகளில் பயணிப்பவர்களுக்கு தேவையான வேலைகளை செய்துகொடுத்து, சம்பாதிக்கவும் செய்கிறார்.

‘‘நாங்கள் கடலுக்குள் அமைதியாக வாழ்கிறோம். இங்கு யாரும் எங்களை தொந்தரவு செய்வதில்லை. கடலுக்குள் வசித்தாலும், நாங்கள் தனிமையை உணர்வதில்லை. ஏனெனில் தனிமை எங்கள் குடும்ப பந்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

கடலுக்குள் மீன்பிடிக்க வருபவர்கள் ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை அழைப்பார்கள். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். சிலருக்கு எரிபொருள் தேவைப்படும். சிலருக்கு உணவு, தண்ணீர் தேவைப்படும். அவசர காலங்களில் கடலுக்குள் சிக்கி தத்தளிப்பவர்களை கூட பத்திரமாக மீட்டிருக்கிறேன். இப்படியே காலமும், நேரமும் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது’’ என்கிறார், ஜெனிவிவ்.

மேலும் செய்திகள்