எனக்கு 42 உனக்கு 24 காதல் வெல்கிறது.. வயது தோற்கிறது..

இரு மனங்கள் இணையும் இல்லற வாழ்க்கையில் மன பொருத்தத்தை விட வயது பொருத்தத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மணமகனைவிட மணமகளின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Update: 2019-06-23 07:29 GMT
கரீனா கபூரை விட சைய்ப் அலிகானுக்கு 11 வயது அதிகம்; மான்யதாவை விட சஞ்சய்தத்துக்கு 19 வயது அதிகம்; ஜார்ஜ் குளூன
அதற்கு விதிவிலக்காக அதிக வயது வித்தியாசத்துடன் திருமண வாழ்க்கையில் இணைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தால் அந்த ஜோடியை சமூகம் வித்தியாசமான கண்ணோட்டத்துடனே பார்க்கும் நிலை இருக்கிறது. அதேவேளையில் மனைவியைவிட கணவனின் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் யாரும் அதை பெரிய விஷயமாக கருதுவதில்லை. ஆனால் கணவனை விட மனைவியின் வயது அதிகமாக இருந்தால் அது சமூகத்தால் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது.

அப்படி எல்லாம் இருந்தாலும் வெற்றிகரமான திருமண வாழ்க்கை என்பது வயதை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம், ‘வயது வித்தியாசம் அதிகம் கொண்ட வாழ்க்கை துணையால் பிரச்சினைகள் ஏற்படுமா? மனதளவில் பாதிப்பு ஏதும் உண்டாகுமா?’ என்று கேட்டால் ‘பெரிதாக பிரச்சினைகள் எதுவும் இல்லை’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.

அவர்கள் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்க பழகிவிடுகிறார்கள். தன் துணையின் வயதுடன் தன் வயதை ஒப்பிட்டு பார்க்காதவரை பிரச்சினைகள் எழுவதில்லை. தன்னை விடவும் ரொம்பவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு மனோ ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவர்களிடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் எட்டிப்பார்க்கும். சிலருக்கு துணையின் மீது சந்தேகமும் ஏற்படலாம். இவையெல்லாம் இல்லற வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள்.

சிலர் திருமண வயதை கடந்து தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமண வாழ்க்கையை தொடங்கி குழந்தைகள், அவர்களின் படிப்பு என அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்போது வயதாகிவிடும். அப்போது தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்வும் உண்டாகலாம். துணைக்கும் சில சமயங்களில் ‘அவசரப்பட்டு இவருடன் இல்லற வாழ்க்கையை தொடங்கிவிட்டோமே’ என்ற எண்ணம் தோன்றலாம். பார்ப்பவர்களின் கண்களுக்கு நாம் பொருத்தமில்லாத ஜோடியாக தெரிகிறோமோ? என்ற கவலையும் தோன்றலாம். இதுபோன்ற சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிடவேண்டும். அப்போதுதான் சலனமில்லாத நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

வயது வித்தியாசம் அதிகம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்திருந்தாலும்கூட சாதாரணமாக அதுபற்றிய நினைவு வராது. சுற்றி இருப்பவர்கள் யாராவது விமர்சனம் செய்தாலோ, மற்ற இளம் ஜோடிகளைவிட பார்க்கும்போதோதான் மனதில் ஒருவித குற்ற உணர்வு எட்டிப்பார்க்கும். முன்பெல்லாம் ஆண் களின் வயதை பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை. மனைவியும் எவ்வளவு இளையவராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலையும் இருந்தது. காலப்போக்கில் அந்த நிலை மாறியது. ஆண்-பெண் இருபாலருக்கும் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டு அது சட்ட திட்டங்களுடன் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரிய அளவில் வயது வித்தியாசம் இல்லை. வயதில் இடைவெளி குறைவாக இருப்பவர்களையே திருமண வாழ்க்கையில் இணைத்து வைக்க தொடங்கினார்கள்.

பொதுவாகவே மனோரீதியாக ஒத்த வயதுடையவர்களுக்கு இடையே உள்ள புரிதல், அதிகப்படியான வயது வித்தியாசம் கொண்டவர்களிடத்தில் இருப்பதில்லை. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்துகொள்பவர்களுக்கு மனதளவில் புரிதல் ஏற்பட கால அவகாசம் தேவைப்படும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தால் பிரச்சினைகள் எழாது. மனதால் இணைந்தவர்களுக்கு வயது ஒரு தடையே இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையும் மகிழ்ச்சியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் பலர் திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஜோடியாக வலம் வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்களை வித்தியாசமாக பார்த்தவர்கள் பின்பு மனது ஒருமித்த தம்பதிகளாக ஏற்றுக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். அதை மெய்பிக்கும் வகையில் சில ஜோடிகள் முன் மாதிரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபலமான இந்தி நடிகர் திலீப் குமார் தன்னை விட 22 வயது குறைவான சாய்ராபானுவை திருமணம் செய்து கொண்டார். சாய்ராபானுவின் குடும்பத்தினர் யாருக்கும் இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை. பிறகு இருவரும் ஒற்றுமையாக வாழ்வதை பார்த்து சமாதானமாகிவிட்டார்கள். உலகப்புகழ்பெற்ற சித்தார் இசைக்கலைஞர் வித்வான் ரவிசங்கருக்கும் அவர் மனைவி சுகன்யாவிற்கும் இடையே 34 வயது வித்தியாசம். சுகன்யா, ரவிசங்கரை முதன் முதலில் சந்தித்தபோது அவருக்கு 18 வயது. அவருடைய இசையில் மனதை பறிகொடுத்த சுகன்யாவிற்கு வயது வித்தியாசம் பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் ரவி சங்கர் தயங்கினார். சுகன்யாவோ தன் நிலைப்பாட்டை மாறிக்கொள்ளவில்லை. உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ரவிசங்கரை கரம்பிடித்தார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கும், அவருடைய மனைவி மான்யதாவுக்கும் இடையே 19 வயது வித்தியாசம். ‘இன்றுவரை நான் வயது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை’ என்கிறார், மான்யதா. ‘வயது வித்தியாசத்தால் என் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இது, நலமாகவே இருக்கிறது’’ என்றும் சொல்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவானுக்கும், அவர் மனைவி அச்சலா தவனுக்கும் இடையே 15 வயது வித்தியாசம். ‘‘அதுபற்றி ஒருநாளும் நினைத்து கூட பார்த்ததில்லை. சுயசரிதம் எழுதியபோதுதான் வயது வித்தியாசம் பற்றிய பேச்சு எழுந்தது. இது எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல’’ என்றார், அச்சலா தவான்.

நடிகர் நவாப் சைய்ப் அலிகானுக்கும், அவருடைய இரண்டாவது மனைவி கரீனா கபூருக்கும் 11 வயது வித்தியாசம். ஆனால் வெளி பார்வைக்கு அப்படி தெரியாது. அதுபற்றி கரீனாவிடம் கேட்டபோது, ‘‘வயது வித்தியாசம் எனக்கு ஒரு விஷயமே இல்லை’’ என்றார்.

வயது வித்தியாசம் அதிகம் கொண்ட தம்பதியர் பட்டியலில் மலையாள நடிகர் பிஜூ மோகன் - சம்யுக்தாவும் இணைந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையே 11 வயது வித்தியாசம் இருக்கிறது. ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மறைந்த என்.டி. ராமாராவ் 70 வயதில் லட்சுமி பார்வதியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 31 வயது வித்தியாசம். எழுத்தாளரான லட்சுமி பார்வதி வயதை பற்றி கவலைப்படாமல் ராமாராவுடன் இல்லற வாழ்க்கையில் கரம் கோர்த்தார். மனதில் அன்பு இருந்தால் வயது வித்தியாசம் தடையே இல்லை என்பதை நிரூபிக்கவும் செய்தார்கள். திரைப்பட இயக்குனர் முஜ்பர் அலிக்கும், அவர் மனைவி மீரா அலிக்கும் இடையே 20 வயது வித்தியாசம். இதுபற்றி திரைப்படம் ஒன்றும் எடுத்திருக்கிறார்கள். ‘காதல் வென்றது.. வயது தோற்றது’ என்று திரைப்படத்தை முடித்தார்.

பிரபல எழுத்தாளர் மார்க் டுவெய்ன் இதை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார். அதில் அதிக வயது வித்தியாசமான தம்பதிகளின் வாழ்க்கை முறை, மன ஓட்டம் பற்றி விரிவாக அலசி இருக்கிறார். அவர் சொல்கிறார்.

‘‘அதிக வயது வித்தியாசம் என்பது அன்பிற்கு தடையில்லை. ஆனால் திருமணம் என்று வரும்போது மனதில் ஒருவித உறுத்தல் ஏற்படும். ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் எழும். மற்றவர்கள் அதுபற்றி பேசும்போது மன உளைச்சல் அதிகமாகும். ஆனால் இந்த விஷயத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் வாழ்க்கை சகஜமாக இருக்கும். பொதுவாகவே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவை பூர்த்தி செய்யப்படும்போது மன நிறைவு அடைகிறார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு வேறு எந்த விஷயமும் பெரிதாக தெரியாது. ஆண் களுக்கு உண்மையான அன்பே மகிழ்ச்சியை தரும். இருவரின் எண்ணங்கள் ஈடேறும்போது அங்கு குறை இருப்பதில்லை. வயது வித்தியாசம் என்பது வெறும் பிரம்மைதான்’’ என்கிறார்.

முற்காலத்தில் மன்னர்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்தபோது எந்தவொரு வயது பொருத்தத்தையும் பார்த்ததில்லை. தங்களைவிட குறைந்த வயது பெண்களை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் போதும். வயதை தாண்டி வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்