இந்திய அதிகாரிகள் கண்டெடுத்த தங்கப் புதையல்

கம்போடியாவின் தலைநகராக இருந்த அங்கோரில், அழிவின் விளிம்பை எதிர்நோக்கி இருக்கும் கோவில்களில் ஒன்றான ‘தா புரோம்’ வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களால் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.

Update: 2019-06-23 10:37 GMT
தா புரோம் கோவிலில் உள்ள ‘ஸ்டெகோசரஸ்’ மிருகத்தின் சிற்பம்; இந்திய அதிகாரிகள் கண்டெடுத்த தங்க கிரீடம்
அந்தக் கோவிலைப் பார்த்து வியந்த பலரும், தங்கள் கருத்துக்களை இணையதளங்களில் ஏராளமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

ராட்சத மரங்களின் வேர்களில் சிக்கி இருக்கும் அந்தக் கோவில் கட்டிடங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வர்ணிக்கிறார்கள். ‘தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை போல அந்தக் கோவில் கட்டிடம் தென்படுவதாக’ ஒரு பயணி எழுதி இருக்கும் குறிப்பு பலராலும் பாராட்டப் பெற்று இருக்கிறது.

தா புரோம் கோவில், பிரமாண்ட மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரிய காட்சியைப் போல, அந்தக் கோவில் மேலும் பல வியக்கத்தக்க தகவல்களையும் கொண்டு இருப்பதால், அங்கோரில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக அது திகழ்கிறது.

அங்கோரில் தலைநகரை அமைத்துக் கொண்டு 1181-ம் ஆண்டு முதல் 1218-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மன்னர் 7-ம் ஜெயவர்மனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

அடர்ந்த காடுகளுக்குள் பல ஆண்டுகளாக மறைந்து கிடந்த அந்தக் கோவில், 300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்தக் கோவிலின் வரலாறு பற்றி ஏதும் தெரியாமல் இருந்தது.

தொல்பொருள் ஆய்வாளர்கள் அந்தக் கோவிலை பிற்காலத்தில் ஆய்வு செய்தபோது, இரண்டாவது பிரகாரத்தில் இருந்து கிழக்கு கோபுரத்துக்கு செல்லும் வழியில் ஒரு தூண் இருப்பதையும் அதில் கல்வெட்டு செய்திகள் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அந்தக் கல்வெட்டுதான், கோவிலின் பூர்வகால சரித்திரத்தை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக அமைந்தது.

சதுர வடிவிலான அந்தத் தூணின் நான்கு பக்கமும் வாசகங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

1186-ம் ஆண்டில் அந்தக் கல்வெட்டு வைக்கப்பட்டதாக அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக் கல்வெட்டில் காணப்படும் வாசகங்கள் பிரமிப்பை அளிக்கின்றன. மன்னரின் புகழை ஓங்கி உயர்த்திக் கூற வேண்டும் என்பதற்காக சில தகவல்கள் மிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டை எழுப்பும் வண்ணம் அந்த தகவல்கள் இருக்கின்றன.

தா புரோம் கோவிலை நிர்வகிப்பதற்காக 3,140 கிராமங்கள் அமைக்கப்பட்டு இருந்தது என்றும், கோவில் பணியில் 79 ஆயிரத்து 365 பேர் பயன்படுத்தப்பட்டனர் என்றும், இவர்களிடம் வேலை வாங்க 2,740 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர் என்றும் கல்வெட்டில் காணப்படுகிறது.

மலைக்கவைக்கும் இந்த புள்ளி விவரம் பற்றிய விலாவாரியான தகவலையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அந்தக் கோவிலில் தலைமை புத்த குருக்களாக 18 பேரும், 2,204 உதவியாளர்களும், 615 நடனப் பெண்களும் இருந்தனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

தா புரோம் கோவிலில் 5 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்கப் பாத்திரங்கள், அதே அளவு எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள், 35 கிலோ எடையுள்ள வைர வைடூரியங்கள், சீனத்து பட்டுத் துணியால் செய்யப்பட்ட 512 சொகுசு படுக்கைகள், 876 பட்டு ஆடைகள், 524 வெண்கொற்றக் குடைகள் போன்றவை இருந்ததாக அந்தக் கல்வெட்டு பட்டியலிட்டு இருக்கிறது.

அங்கோர் நகரில் பொதுமக்களுக்காக 102 இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை உள்பட பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்று கூறும் கல்வெட்டு, அந்த மருத்துவமனைகளில் வைத்து இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பது பற்றியும் விலாவாரியாகத் தெரிவிக்கிறது.

பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணப்படும்போது வழியில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக, மொத்தம் 121 இடங்களில் ஓய்வு இல்லங்கள் அமைக்கப்பட்டு இருந்தன என்பதும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

இந்தக் கோவிலில் பல ஆயிரம் கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது என்ற கல்வெட்டு செய்தி உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

பாழ்பட்டுக் கிடந்த தா புரோம் கோவிலை செப்பனிடும் பணியை மேற்கொள்வது என்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு 2004-ம் ஆண்டு முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கே முகாமிட்டு மூன்று கட்டங்களாக நிவாரண பணிகளை செய்தனர்.

தா புரோம் கோவிலின் நடுநாயகமான ஒரு மண்டபம், ‘நடன அறை’ என்று அழைக்கப்படுகிறது.

அந்த மண்டபம் தான் மிக அதிக அளவிலான சேதத்தை சந்தித்து முற்றிலும் இடிந்து கற் குவியலாகக் காணப்பட்டது.

அந்த மண்டபத்தை, பழைய காலத்தில் இருந்தது போன்ற அழகிய ரூபத்துக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

2012-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி, அந்த மண்டபத்தில் கிடந்த இடிபாடுகளை இந்திய அதிகாரிகள் அகற்றியபோது, அங்கே ஒரு தங்கப் புதையலைக் கண்டனர்.

மன்னர்கள் தலையில் அணியும் தங்கக் கிரீடத்தின் ஒரு பகுதி அங்கே மணலில் புதைந்து இருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.

தா புரோம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கிரீடம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது, மன்னர் அணியும் கிரீடத்தின் ஒரு பகுதி என்றாலும், சேதம் அடையாமல் இருந்தது வியப்பை அளித்தது.

100 கிராம் எடை கொண்ட அந்த தங்கக் கிரீடம், அழகிய வேலைப் பாடுடன் காட்சி அளிக்கிறது. இந்த கிரீடம் முறைப்படி கம்போடிய அதி காரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த கிரீடத்தின் காலம் என்ன என்பதைக் கண்டறிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கோரில் உள்ள கோவில்கள் பல ஆண்டுகளாக கவனிப்பார் யாரும் இன்றி கைவிடப்பட்டதால், கலைப் பொக்கிஷங்களை வேட்டையாடுபவர்களுக்கு அவை சொர்க்க பூமி ஆகிவிட்டன.

இவை எல்லாவற்றையும்விட, தா புரோம் கோவிலில் தான் மிக அதிக அளவிலான விலை உயர்ந்த பொருட்களும், சிற்பங்களும் கொள்ளையடிக்கப்பட்டன என்பது கம்போடியா அரசு வெளியிட்ட தகவல்.

இவ்வாறு கொள்ளையடிக்க வந்தவர்கள், அள்ளிக்கொண்டு போன பொருட்களில் இருந்து எப்படியோ இந்த தங்கக் கிரீடம் தவறி விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தா புரோம் கோவிலின் பெரும் பகுதி இடிந்து தரை மட்டமாகக் கிடக்கிறது என்ற போதிலும், கண்களைக் கவரும் ஏராளமான சிற்பங்கள் அங்கே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அவற்றில் ஒரு சிற்பம் உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

தா புரோம் கோவிலில் உள்ள பல கதவுகளின் அருகே அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஒரு கதவு அருகே உள்ள சிற்ப தொகுதியில் ஆடு, மான், தண்ணீரில் வசிக்கும் பெரிய எருது, கிளிகள், அன்னப் பறவை ஆகியவற்றுடன் காணப்படும் சிற்பம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலகில் வாழ்ந்த டயனோசரஸ் என்ற ராட்சத மிருக குடும்பத்தைச் சேர்ந்த ‘ஸ்டெகோசரஸ்’ என்ற மிருகத்தின் சிற்பம் அங்கே அழகாகக் காட்சி அளிக்கிறது.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் டயனோசரஸ் என்ற மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதே சில நூறு ஆண்டுகளுக்கு முன் தான் தெரியவந்து இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில், அந்த மிருகத்தின் சிற்பத்தை தா புரோம் கோவிலில் அமைத்தது எப்படி என்பது மிகப்பெரிய ஆச்சரிய வினாவாக உயர்ந்து நிற்கிறது.

மற்ற கோவில்களில் இருந்து வித்தியாசமாக, தரை மட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் 39 கோபுரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரும் பகுதி இடிந்து கிடப்பதால் அந்தக் கோபுரங்களில் ஏறிப் பார்க்க பொது மக்களுக்கு இப்போது அனுமதி வழங்குவது இல்லை.

இந்தக் கோவில், ‘கல்வியின் முழுமையான இருப்பிடம்’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதால், இது மாணவர்களின் பல்கலைக்கழகமாக செயல்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மன்னர் 7-ம் ஜெயவர்மன் தனது தாயார் ஜெயராஜ சூடாமணியின் நினைவாக இந்தக் கோவிலைக் கட்டி இருக்கிறார்.

கோவிலின் தென் பகுதியில் மன்னரின் குரு ஜெயமங்களார்த்தருக்கும், வட பகுதியில் மன்னரின் சகோதரர் ஜெயகீர்த்திக்கும் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

கோவிலின் மத்தியில் 30 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ‘நடன மண்டபம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த மண்டபத்தின் சுவர்களில் தேவ மாதர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் உள்ளன.

இந்த மண்டபம் கேளிக்கைக்கானது அல்ல என்றும், இங்கே கோவில் பூஜைகள் தொடர்பான நடனங்கள் நடைபெற்று இருக்கலாம் என்றும், மற்ற சமயங்களில் புத்தமத குருக்கள் அமர்ந்து தியானம் செய்யும் மண்டபமாக அவை இருந்து இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கோவிலின் பிரகார சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன.

கவுதம புத்தர், வாழ்வின் உண்மையைத் தேடி, அரண்மனையில் இருந்து இரவோடு இரவாக புறப்பட்டுச் செல்லும் போது, அவரது குதிரையின் காலடிச் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தக் குதிரையின் கால் குளம்புகளை தேவ கணங்கள் தங்கள் கைகளால் தாங்கிப் பிடித்துச் செல்வது போன்ற அழகிய சிற்பம் அனைவரையும் கவரும் வகையில் காணப்படுகிறது.

மன்னர் 7-ம் ஜெயவர்மன் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால், தா புரோம் கோவிலில் பல இடங்களிலும் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த 8-ம் ஜெயவர்மன் என்ற மன்னர், இந்து மதத்தைப் போற்றினார். அவர் புத்த மதத்தை கடுமையாக எதிர்த்தார்.

இதனால், தா புரோம் கோவிலில் இருந்த ஏராளமான புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கோவிலுக்குச் செல்லும் வழியில் இரண்டு புறமும் இருந்த புத்தர் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதை இப்போது சென்றாலும் காணமுடியும்.

கோவில் பிரகார சுவரில் இருந்த புத்தர் தொடர்பான சிற்பங்களும் தோண்டி எடுக்கப்பட்டு விட்டன.

அங்கோரில் உள்ள கோவில்கள், மற்றும் அந்த நாட்டின் வரலாறு பற்றி அறியும் போது, அந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களின் பெயர்களும் ‘வர்மன்’ என்ற அடை மொழியைத் தாங்கி இருப்பது பலருக்கு வியப்பை அளிக்கலாம்.

அந்தப் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் போல ஒலிப்பதால், அந்த மன்னர்கள் அனைவரும் யார்? அவர்கள் தமிழர்களா? என்ற வினாக்கள் பலரது மனதில் முளை விட்டு இருக்கும்.

கம்போடியாவில் உள்ள கோவில்களையும், அவற்றில் உள்ள அற்புதமான சிற்பங்களின் மகிமைகளையும் பார்க்கும் அதே சமயம், அங்கே பல நூறு ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர்களின் பெயரில் ‘வர்மன்’ என்ற அடை மொழி ஒட்டிக் கொண்டது எவ்வாறு என்பதை அடுத்து பார்க்கலாம்.


இந்தியாவில், அங்கோர் வாட் கோவில் கட்டுவதற்கு நடந்த முயற்சி

உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் போல அச்சு அசலாக ஒரு கோவிலை இந்தியாவில் கட்டுவதற்கு 2012-ம் ஆண்டு முயற்சி நடந்தது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹாஜிபூர் அருகே, 25 ஏக்கர் பரப்பளவில், 2,500 அடி நீளம், 1,296 அடி அகலம், 379 அடி உயரம் கொண்ட ஒரு கோவிலை, ரூ.500 கோடி செலவில் அங்கோர் வாட் கோவில் போன்ற வடிவத்தில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பீகார் மஹாவீர் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பு சார்பாக இதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்றன.

இது பற்றிய தகவல் கம்போடியா நாட்டு அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு, அங்கோர் வாட் கோவில் வடிவத்தில் மற்றொரு கோவிலை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு மார்ச் மாதம், பீகார் மஹாவீர் மந்திர் டிரஸ்ட் அதிகாரிகளிடம் அங்கோர் வாட் கோவில் கட்டும் முயற்சியை கைவிடும்படி வற்புறுத்தினார்.

அதன் பிறகே இந்தியாவில் அங்கோர் வாட் கோவில் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த தகவலை நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே கம்போடியா அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


(ஆச்சரியம் தொடரும்)

மேலும் செய்திகள்