புதன் கிரகத்தை நோக்கிய பயணம்

அமெரிக்காவின் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘மெசஞ்சர்’ விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

Update: 2019-06-29 15:05 GMT
புதன் கிரகத்தை நோக்கித்தான் ‘மெசஞ்சர்’ ஏவப்பட்டது. சுமார் 800 கோடி கி.மீ. தூரத்துக்கு நீண்ட நெடிய, சிக்கலான பயணத்துக்குப் பின், 2011 மார்ச்சில் புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது, ‘மெசஞ்சர்’.

ஒரு விண்கலம், புதனின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது அப்போதுதான் முதல்முறை.

நமது பூமியின் துணைக்கோளான நிலவைவிடச் சற்றே பெரிது, புதன். சூரியக் குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகமான புதன், சூரியனுக்கு மிகவும் நெருக்கமானதும் கூட.

ஆரம்பத்தில் ஓராண்டு மட்டுமே செயல்படும் என்று கூறப்பட்ட மெசஞ்சர் விண்கலம், நான்காண்டுகள் வரை புதனின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்தது.

சூரியக் கதிர்களால் உலர்ந்து போயிருந்த புதன் நிலப் பரப்பை அலசி ஆராய்ந்த மெசஞ்சர், அதன் காந்தப்புலம், வளியமைப்பு குறித்த சுமார் 2.70 லட்சம் படங்களையும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவைத்தது.

புதன் நிலப்பரப்பில் காணப்பட்ட குடைவரைகள், முற்காலத்தில் அங்கு எரிமலைக்குழம்பு ஓடியதற்கான தடம், அதன் துருவப் பகுதிகளில் காணப்பட்ட பனிப்படிவு ஆகியவற்றையும் மெசஞ்சர் கண்டுபிடித்துச் சொன்னது.

எரிபொருள் தீர்ந்துவிட்ட நிலையில், 2015-ம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று புதன் நிலப்பரப்பில் மோதி அழிந்தது, முன்னோடி விண்கலமான மெசஞ்சர்.

மேலும் செய்திகள்