கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்

அபிநயா வாங்கிய திரைப்பட வெற்றி விழா கேடயங்களைப் பார்த்தபடி காபியை ருசித்துக்கொண்டிருந்தார் ராஜராஜன்.

Update: 2019-07-07 07:25 GMT
முன்கதை சுருக்கம்:

பிரபல நடிகை அபிநயா தான் காதலித்த விக்டரிடம் 10 கோடி ரூபாய் வாங்கி படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடுகிறாள். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாக, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இதற்கிடையே அமுதாவை திருமணம் செய்யவிருக்கும் கார்த்திகேயன், அவளது தந்தை சுந்தரமூர்த்தி சிறையில் இருப்பதை அறிந்து திருமணத்தை நிறுத்தி விடுகிறான்.

சுந்தரமூர்த்திக்கு ராஜி என்ற பெண்ணுடன் ரகசிய தொடர்பு ஏற்படுகிறது. அவளுடைய மகள்தான் அபிநயா என்பதும், சுந்தரமூர்த்தி ஜெயிலுக்கு செல்ல அபிநயாதான் காரணம் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வருகிறது.அபிநயாவின் தந்தை குடித்துவிட்டு வந்து ராஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தபோது அபிநயா அதை பிடுங்கி அவரை குத்தி கொலைசெய்து விடுகிறாள். அந்த விஷயம் போலீசுக்கு தெரிந்து, சுந்தரமூர்த்தி கைது செய்யப்படுகிறார். அவர் கத்தியை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அவரது மகன் ஆனந்தன் சென்று கத்தியை எடுக்கிறான். பிறகு அந்த கத்தியுடன் அபிநயாவை நேரில் சந்தித்து போலீசில் சரணடையுமாறு மிரட்டுகிறான். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க அபிநயா நிருபர் ராஜராஜனை நாடுகிறாள்.

பிநயா வாங்கிய திரைப்பட வெற்றி விழா கேடயங்களைப் பார்த்தபடி காபியை ருசித்துக்கொண்டிருந்தார் ராஜராஜன்.

ஜிம் அறைக்கு வரச் சொல்லப்பட்டதும் எழுந்து நடந்தார்.

வாக்கரில் வியர்க்க வியர்க்க நடந்தபடியிருந்தாள் அபிநயா.

‘‘வாங்க ராஜராஜன் சார். பேசினீங்களா? உங்களை சந்திக்க சம்மதிச்சானா ஆனந்தன்?’’

‘‘ஆமாம் அபி. இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு ஒரு காபி ஷாப்ல சந்திக்கிறதா பேசிருக்கோம். அவன்கிட்ட நான் என்னபேசணும்னு இன்னும் நீ சொல்லலையேம்மா’’

‘‘அதுக்குதானே வரச் சொல்லிருக்கேன்.’’ என்றவள் இயந்திரத்தை நிறுத்தி கீழே இறங்கினாள். டவலால் வியர்வையைத் துடைத்தபடி ஒரு சேரில் அமர்ந்து அவரையும் எதிர் சேரில் அமரச் சொல்லி கை காட்டினாள்.

அவளே பேசட்டும் என்று காத்திருந்தார்.

‘‘உங்களை நான் ஒண்ணு கேக்கட்டுமா சார்? அதுக்கு நீங்க ஒளிவு மறைவு இல்லாம உண்மையை மட்டும்தான் சொல்லணும்’’

‘‘என்னம்மா பெருசா பீடிகை போடறீயே.. என்ன, சொல்லு. உங்கிட்ட மறைச்சா என்னாகும்னுதான் செயல்ல காட்டிட்டியே..’’

‘‘இப்ப உங்க வீட்ல இருக்கறது உங்க இரண்டாம் மனைவி தானே ராஜராஜன் சார்?’’

‘‘ஆமாம்’’

‘‘முதல் மனைவி இறந்தது எப்போ?’’

‘‘அது இருக்கும் இருபது வருஷம்!’’

‘‘அவங்க எப்படி இறந்தாங்க?’’

‘‘வயித்து வலி. ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போறதுக்குள்ள முடிஞ்சிடுச்சி. எதுக்கு அபி இதைப்போயி இப்ப கேக்கறே?’’

‘‘உங்களுக்கு இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தெரியுமா?’’

‘‘ஆமாம். கேள்விப்பட்டிருக்கேன்’’

‘‘அவர் இப்போ ரிட்டயராகிட்டார். அவருக்குப் பொழுது போகலை. சினிமால நடிக்கணும்னு ஆசை. என்னை சந்திச்சி சான்ஸ் கேட்டார். அப்போ பல விஷயங்கள் பேசிட்டிருந்தோம். உங்க மனைவி சாரதா இறந்தப்போ அவங்க பேரண்ட்ஸ் அது இயற்கையான மரணம் இல்ல.. எங்களுக்கு சந்தேகமா இருக்குன்னு புகார் கொடுத்தாங்களாமே!’’

ராஜராஜன் எச்சில் விழுங்கினார்.

‘‘புதைச்ச பிணத்தை வெளில எடுத்து போஸ்ட் மார்ட்டம் செஞ்சாங்களாமே.. அப்போ அந்த வழக்கை விசாரிச்சவர் அந்த வேலாயுதம்தானே? ஜஸ்ட் ஐக் தட் கேள்விப்பட்டிருக்கேன்னு சொல்லிட்டிங்களே!’’

‘‘ஆமாம். மறந்துட்டேன். இப்ப நினைவுக்கு வந்துடுச்சி. இப்ப எதுக்காக இதெல்லாம் பேசறோம்னு எனக்குப் புரியலையே!’’

‘‘நிஜமா சொல்லுங்க ராஜராஜன் சார். அது இயற்கையான மரணம்தானா?’’

‘‘ஆமாம். அதுல என்ன சந்தேகம்? அப்படிதானே இன்ஸ்பெக்டரும் சர்ட்டிபிகேட் குடுத்தார்?’’ என்று ராஜன் சொன்னாலும் சட்டென்று அவர் நெற்றியில் பூத்த வியர்வையை அவரால் மறைக்க இயலவில்லை.

‘‘தாம்பரம் பக்கத்துல நீங்க வாங்கிப் போட்டிருந்த நிலத்தை இன்ஸ்பெக்டர் வேலாயுதம் பொண்ணு பேர்ல மாத்திக் குடுத்தப்புறம்தானே அப்படி சர்ட்டிபிகேட் குடுத்தார்?’’ என்று அபிநயா அவர் முகத்தைப் பார்த்து நேரடியாகக் கேட்டதும் திடுக்கிட்டார் ராஜன்.

‘‘அபி!’’

‘‘அதிர்ச்சியா இருக்கா சார்? நீங்க வேணும்னே உங்க மனைவியை கொலை செய்யலை. குடும்ப சண்டை. வார்த்தை வலுத்தப்போ அறைஞ்சிங்க. போய் விழுந்தவ சுவத்துல தலை முட்டி இறந்துட்டா. பாவம் நீங்க என்ன செய்வீங்க?’’

‘‘இதெல்லாம்?’’ என்று பீதியுடன் கேட்டார் ராஜராஜன்.

‘‘வேலாயுதம் எங்கிட்ட சொன்னார். தேவைப்பட்டா அந்த வழக்கை மறுபடி திறக்கவும் முடியுமாமே. பயப்படாதீங்க. அப்படி நான் செய்றதா இல்லை. எதுக்கு இதைச் சொன்னேன்னா.. இந்த சமூகத்துல பல கொலைகள் திட்டமிடாம திடீர்னு ஒரு விபத்து மாதிரி நடந்துடும். ஆனா அதோட விளைவுகள் ஒரு தலைமுறையையேப் பாதிச்சிடும். இல்லையா?’’

‘‘ஆமாம்.’’ என்றார் கண்களில் நீர்த் துளிர்க்க, ‘‘சாரதாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்பப்ப சின்ன சின்னதா வாக்குவாதம் வரும். மத்தபடி அவளுக்கும் என்மேல பிரியம்தான். அன்னைக்கு நடந்தது நீ சொன்னமாதிரி ஒரு விபத்துதான். ஆனா சட்டப்படி தப்பாச்சே. சந்தர்ப்ப சூழ்நிலைக்காக சலுகை குடுத்துடுமா என்ன? அதனாலதான் மறைக்க வேண்டியதாப் போச்சி.’’

‘‘தப்பில்லை சார். இந்த மாதிரி மறைக்கப்பட்ட கொலைகள் ஒண்ணு ரெண்டு இல்லை. எத்தனைன்ற கணக்கு காவல்துறை அதிகாரிகளுக்குதான் தெரியும்.’’ என்ற அபிநயா எழுந்து சற்றுத் தள்ளி ஒரு மேஜை மீது நிறுத்தி வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் அமர்ந்தாள்.

‘‘ராஜராஜன் சார். இப்ப நீங்களும் நானும் பேசுனதெல்லாம் இதுல வீடியோப் பதிவா எடுத்துருக்கேன்’’

‘‘அபிநயா! என்ன இதெல்லாம்?’’ என்று அதிர்ந்தார் ராஜராஜன்.

‘‘பயப்பட வேணாம். இந்த நிமிஷத்திலேருந்து நீங்க என் பொம்மை. என் கை அசைவுல கயிறு ஆடும். அந்த அசைவுக்குத் தகுந்தபடிதான் இனி ராஜராஜன் சார்ன்ற பொம்மை இயங்கும். தெளிவா புரிஞ்சிதா? மாறி சொந்தமா ஆடணும்னு நினைச்சா.. ராஜன் சார் ஜெயிலுக்குப் போயிடுவார்’’

‘‘இதெல்லாம் எதுக்கு? நான்தான் மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுட்டேனே.. அது மட்டுமில்லாம உன் கோபத்துக்கு வடிகாலா என்னை ஆள் வெச்சி உண்டு இல்லைன்னு பண்ணிட்டே. அப்படியும் உன் ஆத்திரம் அடங்கலயா?’’

‘‘இல்லை சார். உங்களை எப்பவோ மன்னிச்சிட்டேன். இது ஒரு சேப்ட்டிக்கு. இப்ப நான் சொல்லப்போற ஒரு உண்மையை நீங்க உங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திடக்கூடாது பாருங்க.. அதுக்குதான்.’’

‘‘உண்மையா? என்ன உண்மை?’’

‘‘சில வருஷங்களுக்கு முன்னால என் ஓடிப்போன அப்பா திரும்பி வந்து எங்கம்மாவை பணம் கேட்டு மிரட்டி கொலை செய்யப்பட்டாரே.. நினைவிருக்கா சார்?’’

‘‘உங்க அம்மாவோட மேனேஜர் அதுக்காக ஜெயிலுக்குப் போனதுகூட நினைவிருக்கே. பரபரப்பான வழக்காச்சே அது!’’

‘‘அந்த வழக்குலயும் ஒரு உண்மை புதைஞ்சிருக்கு சார். அன்னைக்கு எங்கம்மா உயிரைக் காப்பாத்த வேற வழி இல்லாம ஒரு கத்தியால அந்தாளைக் குத்துனது நான்தான். ஆனா அந்தப் பழியை ஏத்துக்கிட்டு ஜெயில்ல இருக்கறது சுந்தரமூர்த்தி’’ என்று தொடங்கிய அபிநயா அத்தனையையும் சொல்லி.. தற்போது ஆனந்தன் தனக்கு விதித்திருக்கும் நிபந்தனையையும் சொல்லி முடித்தாள்.

‘‘இவ்வளவு நடந்திருக்கா? நடந்ததென்னவோ நடந்து போச்சி. அந்தாளும் தண்டனை அனுபவிச்சிட்டார். விடுதலையும் ஆகப் போறார். இப்பப்போய் எதுக்கு அதைக் கிளறணும்? ஆனந்தன் தங்கச்சிக்கு வேற நல்ல மாப்பிள்ளையை நீயே செலக்ட் செஞ்சி கல்யாணம் செஞ்சி வைக்க மாட்டியா என்ன?’’

‘‘அதெல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு. அவனுக்கு நியாயம்தான் வேணுமாம். நீதிதான் வேணுமாம். என் கைரேகை படிஞ்ச அந்தக்கத்தியை அன்னைக்கு சுந்தரமூர்த்தி பேசுனபடி கடல்ல தூக்கி வீசியிருந்தா இப்போ இவன் என்னை மிரட்டவே முடியாது. அந்தக் கத்திதான் என்னை பயமுறுத்துது.’’

‘‘வாஸ்தவம்தான்’’

‘‘ராஜராஜன் சார்.. நீங்க இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணப் போறீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா.. எனக்கு அந்த ஆனந்தன் சமாதானமாகணும். இல்லைன்னா அவன்கிட்ட இருக்கற என்னை மாட்டிவைக்கிற அந்தக் கத்தி என் கைக்கு வரணும். இதை நான் நேரடியா இறங்கி செய்ய முடியாதுல்ல? அதனாலதான் உங்களை செலக்ட் செஞ்சேன். எப்படி செய்யப் போறீங்க?’’

‘‘எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லிருக்கே.. இன்னும் என்னால அந்த அதிர்ச்சிலேருந்தே வெளில வர முடியலை. இரும்மா.. யோசிக்கலாம்’’ என்றார் ராஜராஜன்.

***

அந்த காபி ஷாப்பில் நாற்காலிகள் அதிகமாகவும், மனிதர்கள் குறைவாகவும் இருக்க.. சொன்ன நேரத்திற்கு வந்துவிட்ட ஆனந்தன் பொறுமையாகக் காத்திருந்தான்.

சற்றுத் தாமதமாக உள்ளே நுழைந்து அவனருகில் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு எதிரில் அமர்ந்தார் ராஜராஜன். அறிமுகங்கள் முடிந்து, காபி ஆர்டர் செய்ததும், ‘‘என்ன சார்.. என்ன பேசணும்?’’ என்றான் ஆனந்தன்.

‘‘ஆனந்தன்.. நீங்க நடிகை அபிநயாவால ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி.. அபிநயாவால நானும் பாதிக்கப்பட்டவன். எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா? அதனால அபிநயாவைப் பழி வங்கறதுல உங்களோட கூட்டணி அமைச்சு செயல்படலாம்னு நினைச்சு வந்திருக்கேன்.’’

‘‘இருங்க. நான் அபிநயாவால பாதிக்கப்பட்டவன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘‘நான் பத்திரிகை நிருபர் ஆனந்தன். காத்து மாதிரி. எங்கயும் இருப்பேன்.’’ என்ற ராஜராஜனை நம்புவதா வேண்டாமா என்று யோசித்தான் ஆனந்தன்.

-தொடரும்

மேலும் செய்திகள்