அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 56% சரிவு

ஜூன் மாதத்தில், அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 56 சதவீதம் சரிவடைந்து 1.15 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது.

Update: 2019-07-09 08:11 GMT
பருத்தி விதை

எள், கடுகு, பருத்தி விதை, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கும் புண்ணாக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) ரூ.6,222 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.4,762 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்து 32 லட்சம் டன்னாக இருக்கிறது. தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்ததே இதற்கு காரணமாகும்.

நடப்பு ஆண்டு மே மாதத்தில் 58,549 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது. ஜூன் மாதத்தில் 1.15 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 56 சதவீதம் குறைவாகும்.

ஜூன் மாதத்தில், 18,185 டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது. இது 83 சதவீதம் சரிவாகும்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல், மே), ஒட்டுமொத்த அளவில் புண்ணாக்கு ஏற்றுமதி 24 சதவீதம் குறைந்து 5.71 லட்சம் டன்னாக உள்ளது.

சோயாபீன்

உலக அளவில், சோயாபீன் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆசியாவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில் சோயாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேசம் முன்னணியில் உள்ளது.

மேலும் செய்திகள்