தினம் ஒரு தகவல் : வர்த்தக பற்றாக்குறையை தீர்மானிக்கும் தங்கம்

தங்கநகைகளுக்கு உலகிலேயே பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது என்பது அறிந்ததே. இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது.

Update: 2019-08-05 05:19 GMT
உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் எப்போதும் புதிய டிசைன் நகைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தங்கத்துக்கான தேவையின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதில், பெருமைக்காக தங்க நகை வாங்குவது ஒரு முக்கிய காரணம். 50 சதவீதத்துக்கு அதிகமான நகைகள் திருமணத்துக்காக வாங்கப்படுகின்றன. எப்போதுமே தீபாவளியை ஒட்டிய பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் விற்பனை சூடு பிடிக்கிறது.

தங்கம் வாங்குவதை தூண்டுவதற்கு அதன் மதிப்பும் ஒரு முக்கிய காரணம். அதாவது ஒரு சொத்தைப் பாதுகாக்கும் உணர்வு, தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

முக்கியமாக, தங்கத்தையும், இந்திய திருமணங்களையும் பிரிக்க முடியாது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 15 கோடி திருமணங்கள் நடைபெறும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, திருமணங்கள் காரணமாக நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 500 டன் தங்க நகை விற்பனை நடைபெறும். குடும்பங்களிடையே அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் தங்க நகை மூலம் மேலும் 500 டன் தங்கம் விற்பனையாகும்.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி) அதிகரிக்க தங்க இறக்குமதி ஒரு முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் இறக்குமதி தொடர்ந்து கூடிக்கொண்டே போவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. அதன் மூலம் வர்த்தக பற்றாக்குறை ஏற்படும். நடப்பு வர்த்தகப் பற்றாக்குறை ‘சாதனை அளவாக’ 78.2 பில்லியன் ஆகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் பார்த்தால் 4.2 சதவீதம். தங்க இறக்குமதியைக் குறைப்பதற்காகவே அதற்கான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.

ஆக, நமது தங்க மோகம், நாட்டின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கும் வல்லுனர்களை நிறைய யோசிக்க வைக்கிறது.

மேலும் செய்திகள்