மரங்களின் ‘காவலர்’

‘‘மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு. ஆனால் இதை மனிதர்கள் மறந்துவிடுவதுண்டு. அதனால்தான், மரங்களை காயப்படுத்துகிறார்கள். விளம்பர பலகைகளை மரத்தில் தொங்கவிடுவதாக நினைத்து, இரும்பு ஆணிகளை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் மரத்தை சிதைக்கிறார்கள்.

Update: 2019-09-14 02:15 GMT
விளம்பர பலகைகள் ஒருசில மாதங்களில் விழுந்துவிடும். ஆனால் மரங்களை துளைத்தெடுத்த ஆணிகள், அதிலேயே தங்கிவிடுவதோடு, துருப்பிடித்து மக்கி விழும்வரை மரத்தை ரணப்படுத்தி கொண்டே இருக்கும். அதற்கு வலி நிவாரணி கொடுப்பதே என்னுடைய வேலை’’ என விறுவிறுப்பாக பேசுகிறார், சுபாஷ் சீனிவாசன்.

தமிழ்நாடு காவல்துறையில், 22 ஆண்டுகளாக பணியாற்றிவரும் இவர், காயப்பட்ட மரங்களுக்கு வைத்தியமும் பார்க்கிறார். பணி நேரத்தில் பொறுப்பான காவலராகவும், ஓய்வுநேரத்தில் மரங்களின் காவலராகவும் வலம் வரும் சுபாஷிடம் விளக்கமாக பேசுவோம்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலைகிராமம், என்னுடைய சொந்த ஊர். அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து, 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில், பணிக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில் மதுரை சிறப்பு காவல் படையிலும், பிறகு சிவகங்கை ஆயுதப்படையிலும் பணியாற்றினேன். எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவிலும், பணியாற்றியிருக்கிறேன். 2017-ம் ஆண்டு தேவக்கோட்டையில், போக்குவரத்து காவலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான், மரங்களை நேசிக்க தொடங்கினேன். போக்குவரத்து காவலர் என்பதால், சாலைகளில் அதிகமாக சுற்றிவர முடிந்தது. அந்தசமயங்களில்தான், மரங்கள் அனுபவிக்கும் வேதனையை உணர முடிந்தது. சாலையோர மரங்களை விளம்பரம் என்ற பெயரில், ஆணிகளால் துளைத்தெடுத்திருந்தனர். கூடவே, புதுப்புது விளம்பர பதாகைகளுக்கென தினந்தினம் மரங்களை ஆணிகளால் துன்புறுத்தி கொண்டிருந்தனர். இதை கண்கூடாக பார்த்தபோதுதான், மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை பிடுங்க ஆரம்பித்தேன்.

* எத்தனை வருடங்களாக இந்த பணியை தொடர்கிறீர்கள்?

2017-ம் ஆண்டுதான் தொடங்கினேன். முதலில் தேவக்கோட்டை பகுதியை சுற்றியிருக்கும் மரங்களை கண் காணித்து, அதில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்ற ஆரம்பித்தேன். பணிநேரம் போக, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம், ஆணிகளை அகற்றுவதோடு, பணிமுடித்து வீட்டிற்கு சென்ற பிறகும், தனிகவனம் செலுத்தினேன்.

* மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது மிகவும் சாதாரண பணி. அதில் நீங்கள் முழுமுனைப்போடு செயல்படுவது எப்படி?

மனிதர்களுக்கு, ஒவ்வொரு பொருட்களின் மீது தனிப்பிரியம் இருக்கும். சிலர் செல்லப்பிராணிகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். சிலர் கார்-பைக்குகளை வாங்கி, பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். சிலருக்கு சுற்றுலா செல்வது பிடித்தமானதாக இருக்கும். மரங்களை ரசிப்பதும், மரங்களை காயப்படுத்தும் ஆணிகளை அகற்றுவதும் என்னுடைய ஆர்வமாக இருக்கிறது. இதை பிடிவாத குணம், பிரியமான மனம், அன்றாட வழக்கம், மாற்றமுடியாத பழக்கம்... என எப்படிவேண்டுமானாலும் கூறலாம்.

* உங்களுடைய ஒருநாள் பொழுது எப்படி கழிகிறது. அதுபற்றி விளக்கமாக கூறுங்கள்?

பொதுவாக அதிகாலை எழுந்து, நடைப் பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். நான் அதிகாலை எழுந்ததும், நடைப்பயிற்சியோடு ஆணிகளை அகற்றும் பணியையும் செய்கிறேன். காலையில் 2 மணி நேரம், இதற்காகவே ஒதுக்கிவிடுவேன். பிறகு காவல் பணிக்கு சென்றுவிட்டு, மாலை அல்லது இரவு வீடு திரும்பியதும், மீண்டும் ஆணிகளை அகற்றும் பணிக்கு கிளம்பிவிடுவேன். மாலை நேரம் என்பதால், பள்ளிக்கு சென்று திரும்பிய என்னுடைய மகன்களும், என்னுடன் வருவார்கள். இதுபோக விடுமுறை நாட்களில், என்னுடைய காரில் ஏணியை கட்டிக்கொண்டு, நானும் என் மகன்களும் கிளம்பிவிடுவோம். ஊர்ப்புறங்களில் இருக்கும் மரங் களிலும், நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங் களிலும் இருக்கும் ஆணிகளை அகற்றிவிட்டு, வீடு திரும்புவோம்.

* உங்களுடைய சேவைக்கு, சுதந்திர தின விழாவில் கலெக்டரின் பாராட்டும், சான்றிதழும் கிடைத்திருப்பது பற்றி?

என் மன நிறைவுக்காக தொடங்கிய சேவை இது. இதற்கு கலெக்டரின் பாராட்டும், சான்றிதழும் கிடைக்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில், சிறப்பாக சேவையாற்றிய காவலர்களுடன், என்னுடைய சேவைக்கு அங்கீகாரம் கொடுத்தனர். இந்த ஊக்கம், என்னை மென்மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

* இந்த சேவையின் மூலம் உங்களுக்கு கிடைத்த நிறைவான மனநிறைவு என்றால் எதை குறிப்பிடுவீர்கள்?

தேவக்கோட்டையில்தான், இந்த சேவையை தொடங்கினேன். இன்று தேவக்கோட்டையை சுற்றியிருக்கும் மரங்கள் அனைத்தும், ஆணி இன்றி சுத்தமாகிவிட்டன. மேலும் அடிக்கடி விளம்பர பதாகைகளை தொங்கவிடும் கடை மற்றும் ஓட்டல்களுக்கு நேரடியாக சென்று, அதை தவிர்க்கும்படி கூறியதால், அவர்களும் மரங்களை துன்புறுத்துவதை நிறுத்திவிட்டனர். விளம்பர பதாகைகளுக்கு பதிலாக, விசிட்டிங் கார்டுகளை கொடுத்து, விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். தற்போது ராமநாதபுரத்தில் பணியாற்றி வருவதால், ராமநாதபுரத்தை சுற்றியிருக்கும் மரங்களும், ஆணி காயங்கள் இன்றி சுத்தமாகி வருகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. வெகுவிரைவில், தேவக்கோட்டையை அடுத்து, ராமநாதபுரமும் முழுமையாக சுத்தமாகிவிடும். இதையே, என்னுடைய சேவைக்கான மனநிறைவாக கருதுகிறேன்.

* ஒரு சாதாரண ஆணி, மரங்களை என்ன செய்துவிடப் போகிறது?

மரத்திற்கும், உயிர் இருப்பதை உணர்ந்தால், அந்த சாதாரண ஒரு ஆணி மரத்திற்கு ஏற்படுத்தும் வலியும், வேதனையும் நமக்கு புரியும். ஒன்றல்ல, இரண்டல்ல... ஒரு மரத்தை சுற்றி, 30 முதல் 40 ஆணிகள் அடிக்கப்படுகின்றன. சில இடங்களில், திருக்கு போன்ற அமைப்புடைய பெரிய ஆணிகள் அடிக்கப்படுகின்றன. இதை எல்லா மரங்களாலும், தாங்கி நிற்கமுடியாது. என்னுடைய சேவையில், அதிகமாக ஆணி காயம் உடைய மரங்கள் பட்டுப்போய், வளராமல் நிற்பதை பார்த்திருக்கிறேன். சில ஆணி காயங்கள், மரத்தை துளையிட்ட மாதிரி இருக்கும். அதிலிருந்து இயற்கையாக வடியும் செந்நீர், என்னை வாட்டிவதைத்துவிடும். சில ஆணிகள் துருப் பிடித்து இருக்கும். அதை அகற்றும்போது தூள் தூளாகி உடைந்துவிடும். இந்த சேவையை, சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கியிருந்தால், ஆணி துருப்பிடிப்பதற்கு முன்பாகவே அகற்றியிருக்கலாம், என்ற எண்ணம் தோன்றும்.

* விளம்பர பலகைகளை அகற்றும் போது, ஏதாவது சிரமங்கள், பிரச்சினை கள் ஏற்படுமா?

நான் போலீஸ்காரராக இருப்பதாலும், சில சமயங்களில் போலீஸ் சீருடையில் இந்த சேவையாற்றுவதாலும், எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை. யாரும் என்னை கேள்வி கேட்பதில்லை.

மக்களோடு, மரங்களையும் பாதுகாக்கும் சுபாஷ் சீனிவாசன், தற்போது ராமநாதபுரத்தில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவருக்கு பத்மபிரியாள் என்ற மனைவியும், சுபாஷ் சேதுபதி மற்றும் சுபாஷ் எஸ்.கவின் சேதுபதி ஆகிய இருமகன்களும் உள்ளனர்.

மரத்தில் இருக்கும் ஆணிகளை அகற்றுவதற்காக, கலெக்டரிடம் பாராட்டு பெற்றிருக்கும் இவர், 2013-ம் ஆண்டு வீரதீர விருதும் பெற்றவர். கிணற்றில் தவறி விழுந்தவர்களை, துணிச்சலோடு காப்பாற்றி, அவ்விருது பெற்றிருக்கிறார்.

‘மரங்களில் ஆணி அடித்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்ற சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை, தமிழ்நாடு முழுக்க அமல்படுத்த வேண்டும் என்பதே, இவரது ஆசையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்