திகைப்பூட்டும் திருமண சந்தை

பல்கேரியாவில் ஜிப்ஸி இன மக்கள் ‘திருமணச் சந்தை’ நடத்துகிறார்கள்.

Update: 2019-09-15 03:00 GMT
மிகவும் வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு மண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் சேவையை இந்த திருமண சந்தை செய்துகொண்டிருக்கிறது. இங்கு திருமண வயதை நெருங்கும் இளம் பெண்கள், இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆஜராகிறார்கள்.

இந்த திருமண சந்தையில் வீட்டு பெரியவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான மணமக்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே அவர்கள் நிதானமாக அமர்ந்து உணவுவகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல் வீட்டில் இருந்து அழைத்து வரப்படும் குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் சுற்றுலாவிற்கு செல்லும் மனநிலைக்கு வீட்டு பெரியவர்களும், குழந்தைகளும் மாறிவிடுகிறார்கள்.

அதற்கு மத்தியில் இளம் பெண்களும், இளைஞர்களும் தங்கள் இணையை தேடுகிறார்கள். தங்கள் மனம் கவர்ந்தவர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் தயங்காமல் அவர்களிடம் பேசுகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசி இருவருக்கும் பிடித்துபோனால் தங்கள் குடும்பத்தினரிடம்  சொல்கிறார்கள்.

அதன் பிறகு இரண்டு குடும்பத்தினரும் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அங்கேயே திருமணம் குறித்த இறுதி முடிவையும் எடுத்துவிடுகிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் அழகு, குணாதிசயத்தை பொறுத்து வரதட்சணையை நிர்ணயிக்கிறார்கள். பெண் அழகாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கொடுக்க முன்வருகிறார்கள்.

இந்த திருமண சந்தையில் அழகான பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு போட்டா போட்டியும் நிலவுகிறது. ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டினால் யார் வரதட்சணை அதிகமாக கொடுக்க முன்வருகிறாரோ அந்த மாப்பிள்ளைக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். அங்குள்ள பெரிய குதிரை சந்தை மைதானத்தில் இந்த திருமண சந்தை காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்