‘டெலிபதி’ தகவல் பரிமாற்றம் விரைவில் சாத்தியமாகும்

மூளை-கம்ப்யூட்டரை இணைக்கும் ‘நியூராலிங்க்’ கருவி; ‘நியூராலிங்க்’ கருவியை காதோரமாக பொருத்திக்கொண்டால் போதும் கம்ப்யூட்டருடன் இணைந்து மனித மூளை செயல்படும்.

Update: 2019-09-16 09:03 GMT
‘நியூராலிங்க்’ கருவியை காதோரமாக பொருத்திக்கொண்டால் போதும் கம்ப்யூட்டருடன் இணைந்து மனித மூளை செயல்படும்.
வெறும் கற்பனையாக இருந்த டெலிபதிக்கு கம்ப்யூட்டர் வந்ததும் கொஞ்சம் உயிர்வந்தது. அதையடுத்து, ஆர்டிபீஷியல் இண்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) என்ற துறை வளர்ந்ததும் ‘டெலிபதி’ குறித்த கற்பனைகள் வலுவடைந்தன.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன், மனித மூளையை கம்ப்யூட்டருடன் இணைத்து அதன்மூலம் மனிதர்களின் எண்ணங்களை படிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான அதிநவீன கருவிகளை, தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையில், கம்ப்யூட்டர்-மூளை இடைமுக தொழில்நுட்பத்தின் நன்மைகள் மற்றும் அவை தீய சக்திகளின் கையில் கிடைத்தால் அதனால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் கம்ப்யூட்டர்-மூளை இடைமுகக் கருவி மற்றும் கோடீஸ்வர விஞ்ஞானி இலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’ எனும் கருவி ஆகிய இரண்டும் வருகிற 2040-ம் ஆண்டில் ‘அல்செய்மர்ஸ்’ போன்ற மூளைக் குறைபாடுகளுக்கான சிகிச்சைக்காக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்கிறது இந்த லண்டன் ஆய்வறிக்கை.

அதுமட்டுமல்லாமல், ஒரு இடத்தில் நிஜமான உடலுடன் இல்லாமலேயே, அங்குள்ள உணவை ருசிப்பது, நுகர்வது மற்றும் பார்ப்பது ஆகிய பல உணர்வுகளை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக அனுபவிக்க உதவும் அதிநவீனமான கருவிகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தகைய தொழில்நுட்பங்கள் மக்களின் நினைவுத் திறன் மற்றும் பார்வைத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் என்றும், மேலும் அதன் நீட்சியாக வார்த்தைகளால் பேசாமலேயே எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் டெலிபதியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சாத்தியமாக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

அதன்மூலம் மனிதர்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் தகவல் பரிமாற்றமானது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்பட்டு பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக, ஒரு அழகான இடத்தில் விடுமுறையைக் கழிக்கும் ஒருவர், தாங்கள் பார்க்கும் காட்சிகளை, கேட்கும் ஓசைகளை அல்லது சுவைக்கும் ருசிகளை ஒரு நரம்பியல் அஞ்சலட்டை (Neural postcard) மூலமாக தன்னுடைய நண்பர்களுக்கும் அனுப்பி அவற்றை பகிர்ந்துகொள்ள முடியும். பிரமிப்பூட்டும் இந்த கூற்று உண்மையாக, மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் சில பத்தாண்டுகள் கூட ஆகாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் சாத்தியமானால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுமோ, அதைவிட அதிகமான அளவு தீமைகள், தீய சக்திகள் கையில் இந்த தொழில்நுட்பங்கள் சென்றால் ஏற்படும் என்பதால் இத்தகைய ஆய்வுகளை அரசாங்கங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வறிக்கை.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, மூளை-கம்ப்யூட்டர் இடைமுக தொழில்நுட்பங்கள் உருவான பின்னர் மனிதன் என்றால் என்ன என்பதன் பொருள் என்னவாகும் அல்லது எந்தவிதமாக பாதிக்கப்படும் என்பது குறித்து முழுமையான புரிதல் தற்போது இல்லை. அதாவது, மனித மூளையுடன் இணையும் கம்ப்யூட்டர் சிப் நம்முடைய முடிவு செய்யும் திறனை கட்டுப்படுத்தத் தொடங்கினால், அப்போது நாமும் எந்திரம் என்றுதானே அர்த்தம் என்பதே இந்த ஆய்வறிக்கை முன்வைக்கும் கேள்வி.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் கையில் இருந்தால் இந்த உலகம் மொத்தத்தையும் ஆட்டுவிக்கலாம் என்று யாராவது சொல்லியிருந்தால் ‘போடா பைத்தியக்காரா’ என்றுதான் இந்த உலகம் எள்ளி நகையாடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோலத்தான் மூளை-கம்ப்யூட்டர் இடைமுக கருவிகளும் மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலக்க இருக்கின்றன என்கிறார் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் பொறியியல் பேராசிரியர் கிறிஸ்டபர் டூமாசு.

இலான் மஸ்கின் நியூராலிங்க் கருவியானது கை-கால் செயல் இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டாலும், இறுதியில் ஆர்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் இரண்டறக் கலந்துவிடும் என்கிறார் இலான் மஸ்க்.

இறுதியாக, நம்மில் பலரும் விரும்பி நுகரும் பேஸ்புக் தந்த நிறுவனம் ஒரு மனிதனின் எண்ணங்களை கம்ப்யூட்டர் திரையில் நேரடியாகக் கொண்டுவரும் ஒரு தொழில்நுட்பம் குறித்த விளக்கத்தை சில மாதங்களுக்கு முன்பு நேச்சர் ஆய்விதழில் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது.

சுருக்கமாகச் சொன்னால், தற்போது நாம் அனைவரும் ஸ்மார்ட்போன் மூலமாக அனுபவித்து வரும் அத்தனை வசதிகளையும் ஸ்மார்ட்போன் இல்லாமலேயே, மூளை-கம்ப்யூட்டர் இடைமுக கருவிகள் மூலமாக நேரடியாக தத்ரூபமாக உணரலாம். அதுவும் சில பத்தாண்டுகளில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்