‘வாட்ஸ் அப்’பில் நடக்கும் மீன் வியாபாரம்

‘பெரிய மீன் நிறைய கிடைத்திருக்கிறது. சுத்தப் படுத்தி வெட்டி துண்டுதுண்டாக கொண்டு வரேன்.

Update: 2019-09-22 09:44 GMT
‘பெரிய மீன் நிறைய கிடைத்திருக்கிறது. சுத்தப் படுத்தி வெட்டி துண்டுதுண்டாக கொண்டு வரேன். மசாலாக்களை எல்லாம் அரைத்து ரெடியாக்கிவை..’ என்ற தகவலை வாட்ஸ் அப்பில் மஞ்சு கொடுத்துவிட்டால், அவரது குழுவில் இருக்கும் அனைவரும் மீனை பொரிக்கவும், குழம்புவைக்கவும் மசாலாக்களை தயார் செய்யத்தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த மஞ்சுவின் இயற்பெயர் ஜாஸ்மின். கேரளாவில் பட்டணக்காடு என்ற பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர். இவர் முதலில் கடல் மற்றும் காயல் பகுதிகளில் இருந்து மீனை விலைக்கு வாங்கி, அதை சுத்தப் படுத்தி வீடுவீடாக கொண்டு விற்பனை செய்யும் வேலையை செய்துவந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் தோழிகளில் யாரோ ஒருவர், ‘நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து, அதன் மூலம் விற்பனை செய்தால் ரொம்ப சவுகரியமாக இருக்குமே!’ என்று கூறியிருக்கிறார்.

“அது ரொம்ப சவுகரியமான விஷயம் என்பது எனக்கு தெரிந்தது. அதாவது என் கையில் இருக்கும் மீனை படம் எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டு அதன் விலையையும் குறிப்பிட்டுவிடுவேன். அதை பார்த்து விட்டு யாருக்கெல்லாம் எவ்வளவு தேவையோ அதை வாட்ஸ் அப்பிலே சொல்லிவிடுவார்கள். உடனே அவர்களின் தேவைக்கு தக்கபடி நான் இருசக்கர வாகனத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடுவேன். இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் நிறைய பேர் என் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருக்கிறார்கள். இப்போது 500 வீடுகளுக்கு மீன் வழங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று தனது வியாபாரத்தை பற்றி விலாவாரியாக பேசுகிறார்.

இவர், முதல் நாள் இரவிலே எந்த கடற்கரைக்கு சென்று மீன் வாங்கவேண்டும் என்று முடிவுசெய்துவிடுகிறார். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தனது இருசக்கர வாகனத்தில் பயணத்தை மேற்கொள்கிறார். பெரும்பாலும் அவரது பகுதியில் இருக்கும் ஆர்த்துங்கல் என்ற கடற்பகுதிக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கா விட்டால் அங்கிருந்து 30 கி.மீ. தூரம் கடந்து கொச்சி கடற்கரை பகுதிக்கு சென்றுவிடுகிறார். அங்கு மீன்களை கொள்முதல் செய்ததும் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறார். அதை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியிருப்பதால், அடுத்த அரை மணி நேரத்தில் யார் யாருக்கு எவ் வளவு மீன் தேவை என்று பதிவிட்டுவிடுகிறார்கள்.

உடனே தேவையான அளவு மீன்களை வாங்கிக்கொண்டு மஞ்சு முதலில் தனது வீட்டிற்கு செல் கிறார். அங்கே இவரை எதிர்பார்த்து நான்கு பெண்கள் கத்திகளோடு காத்திருப்பார்கள். அவர்கள் உடனே மீன்களை இறக்கி, சுத்தப்படுத்தி, வெட்டத் தொடங்கிவிடுவார்கள். வெட்டியதும், ஒவ்வொருவரின் தேவைக்கு தக்கபடி கவரில் அடைத்து எடுத்துக்கொண்டு டெலிவரி கொடுக்க பறந்துவிடு கிறார். மதியம் ஒரு மணிக்குள் அனைவருக்கும் வீடுகள் தோறும் கொண்டு போய் சேர்த்துவிடு கிறார். தினமும் 200 கிலோ மீன் வரை விற்பதாக சொல்கிறார்.

“நிறைய பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் தினமும் மீன் சாப்பிட ஆசைப்பட்டாலும் அதை வாங்குவது, கழுவுவது போன்ற வேலைகள் இருப்பதால் அவர்களால் தினமும் மீன் குழம்புவைக்க முடிவதில்லை. அவர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே மீன் சாப்பிடும் சூழ்நிலை உருவாகிவிட்டதை நான் அறிந்தேன். அவர்களை போன்றவர்களுக்கு எல்லா நாட்களும் மீன் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதை தொடங்கினேன். மாலை நேரங்களில் அவர்கள் மீன் கேட்டாலும் கொண்டுபோய் கொடுப்பேன். தினமும் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய்க்கு மீன் வியாபாரம் செய்கிறேன்” என்கிறார்.

மஞ்சு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் மக்கள் தொடர்பியலும் கற்றிருக்கிறார். பின்பு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக பணிபுரிந்தார். வீட்டிலும் டியூசன் கற்றுக்கொடுக்கிறார். மதியம் வரை மீன் வியாபாரம் செய்துவிட்டு, பின்பு சமூக சேவைப் பணிகளை செய்கிறார். இவரது வார்டு பகுதி கடற்கரையில் இருக்கிறது. கடுமையான போட்டியை சமாளித்து வென்றிருக்கிறார். கடற்கரை பகுதி என்பதால் எம்.பி மற்றும் எல்.எல்.ஏ. நிதியில் இருந்து அந்த பகுதி மேம்பாட்டிற்காக பணமும் பெற்று அதற்கான பணிகளை மேற்கொள்கிறார்.

“எங்கள் கடற்கரை பகுதி ரொம்ப இருட்டாக இருக்கிறது. அதற்காக விளக்குள் போடும் நிதிக்காக பிரியாணி விருந்து ஒன்று நடத்தினோம். அதில் ஓரளவு பணம் மிச்சம் வந்தது. அந்த பணத்தில் ஐந்து சோலார் விளக்குகள் போட்டோம். இங்குள்ள ஐம்பது பெண்களை திரட்டி மகளிர் சுய உதவிக்குழு ஒன்றும் தொடங்கியிருக்கிறோம். அவர்களது தொழிலுக்கும் வழிகாட்ட இருக்கிறேன்” என்கிறார்.

மஞ்சு மீன் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் பலருக்கு கல்வி வழங்கிக்கொண்டிருக்கிறார். தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கித்தருகிறார். இவரது வீட்டிலேயே குழந்தைகள் தங்கிப் படிக்கின்றன.

மஞ்சுவுக்கு இப்போது 33 வயது. இவருக்கு மூன்று சகோதரர்கள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இவருக்கு திருமணமாகவில்லை. ‘திருமண வயது கடந்துவிட்டதே..’ என்று கூறி கவலைப்பட்ட பெற்றோரிடம் தனக்கு திருமணம் தேவையில்லை என்று கூறிவிட்டார். தனது பெற்றோரை தன்னுடனேவைத்து பராமரிக்கவும் செய்கிறார். அடுத்து ஏழைகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்காக வக்கீலுக்கும் படிக்க இருக்கிறாராம்.

மேலும் செய்திகள்