நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் 6 கோடி டன் நிலக்கரி இறக்குமதி

நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஜூலை) நிலக்கரி இறக்குமதி 6 கோடி டன்னாக குறைந்துள்ளது.

Update: 2019-10-01 12:21 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

அனல்மின் நிலையங்கள்

அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி (உயர்தர மற்றும் சாதாரண நிலக்கரி) 20.83 கோடி டன்னாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும்.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) அது 23.52 கோடி டன்னாக அதிகரித்தது. அதன் மதிப்பு ரூ.1.70 லட்சம் கோடியாகும். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் உயர்வாகும்.

நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல்-ஜூலை மாத காலத்தில் 6 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 13 சதவீதம் உயர்வாகும். அப்போது இறக்குமதி 5.37 கோடி டன்னாக இருந்தது. இதில் கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி (1.72 கோடி டன்னில் இருந்து) 1.77 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது.

ஜூலை மாதத்தில் மட்டும் 1.89 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1.97 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. இதில் கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி சுமார் 41 லட்சம் டன்னாக உள்ளது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது. பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச், அடுத்த 9 ஆண்டுகளுக்கு (2028 வரை) நாட்டின் நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்கு சராசரியாக 4.3 சதவீதம் உயரும் என முன்னறிவிப்பு செய்துள்ளது.

கோல் இந்தியா

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

மேலும் செய்திகள்