நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னை தாண்டும் ; இக்ரா நிறுவனம் கணிப்பு

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னை தாண்டும் என இக்ரா நிறுவனம் கணித்துள்ளது.

Update: 2019-10-10 10:56 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

கோல் இந்தியா

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

2025-26-ஆம் ஆண்டிற்குள் தனது நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) நாள் ஒன்றுக்கு 23 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் அண்மைக் காலமாக கோல் இந்தியாவின் உற்பத்தி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை. கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனம் 3.08 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 24 சதவீத சரிவாகும். மேலும், இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா, நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் உற்பத்தி, நிர்ணயித்த இலக்கில் 5.50 கோடி டன் முதல் 7.50 கோடி டன் வரை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து இருக்கிறது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையால் சாதாரண நிலக்கரி இறக்குமதி 20 கோடி டன்னை தாண்டும் என அந்த நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 61 கோடி டன்னாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் இந்நிறுவனம் 60.7 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 7 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

பங்கின் விலை

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.185-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.186.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ.183-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.185.20-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.46 சதவீத ஏற்றமாகும்.

மேலும் செய்திகள்