தினம் ஒரு தகவல் : தீய குணங்களற்ற மனித இனம் சாத்தியமா?

மனித உடலினுள் எண்ணற்ற செல்கள் உள்ளன. இவற்றில் ஒரு செல்லின் உட்கருவுக்குள் மொத்தம் 46 குரோமோசோம்கள், அதாவது 23 ஜோடிகளாக அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு குரோமோசோம்களும் டி.என்.ஏ. மற்றும் ஹிஸ்டன் என்ற புரதத்தால் உருவானவை.

Update: 2019-10-12 08:48 GMT
பொதுவாக உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு புரதம் மிகவும் அவசியம். இந்த புரதத்தின் உருவாக்கத்தில் டி.என்.ஏ. முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டி.என்.ஏ.க்குள் சுமார் 30 ஆயிரம் வரையிலான ஜீன்கள் அல்லது மரபணுக்கள் உள்ளன. இத்தகைய டி.என்.ஏ.வில் ஏற்படும் மாற்றம், செல்களில் உள்ள புரதத்தயாரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நமது உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

குழந்தைகள் தங்களுடைய பெற்றோரில் யாராவது ஒருவரை போன்ற உருவம் மற்றும் குணநலன்களைப் பெற்றிருப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மரபணுக்கள். ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு விதமான மரபு பண்பினை பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் பண்புகளே அவர்களுக்கிடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த ஒற்றுமைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். முகம், உடல் உறுப்புகளின் புறத்தோற்ற ஒற்றுமைகள் ஒன்று. செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், குணநலன்கள், நோய்கள் போன்ற அகம் சார்ந்த ஒற்றுமைகள் மற்றொன்று. பெற்றோரின் மரபணு குறைபாடுகளால், அவர்களுக்கு இருக்கக்கூடிய நோய்களும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உண்டாகும் நோய்களை பரம்பரை நோய்கள் என்றும் சொல்கிறோம்.

ஓர் உயிரியின் மரபணுவை நீக்குவது, மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற மரபணு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப முறையை ஜீன் எடிட்டிங் அல்லது ஜெனட்டிக் என்ஜினியரிங் என்று அழைக்கிறோம். நல்ல பண்புகளுக்கு காரணமாக உள்ள மரபணுக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கருவை உருவாக்கவும், அந்த கருவிலிருந்து நாம் விரும்பும் பண்புகளை உடைய ஒரு புதிய உயிரியை உருவாக்கவும் மரபணு தொழில்நுட்பம் உதவுகிறது.

தொடர்ந்து பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள், தங்கள் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால், மரபணுக்களின் வழியே அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது நவீன ஜீன் எடிட்டிங் முறையில் மரபணு மூலம் பரவுகிற பரம்பரை நோய்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மரபணு பொறியியல் துறை மூலம் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்படும்.

இந்த ஆய்வுகள் முழுமை பெறும் போது நோய்களற்ற, தீய குணங்களற்ற ஒரு மனித இனம் எதிர்காலத்தில் உருவாகும், என்கிறார்கள் மரபணு அறிவியலாளர்கள்.

மேலும் செய்திகள்