பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு 54.1 சதவீதமாக அதிகரிப்பு

பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில், செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு 54.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Update: 2019-10-31 05:46 GMT
நிர்வகிக்கும் சொத்து
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

இரண்டாவது காலாண்டில்...
நடப்பு ஆண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.50 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் இத்துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.25.68 லட்சம் கோடியை எட்டி உள்ளது.

பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சிறிய, நடுத்தர நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இப்பிரிவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பில், பணக்கார தனிநபர்கள் (எச்.என்.ஐ) உள்ளிட்ட சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு 54.1 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 53.3 சதவீதமாக இருந்தது. அதே சமயம் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு (46.7 சதவீதத்தில் இருந்து) 45.9 சதவீதமாக குறைந்துள்ளது.

சில்லரை முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக பரஸ்பர நிதி துறையில் புதிய கணக்குகள் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இத்துறையில் 29 லட்சம் புதிய கணக்கு கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத் தில் மட்டும் 3.45 லட்சம் புதிய கணக்குகள் உருவாகி இருக்கிறது. இதனை யடுத்து கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.56 கோடியை எட்டி இருக் கிறது.

5 லட்சம் கோடி டாலர்
2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுக்க நம் நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் இதில் பரஸ்பர நிதி துறையின் பங்கும் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 130 கோடி ஆகும். இதில் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அதோடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 11 சதவீத அளவிற்கே இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய முதலீட்டாளர்கள்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. எனவே புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்