பங்கு வெளியிடும் எண்ணம் இல்லை - எல்.ஐ.சி. நிறுவனம் தகவல்

பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் பங்கு வெளியிடும் எண்ணம் இல்லை என தெரிவித்து இருக்கிறது.

Update: 2019-10-31 07:29 GMT
எல்.ஐ.சி. நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் தனது பிரிமிய வருவாயில் 94 சதவீதத்தை முகவர்கள் வாயிலாக ஈட்டுகிறது. ஆன்லைன் மற்றும் வங்கிகள் வாயிலாக மீத வருவாய் கிடைக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) எல்.ஐ.சி. நிறுவனம் 47 சதவீத வளர்ச்சியுடன் ரூ.77,221 கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளது. இதன்படி அதன் சந்தைப் பங்களிப்பு அதிகபட்சமாக 73 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் விற்பனை செய்த பாலிசிகளின் எண்ணிக்கை அடிப்படையில் எல்.ஐ.சி.யின் சந்தைப்பங்கு அதிகபட்சமாக 72.84 சதவீதமாக இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான எல்.ஐ.சி. பங்குகள், கடன்பத்திரங்களில் அதிக அளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடவடிக்கைகளுக்கு இந்நிறுவனம் பெரும் ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிதி ஆண்டில் இதுவரை பங்குச் சந்தையில் ரூ.33,000 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், அதன் மூலம் ரூ.13,000 கோடி லாபம் ஈட்டி இருப்பதாகவும் எல்.ஐ.சி. தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்தார். தற்சமயம் பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கும் எண்ணம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஏராளமான நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ளதால் எல்.ஐ.சி. நிறுவனம் பங்கு வெளியிட்டு நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. எல்.ஐ.சி., அமுல், ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் களம் இறங்கினால் வெளியீடு தொடங்கிய சில நிமிடங்களில் மொத்த பங்குகளும் விற்றுத் தீர்ந்து விடும் என்றும் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்