நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 3.6 சதவீதமாக அதிகரிக்கும் பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

Update: 2019-11-07 11:51 GMT
மும்பை

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

செலவு, வரவு

அரசின் மொத்த செலவிற்கும், கடன் அல்லாத மொத்த வரவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு வாங்க வேண்டிய கடன் அளவை சுட்டிக்காட்டும் அளவுகோலாக கருதப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதி ஆண்டிற்கான (2019-20) நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவிற்குள் நிதிப்பற்றாக்குறையை கொண்டு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் பற்றாக்குறை 3.4 சதவீதத்தை தாண்டும் என கணித்து இருக்கின்றனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நிறுவனங்களுக்கு அதிரடியாக பல சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால் ரூ.1.45 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அதிகரிக்கும் என பொருளியல் வல்லுனர்கள் கூறி உள்ளனர். கடந்த 2018-19-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.39 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) அது 3.53 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 3.70 சதவீதத்தை எட்டும் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3.6 சதவீதத்தை எட்டும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்நிறுவனம் முதலில் அது 3.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது.

முதல் 6 மாதங்களில்...

இந்த நிதி ஆண்டில், செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதங்களில் ரூ.6.52 லட்சம் கோடி அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் (ரூ.7.03 லட்சம் கோடி) இது 92.6 சதவீதமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 95.3 சதவீதமாக இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்