வானவில் : ஹோண்டா எஸ்.பி.125

ஹோண்டா நிறுவனம் பி.எஸ்.6 புகை விதிக்கேற்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-11-27 10:37 GMT
ஹோண்டா நிறுவனம் பி.எஸ்.6 புகை விதிக்கேற்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது பிரபல ஆக்டிவா ஸ்கூட்டர்களை பி.எஸ்.6 தரத்துக்குரிய வகையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஹோண்டா ஷைன் மோட்டார் சைக்கிளை எஸ்.பி.125 மோட்டார் சைக்கிளாக அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.72,900 ஆகும். ஏற்கனவே உள்ள ஷைன் மாடலை விட இதன் விலை ரூ.9 ஆயிரம் அதிகமாகும். இதில் 124.73 சி.சி. ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் பி.எஸ்.6 தரத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 10.31 ஹெச்.பி. திறன் தற்போது 10.88 ஹெச்.பி. திறனாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரானிக் பியூயல் இன்ஜெக்‌ஷன் உள்ளது. இதனால் சீரான, சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது.

இது வழக்கம்போல 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் 16 சதவீதம் அதிக மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் ‘சைலன்ட் ஸ்டார்ட்’ வசதி உள்ளது. இது ஏ.சி. ஜெனரேட்டரில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். வழக்கமான கன்வென்ஷனல் ஸ்டேட்டருக்குப் பதிலாக இதில் ஆல்டர்நேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஸ்டார்ட் செய்யும்போது விரைவாக ஸ்டார்ட் ஆவதோடு மிகவும் நிசப்தமாக செயல்படும். அதிர்வுகளே இருக்காது.

இதில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டரும் இதில் உள்ளது. இதன் முகப்பு விளக்கு எல்.இ.டி. விளக்கின் தன்மை மாற்றப்பட்டுள்ளது. இதன் நீளம் 13 மி.மீ. அதிகரித்து 2,020 மி.மீ. ஆக உள்ளது. இதன் அகலம் 785 மி.மீ. இதன் உயரம் 19 மி.மீ. அதிகரித்து 1,103 மி.மீ. ஆக உள்ளது. புதிய மாடல் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

மேலும் செய்திகள்