காத்திருக்கிறார் இவர்.. இரண்டு கைகளுக்காக..

மேனகாவின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டிருக்கின்றன. அதுபோல் இரண்டு கால்களும் முறிக்கப்பட்டிருக்கின்றன.

Update: 2019-12-01 09:14 GMT
மேனகாவின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டிருக்கின்றன. அதுபோல் இரண்டு கால்களும் முறிக்கப்பட்டிருக்கின்றன. கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் வீல் சேரில் அவர் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. வீல் சேர் நகர காரணமாக இருப்பவர் அவரது மகன் அரவிந்த். இப்போது அவருக்கு கைமாற்று ஆபரேஷன் செய்ய, இரண்டு கரங்கள் தேவை. அதற்காக மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இவர் நன்றாக தமிழ் பேசுகிறார். இவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.

மேனகாவின் இரண்டு கைகளும், கால்களும் முறிந்துபோவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ளும் அனைவரையும் சோகம் சூழ்ந்துகொள்ளும்.

“நாங்கள் மலேசியாவில் வசித்துவந்தோம். எனது அம்மா அங்கிருந்து சென்று, சிங்கப்பூரில் ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தார். அது அம்மாவுக்கு சிரமமாகத்தான் இருந்துகொண்டிருந்தது. ஆனால் சிங்கப்பூரில் வேலைபார்ப்பது மூலம் அம்மாவுக்கு சற்று கூடுதல் வருவாய் கிடைத்துக்கொண்டிருந்தது. எனது தந்தை குடிப்பழக்கம் கொண்டவர். எப்போதும் குடித்துக்கொண்டிருப்பார். குடும்பத்தை பற்றிய அக்கறையே அவருக்கு கிடையாது. அம்மாவின் உழைப்பில்தான் எங்கள் குடும்பம் இயங்கிக்கொண்டிருந்தது. சிங்கப்பூருக்கு அம்மா வேலைக்கு சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. வேறு எதற்காகவோ செல்வதாக கருதிக்கொண்டு, அம்மாவிடம் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்..” என்று கூறும் அரவிந்த், 5 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தும் போதே அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்.

அப்போது அரவிந்துக்கு 18 வயது. அவரது அக்காளுக்கு 20 வயது. இன்னொரு தம்பிக்கு 10 வயது. அன்று சிங்கப்பூரில் ஒரு வாரம் தங்கியிருந்து வேலைபார்த்துவிட்டு மேனகா வீடு திரும்பி யிருக்கிறார். அரவிந்தின் தம்பி மட்டும் தாயாரோடு இருந்திருக்கிறான். அந்த நேரத்தில் தந்தை வீடு திரும்பியிருக்கிறார். அவர் மேனகாவுடன் வழக்கம்போல் சண்டையிட்டிருக்கிறார். அப்போது திடீரென்று கொலைவெறி கொண்ட அவர், வீ்ட்டின் உள்ளே சென்று பெரிய அரிவாளை எடுத்துவந்து அவரது கால்களையும், கைகளையும் வெட்டிவீ்ழ்த்திவிட்டார்.

“எனக்கு பாய்பிரண்ட் இருப்பதாக கூறி என் கணவர் சண்டையிட்டார். நான் மலேசியாவில் வசிக்கும் இ்ந்திய பெண். குற்றுயிரோடு போராடிய நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கைகளும், கால்களும் முட்டிக்கு கீழ் அப்புறப்படுத்தப்பட்டது. மூன்று மாதங்கள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றேன். என்னை வெட்டிப்போட்ட அன்றே என் கணவர் தற்கொலை செய்துகொண்டார்..” கண்கலங்குகிறார், மேனகா.

கைகளும், கால்களும் இல்லாமல் மருத்துவ மனையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். பின்பு செயற்கை கால்களுடன் நடக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் கைகளும் இல்லாததால் பேலன்ஸ் இல்லாமல் தடுமாறி விழுந்திருக்கிறார். அவரது அன்றாட வாழ்க்கையே போராட்டகளமாகியிருக்கிறது. கையில் இருந்த பணமும் சிகிச்சைக்காக செலவாகி தீர்ந்துபோயிருக்கிறது. ஆனாலும் தன்னம்பிக்கை குறையாமல் வாழ்க்கையோடு போராட முன்வந்திருக்கிறார். அந்த நேரத்தில் சென்னையில் உள்ள உறவினர்களிடம் இருந்து போன் மூலம் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

“எனது உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்கள். இங்கு ஒருவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அந்த செய்தியை எனக்கு அனுப்பிதந்தார்கள். எனக்கும் கை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறும் மேனகா, சில வருடங்களாகவே சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தையும் சேகரித்திருக் கிறார். பலர் உதவி செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாயுடன் அவர் கேரளா வந்திறங்கியிருக்கிறார். அதில் 20 லட்சம் ரூபாய் இவரது அறுவை சிகிச்சைக்காக தேவைப்படுமாம். மீதியுள்ள தொகையுடன் மருத்துவமனை ஒன்றின் அருகிலே வாடகைக்கு மகனுடன் குடியிருந்து வருகிறார்.

“எனது குழந்தைகளை படிக்கவைக்கவேண்டும். 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. நாங்களும் வாழவேண்டும். என் மகன் சமையல் செய்து எனக்கு உணவூட்டுகிறான். என்னை முழுமையாக அவன்தான் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் அவனால் வேலைக்கும் செல்லமுடியவில்லை. எனது இளைய மகனின் நிலை எனக்கு மிகுந்த கவலை யளிக்கிறது. அவனது கண்முன்னால்தான் எனக்கு கொடூரம் நடந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை. விமானத்தில் வரவும் அவன் பயந்ததால் அவனை என்னோடு அழைத்து வர முடியவில்லை.

எனக்கு கைகள் கிடைத்து, எனது ஆபரேஷன் வெற்றியடைந்துவிட்டால் எனது குழந்தை களுக்கு என்னால் சமைத்துக்கொடுக்க முடியும். இன்னும் நான் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் என் மூத்த பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவேன். அதைவிட முக்கியம் எனது பிள்ளைகளை நான் கட்டிப்பிடிக்க எனக்கு கைகள் வேண்டும்” என்று நெகிழ்கிறார், மேனகா.

இவருக்கு கைகளை இணைக்கும் அறுவை சிகிச்சை கேரளாவில் உள்ள அம்ருதா மருத் துவமனையில் நடக்க இருக்கிறது. அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவராக இருப் பவர், டாக்டர் சுப்பிரமணியஐயர். அவர், “இங்கு கைகளுக்காக பதிவு செய்துவிட்டு நிறைய பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் மேனகாவுக்கு கைகள் கிடைக்க அவரோடு சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம்” என்றார். அந்த மருத்துவமனையில் உள்நாட்டு போரில் கைகளை இழந்த ஏமன் நாட்டுக்காரர், குண்டுவெடிப்பில் கைகளை இழந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர், போரில் பாதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் போன்றவர்களெல்லாம் மாற்று கை களுக்காக காத்திருக்கிறார்கள்.

“மூளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை தானமாக தர அவரது குடும்பத்தினர் முன்வந்தால்தான் இவர்களுக்கெல்லாம் கைகள் கிடைக்கும். உடலுக்கு உள்ளே இருக்கும் ஈரல், கிட்னி, இதயம் போன்றவைகளை தானமாக தருகிறவர்கள்கூட உடலுக்கு வெளியே இருக்கும் கைகளை தானமாகத்தர தயங்குகிறார்கள். உடலில் இருந்து கைகளை அப்புறப்படுத்திவிடுவதுதான் அதற்கான காரணம். உடலுக்கு செயற்கை கை மாட்டுவது மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

கைகள் கிடைத்து, மாற்று ஆபரேஷன் செய்துகொண்டவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவரான லிங்கசெல்வி சமீபத்தில் எனக்கு ஒரு வீடியோ அனுப்பினார். அதில் அவர் தனது கைகளால் மகிழ்ச்சியாக தோசை சுட்டுக்கொண்டிருந்தார். ரகீம் என்பவர் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். ஸ்வேதா என்ற மாணவி இணைப்பு கைகளுடன் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக் கிறார்..” என்று மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார், டாக்டர் சுப்பிரமணிய ஐயர்.

மருத்துவமனையின் அருகில் தங்கியிருக்கும் மேனகா தனது மகனின் துணையோடு ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு வருகிறார். தனக்கு கைகள் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றி விசாரித்துவிட்டு நம்பிக்கையோடு திரும்பிச்செல்கிறார்.

நம்பிக்‘கை’ விரைவில் ஈடேறட்டும்!

மேலும் செய்திகள்