தினம் ஒரு தகவல் : பெண்களை தாக்கும் மன நல பிரச்சினை

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, மனநலம். இது தொடர்பான சட்டங்கள் இன்னும் வலுவாக மாறுவதுதான் பாதிக்கப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.

Update: 2019-12-10 08:38 GMT
கடந்த 2017-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், சுமார் 20 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி தவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு 14 சதவீத இந்தியர்கள் மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று சொன்ன நிமான்ஸ் என்ற அமைப்பு, இதில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்காவது உடனடியாக மருத்துவ உதவி அவசியம் என்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்திருந்தது. போதிய விழிப்புணர்வின்மை, உதாசீனமும் போதாமையும் நிறைந்த மருத்துவ சேவை ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 10 அல்லது 12 சதவீதம் பேருக்குத்தான் சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறதாம்.

இந்தியாவில் 3,827 பதிவு செய்யப்பட்ட உளவியல் மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நமக்கு சுமார் 13,500 மருத்துவர்களாவது தேவைப்படுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம். இந்தியாவின் முதல் மனநலச் சட்டத்தை ஆங்கிலேயர்கள்தான் அமலாக்கினார்கள். அதன் பெயர் மனநோயாளிகள் சட்டம். இதை அவர்கள் 1858-ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தினார்கள்.

ஆங்கிலேயர்கள் பல ஆண்டு காலம் நம்மை ஆண்டாலும், ஏன் குறிப்பாக அந்த ஆண்டில் அவர்கள் மனநலத்துக்கு சிறப்புச் சட்டம் இயற்றினார்கள்? இயல்பாகவே இந்தியாவின் குடும்ப அமைப்பு மற்றும் சமூக அமைப்பு ஆகிய காரணங்களால் இங்கு மனநலம் பாதிக்கப்பட்டோர் குறைவாகவே இருந்தனர். அப்படியே இருந்தாலும் அது ஒரு மனநல பாதிப்பு என்பதையே அறியாமல் கேலிக்கும் கிண்டலுக்குமிடையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அப்போதைய ஆங்கில அரசால் இதை சரியாக மதிப்பிட இயலவில்லை. வளரும் மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே மன நலத்தை மதிப்பிடுவதிலும், அங்கீகரிப்பதிலும் வித்தியாசங்கள் உள்ளன.

உதாரணமாக, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இதனை ஒப்பிட்டால், இந்தியர்கள் அமெரிக்கர்களைவிட சட்டரீதியாக மனநோயாளிகளை வரையறுப்பதில் மோசமாக உள்ளார்கள். ஆனால், ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை சமூக வாழ்வில் ஏற்றுக்கொள்வதில் நாம் அமெரிக்கர்களை விட தயாளம் மிக்கவர்களாக உள்ளோம். இதனால்தான் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் மனநல பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருந்தாலும் நம் சமூகத்தில் அதிக வெடிப்புகள் இல்லை.

இதில், பெண்கள் நிலைதான் மிக மோசம் என்கிறது அவ்வமைப்பு. அதாவது மேஜர் டிப்ரஸிவ் எபிசோட் எனப்படும் மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆண்களை விடவும் பெண்களே அதிகம் இரையாகின்றனர். சுமார் 50 சதவீத இந்தியப் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாம். அதாவது பாதிக்குப் பாதி.

இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் சிறிய மனநல பாதிப்புகளை நம் சமூகம் கண்டுகொள்வதே இல்லை. அறியாமை, மருத்துவ சேவையில் காட்டும் அலட்சியம், அரைகுறை மருத்துவம் ஆகியவற்றால் பெண்களின் பிரச்சினை மேலும் தீவிரம் அடைகிறது. குறிப்பாக, குழந்தை பிறப்பு மற்றும் அதற்குப் பிறகான நாட்களில் இந்தியப் பெண்கள் கடுமையான மனச்சோர்வும், தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றுக்கும் ஆளாகிறார்கள். இதில் 90 சதவீதம் பேருக்கு எந்தவிதமான மருத்துவ உதவியோ ஆறுதலோ கிடைப்பதில்லை.

மேலும் செய்திகள்