ஊழல் ஒரு சமுதாய புற்றுநோய்

நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Update: 2019-12-15 05:49 GMT
நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் இளைய சமுதாயம் பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் லஞ்சம் ஊழல் ஒரு புற்றுநோயாக வளர்ந்து கொண்டே இருப்பது நமக்கு கவலையை அளிக்கிறது. நெடுங்காலமாக சில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் லஞ்ச லாவண்யம் கொட்டிக்கிடப்பதையே காண்கிறோம். தமிழ்நாடு அரசு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தின் இணையதளத்தில் ஊழல் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு பொது ஊழியரும் தனக்குரிய அரசுப்பணியை செய்வதற்கோ, செய்யாமல் இருப்பதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ அரசிடமிருந்து பெறும் ஊதியத்தை தவிர வேறு ஏதேனும் பொருளோ, பணமோ, சலுகையோ பெற்றால் அது ஊழல்”.

நம் நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க கட்டமைப்போ அல்லது சட்டமோ உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் வெவ்வேறு கட்டமைப்புகள் உள்ளன. மத்திய அரசை பொறுத்தவரை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய விஜிலென்ஸ் சட்டம் 2003-ல் இயற்றப்பட்டு இந்த மத்திய விஜிலென்ஸ் கமிஷன் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு தலைமை விஜிலென்ஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். இவர் இந்தந்த நிறுவனங்களில் லஞ்சம் ஊழல் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறார்.

மாநில அரசுகளை பொறுத்த வரை அவற்றின் ஊழியர்களும் மாநில அரசின் பொதுத்துறை ஊழியர்களும் மேற்குறிப்பிட்ட மத்திய விஜிலென்ஸ் கமிஷன் கீழ் வருவதில்லை. மாநில அரசுகள் தனியாக விஜிலென்ஸ் அமைப்பை உருவாக்கி உள்ளன. தமிழகத்தில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக்கென ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த துறை டி.ஜி.பி. ரேங்கில் உள்ள அதிகாரியின் கீழ் இயங்கி வருகிறது.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் இருப்பது நம் கடமை மட்டுமல்ல நம் உரிமையும் கூட. எங்கு லஞ்சம் கேட்கப்படுகிறதோ, அதற்கு எதிராக நாம் புகாரை அளிக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சம் கேட்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கட்டமைப்புகளைப்பார்த்தால், லஞ்சம் ஊழல் என்பது முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, லஞ்சம், ஊழல் என்பது, தவிர்க்க முடியாத அளவுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது. பொதுமக்களும் லஞ்சம் கொடுக்க தயாராகி விட்டார்கள். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணிகளை லஞ்சம் கொடுத்து வாங்கியே பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார்கள். அதனால், அரசு ஊழியர்களும், லஞ்சம் வாங்குவதை தங்களின் உரிமை ஆக்கிக்கொண்டார்கள். பொது மக்களில் எங்கோ ஓரிருவர் மட்டும் துணிந்து புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரின் மூலம் உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31 உள்ளடங்கிய வாரம் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வரமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் எல்லா அரசு ஊழியர்களும் பொது துறை ஊழியர்களும் ஒரு நீண்ட உறுதி மொழியை எடுத்துக்கொள்கிறார்கள். அதன் சுருக்கம்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“ஊழல் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு தடையானது என்பதை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஊழல் நடைமுறைகளை முழுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதையும், முழுவதும் நேர்மையான முறையில் கடமையாற்றுவதையும் விரும்புகிறோம். நங்கள் நேர்மையை வளர்ப்போம். லஞ்சம் வாங்க மாட்டோம்” இந்த உறுதி மொழியை ஒரு கடமையாகவே எடுத்துக்கொள்கின்றனர். சிலர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தங்கள் மனச்சாட்சிக்கு மாறாகவும் தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு மாறாகவும் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே போனால் ஊழலை ஒழிக்க என்னதான் செய்வது? பொது மக்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் சேவைகளை பெற முயற்சி செய்யலாம். இதில் கால தாமதமும் அலைச்சலும் ஏற்படலாம். மன உளைச்சலும் ஏற்படலாம். ஏன், தாங்கள் கேவலமாக நடத்தப்படலாம். எதற்கும் மன உறுதியுடன் இருந்தால், ஊழலை தவிர்க்கலாம். இது ஒரு நேர்மையான அணுகுமுறை. இந்த அணுகுமுறை, நேர்மையை விரும்புபவர்களுக்கு கஷ்டத்தையும், ஊழல் செய்பவர்களுக்கு தைரியத்தையும் கொடுக்கும். மாறாக, சாட்டை கொண்டு மாட்டை அடக்குவது போல, ஊழல் வாதிகளை வழிக்கு கொண்டு வர முடியுமா என்றால் முடியும் என்பதுதான் உண்மை.

ஊழல் தடுப்பு சட்டம் 1988 என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஊழல் பேர்வழிகளை நீதியின் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முடியும். இதற்கு நாம் சிறிது மெனக்கெட வேண்டும். அவர்கள் லஞ்சம் வாங்கியதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான சாட்சிகள் தயார் செய்ய வேண்டும். இதை ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. எனவே ஒருவர் லஞ்சம் கேட்டால், அதை கொடுப்பதற்கு முன்னால், அவர் மாநில அரசு சார்ந்த ஊழியராக இருந்தால், மாநில விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவியுங்கள். இதன் கட்டணமில்லா தொலைபேசி எண் 1064. மத்திய அரசு மற்றும் அதன் வங்கிகள் போன்ற மத்திய அரசு நிறுவனமாக இருந்தால், மாநிலத்தில் செயல்படும் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் முறையாக சாட்சிகளை தயார் செய்து உரியவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவார்கள்.

சில நாடுகளில் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. எனவே அங்கே பயமும் உள்ளது. நம் நாட்டிலும் நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் மூலமாக சாட்சியங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வாங்கி கொடுக்க முடியும். நம் இரக்க குணம்தான் ஊழல்வாதிகள் பெரும் சொத்து. நம்மில் பலர் சட்டத்தின் நடைமுறைகளை நாடுவதில்லை என்பதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் தைரியம்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குட்ட குட்ட குனிபவர்கள் குனிந்து கொண்டேதான் இருக்க வேண்டும். சட்டத்தின் கதவை தட்டுபவர்களே நிமிர்ந்து நின்று வெற்றிபெற முடியும்.

எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி

மேலும் செய்திகள்