உணவின் அளவை குறைத்தும் உடல் எடை குறையவில்லையா?

உங்கள் உடல் எடை என்ன? அளவுக்கு அதிகமாக இருப்பதாக நீங்கள் கருதினால், ‘இந்த ஆண்டுக்குள்ளாவது எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்பது உங்கள் திட்டமாக இருக்கும். அந்த திட்டம் முழுமையாக உங்களுக்கு கைகூடவேண்டும் என்றால், நீங்கள் முக்கியமான சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

Update: 2020-01-19 04:00 GMT
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் எடைகுறைப்பு ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள் தங்கள் உணவுமுறையில் மாற்றத்தைத் தந்ததே தவிர, எடைகுறைப்பில் பெரிய அளவில் எந்த பலனையும் தரவில்லை என்பது பலரின் ஆதங்கம். அப்படி ஒரு ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால், அதில் இருக்கும் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொள்வது மிக அவசியம்.

உலக அளவில் சிறந்த உணவுக் கட்டுப்பாடு முறைகள் பற்றிய சில தகவல்கள், “உலக அறிக்கைகள் 2020- பெஸ்ட் டயட்” என்ற பெயரில் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நீரிழிவு, இதய ஆரோக்கியம், உடல் எடை மேலாண்மை போன்ற பல துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் 35 விதமான கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள். அதில் உணவுகளும், எடைகுறைப்புக்கு கையாளவேண்டிய முறைகளும் இடம்பெற்றுள்ளன. அவை இப்போது இணையத்தில் பிரபலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

அவை அனைத்தும் 7 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்து அடிப்படையில் சிறந்த உணவுகள், பின்பற்றுவதற்கு எளிமையான முறைகள், குறைந்த காலத்தில் பயன்தரும் செயல்பாடுகள், எடைகுறைப்பிற்கான நீண்ட கால திட்டங்கள், பாதுகாப்பான எடைகுறைப்பு திட்டங்கள், துரிதமான எடைகுறைப்பு முறைகள் (பக்கவிளைவு கொண்டது), தொடர்ச்சியாக நன்மை வழங்கும் திட்டங்கள் என அவைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபற்றிய முழுவிபரங்களையும் இணையதளங்களில் காணமுடியும்.

மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் பின்பற்றப்படும் உணவுப் பழக்கவழக்க முறையே எல்லாவற்றிலும் சிறந்தது என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. வேறுசில நாட்டு உணவுப் பழக்கவழக்கங்களும் எடையை குறைக்க விரும்புகிறவர்களால் விரும்பி வரவேற்கப்பட்டிருக்கிறது. மத்திய தரைக்கடல் உணவு முறையானது சிறந்தது மட்டுமல்லாமல், பின்பற்ற எளிமையாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உணவுகள் காய் கறிகள் சார்ந்தவை. இயற்கையான வழிமுறைகளில் பக்கவிளைவுகள் இல்லாதவைகளாக உள்ளன.

அந்த உணவு முறையில் சிவப்பு நிற இறைச்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சர்க்கரையும், நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட உணவுகளையும் விலக்கியிருக்கிறார்கள். கொட்டைகள், தானியங்களை அதிகமாக சாப்பிடச் சொல்கிறார்கள். இது ஆரோக்கியம் வழங்குவதுடன், எடை குறையவும் உதவுகிறது. இவை நீரிழிவு, இதய கோளாறுகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் வருவதையும் முன்னதாகவே தடுக்கிறது.

அந்த உணவுப்பட்டியலில் பின்பற்றக்கூடாதது என்ற குறிப்பில், ‘கெட்டோ’ என்பதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்த முறை, பெரும்பாலான உணவுகளை பச்சையாக சாப்பிட வலி யுறுத்துகிறது. மேலும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளையும், கடல்உணவு மற்றும் இறைச்சி போன்ற அதிக கொழுப்புடைய உணவுகளையும் சாப்பிடும்படி பரிந்துரைக்கிறது. சாப்பிட்டுவிட்டு அந்த கலோரிகளை எரிக்க, ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட கடினமான உடற்பயிற்சிகளை செய்ய நிர்பந்திக்கிறது. இந்த முறையில் அங்கீகரிக்கப்பட்ட உணவுகள் தரம் குறைந்தவைகளாக இருக்கின்றன. அதனை பின்பற்றுவதும் கடினமாக இருக்கிறது. எடையை குறைக்க, சத்துக்கள் நிறைந்த உணவுகள் பலவற்றை உண்ணவேண்டாம் என்றும் கெட்டோ முறை குறிப்பிடுகிறது. அதனால்தான் உலகளாவிய மருத்துவ குழு இதை மோசமான ‘டயட்’ முறை என்று குறிப்பிட்டுள்ளது.

உணவை புறக்கணிப்பது என்பது ‘டயட்’ கிடையாது. சரியான உணவை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கும், எடையிழப்புக்கும் சரியான தீர்வாக அமையும். இணையதளத்தைப் பார்த்தோ, தெரிந்தவர் சொல்லும் ஏதோ ஒரு முறையை பின்பற்றியோ உடல் எடைக்குறைப்பு முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது. இணைய தளத்தில் எண்ணற்ற வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கும். தோழிகள் மற்றும் உறவினர்கள் பொதுவான சில வழிமுறைகளை சொல்லித்தரலாம். ஆனால் உங்கள் உடல் உங்களுக்கானது. நீங்கள் உண்ணும் உணவுமுறை, பெற்றோரின் மரபுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் நீங்கள் செய்யும் வேலை ஆகியவையே உங்கள் உடல் எடைக்கு காரணமாக இருக்கும்.

அதை ஆராய்ந்து சொல்லும் மருத்துவரையும், நிபுணரையும் தவிர மற்றவர்கள் சொல்வது சரியான தீர்வாக இருக்காது. இணையதளங்கள் சொல்வதும் சரியான வழிகாட்டுதலாக அமைந்து விடாது. அதனால் உங்கள் உடல், வயது, வேலை போன்றவைகளுக்கு பொருத்தமான முறையில் மட்டுமே உண்ணுங்கள். தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நோய்கள் எதுவும் இன்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடுங்கள். அதிக எடை என்பது பல்வேறு நோய்களை உருவாக்கும் தன்மைகொண்டது என்பதால் எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.

மேலும் செய்திகள்