சங்கிலியும், கயிறும்

எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், கயிறு களின் தேவையை குறைக்க முடியவில்லை. சங்கிலிகளின் பலனும் அவசியமாக இருக்கிறது. மனிதன் கயிறுகளையும், சங்கிலிகளையும் பயன்படுத்தியது மிக முக்கிய வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகும்.

Update: 2020-01-24 12:33 GMT
சங்கிலி தயாரிப்பில் இன்று மிக முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மிகக் கடினமான பாரங்களை உயர்த்தவும், வாகன இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலும் சங்கிலிகளின் பலன் அளப்பரியது. கயிறுகளைவிட உறுதியான ஒன்று இழுக்கவும், கட்டவும் தேவைப்பட்ட காலத்தில் சங்கிலிகள் தோன்றின. ஆனால் இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்களும் இருந்தன.

சங்கிலிகள் பாரங்களை தாங்கிப்பிடிக்கவும், இணைத்துக்கட்டவும் பயன்பட்டன. பழமையான எகிப்தியர் காலத்தில், கி.மு.2800-ம் ஆண்டுகளிலேயே சங்கிலி பயன்பாடு இருந்துள்ளது. அவர்கள் எடை மிக்க கல் பாத்திரங்கள், பொருட்களை தூக்க உறுதியான சங்கிலிகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த சங்கிலிகள் தங்கத்திலானவை என்பது வியக்க வைப்பதாகும். அவர்களைப் பின்பற்றி ரோமானியர்களும் சங்கிலிகளை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் தந்தத்தினால் செய்யப்பட்ட சங்கிலியைக் கொண்டு அடிமைக் கைதிகளை சிறைப்படுத்தி உள்ளனர்.

இரும்பிலும், வெண்கலத்திலும் சங்கிலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டில் சங்கிலியின் பயன்பாடு அதிகமானது. உறுதியும் அதிகமாக தேவைப்பட்டது. கட்டிட நிர்மாண பணிகளுக்கு பாரங்களை உயர்த்த அவை மிக அத்தியாவசியமாக இருந்தது. ஆங்கிலேய பொறியாளரான ஜேம்ஸ் ஸ்லாட்டர் 1864-ல், ரோலர் லிங் செயின் சங்கிலியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். இது நவீன கட்டுமான பணிகளுக்கும், வேறு பல்வேறு தேவைகளுக்கும் கைகொடுப்பதாக இருந்தது. சைக்கிள்கள், மோட்டார் வாகனங்கள், எந்திரக் கருவிகளில் இவரது செயின் தத்துவம் நல்ல வளர்ச்சியைக் கொடுத்தது. உறுதியான செயின்கள் உற்பத்தியைப் பெருக்கின. வாகனங்களில் உந்துசக்தியாக இருந்து வேகத்தை அதிகரித்தது என்றால் மிகையில்லை.

சங்கிலிகளின் முன்னோடிகளாக கயிறுகளை கருதலாம். ஆரம்ப காலத்தில் கொடிகளே கயிறுகளாகின. அதன் நார்களைக் கிழித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைத்து கயிறு திரிக்கும் முறையை மனிதன் அறிந்து கொண்டான். சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கயிறுகள் திறம்பட பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. எகிப்தியர்கள் கி.மு.3500ம் ஆண்டுகளில் பிரமீடுகளை நிர்மாணித்தபோது பெருங்கற்களை உறுதியான கயிறுகள் மூலம் கையாண்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பாப்பிரஸ் எனும் நார்த்தாவரத்தில் இருந்து இந்த கயிறுகள் உருவாக்கப்பட்டன.

கி.மு. 3 ஆயிரம் ஆண்டு காலத்தில் மத்திய தரைக்கடல் நாடுகளில் கயிறுகளை பாய்மரங்களை கட்ட பயன்படுத்தினார்கள். ஒருசில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், சீனர்கள் சணல் தாவரத்தில் இருந்து கயிறு தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். சணல் கயிறுகள் நீண்டகாலம் வரலாற்றில் நிலைத்தன. 18-ம் நூற்றாண்டுவரை கயிறு தயாரிப்பு கைத்தொழிலாகவே இருந்தது. ஆங்கிலேயர் ரிச்சர்டு மாஷ் என்பவர் கயிறு திரிக்கும் எந்திரத்தை உருவாக்கினார்.

சமீப காலத்தில்தான் செயற்கை நார்களைக் கொண்டு கயிறுகள் தயாரிக்கப்பட்டன. 1950களில் இவை வழக்கத்திற்கு வந்தன. அரை அங்குல விட்டம் கொண்ட சணல், தேங்காய் நார்க் கயிறுகள் 2 ஆயிரத்து 500 பவுண்டு எடையைத் தாங்க வல்லது என்றால், செயற்கை கயிறான நைலான் கயிறுகள் 6 ஆயிரம் பவுண்டு எடையைத் தாங்கும் வலிமை கொண்டிருந்தன. தற்போதும் தாவர நார் கயிறுகளும், நைலான் கயிறுகளும் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. அவற்றைவிட மிக வலிமையான பணிகளுக்கு கம்பி வடங்களை பயன்படுத்துகிறார்கள். துருப்பிடிக்காத உருக்கு வடங்கள், ராட்சத கட்டுமானங்களில் கைகொடுக்கின்றன.

மேலும் செய்திகள்