தினம் ஒரு தகவல் : ரத்தத்தில் சர்க்கரை அளவை பனம் பழம் குறைக்குமா?

பனை மரம் பல பயன்களைக் கொடுக்கும். இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் பனைகள் ஒருவகை இனத்தை சேர்ந்தவை என்றும், ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை வேறொரு இனத்தை சேர்ந்தவை என்றும் சொல்கிறார்கள்.

Update: 2020-02-15 08:35 GMT
இந்தியாவில் 60 மில்லியன், மேற்கு ஆப்பிரிக்காவில் 50 மில்லியன், இலங்கையில் 11 மில்லியன், இந்தோனேசியாவில் 10 மில்லியன், மடகஸ்காரில் 10 மில்லியன், மியான்மரில் 2.3 மில்லியன், கம்போடியாவில் 2 மில்லியன், தாய்லாந்தில் 2 மில்லியன் பனைகள் உள்ளன.

பனையின் குருத்து ஓலையில் இருந்து அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகின்றன. கைவினைப் பொருட் களான செயற்கை பூக்கள், பூச்சாடிகள், பெட்டி, சுளகு, பாய் என பல பொருட்கள் செய்ய உதவுகிறது. பனை ஓலை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார். பிரஷ்கள், துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு, குறிப்பாக வீட்டு கூரை கட்டவும் பயன்படுகிறது.

பதநீரானது அருந்தவும், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பதநீர் இறக்கும் குடுவைகளின் உள்ளே அளவோடு தடவப்படும் சுண்ணாம்பு, பதநீரை நொதிக்க விடாமல் செய்கிறது. சுண்ணாம்பு தடவாவிட்டால் கள் ஆக மாறி விடுகிறது. பதநீரில் வெல்லம் 12 சதவீதம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, தாது உப்புக்கள் உள்ளன. முற்றாத பனங்காயில் உள்ள விதைகளையே நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான உணவு பொருள். இரண்டு மில்லியன் பனைகளே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு டின்களில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதி ஆகிறது.

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழக் கூழ் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது. பனங்காய் பனியாரம் ஈழத்தில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களில் மட்டும் பனம் பழத்தை சுட்டு அல்லது செங்காயாக இருந்தால் சீவிப் போட்டு அவித்து உண்கிறார்கள். சில ஊர்களில் இது தெரு ஓரக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பனை சார்ந்த பொருட்களை பொறுத்தவரை கருப்பட்டி, பனங்கற்கண்டு இரண்டும் அதிக அளவில் விற்பனை ஆகிறது. பனஞ் சீனியும் விற்பனை ஆகிறது. பனம் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் பனை மற்றும் பனை பொருட்கள் வளர்ச்சி வாரியம் என்று செயல்பட்டு வந்தாலும், அதன் பணிகளால் விளைந்த பயன்கள் குறித்த செய்திகள் எதுவும் பெரிய அளவில் வெளிவரவில்லை.

ப்ளாபெல்லிபெரின் என்பது பனம் பழத்தில் காணப்படும் சிறு கசப்பு, காறல் சுவைக்கு காரணமாக உள்ள பொருள் ஆகும். இதனை பழக் கூழில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் பழக் கூழை வேறு உணவு பொருட்களில், ஜாம் போன்றவற்றில் பயன்படுத்த முடியும். இதற்கு நுண்ணுயிரிகளை அழிக்கும் இயல்பும் உள்ளது. எலிகளில் செய்த ஆராய்ச்சியில், ப்ளாபெல்லிபெரின் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவை பனம் பழத்தில் உள்ள இந்த பொருள் குறைக்குமா என்ற சோதனைகள் வேறு சில நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்