வழிகாட்டும் ஒளி

தன்னை போல் ஆதரவின்றி தனிமையில் வாழ்க்கையை நகர்த்தும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ‘நேசம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

Update: 2020-02-16 10:02 GMT
ணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்கள் என தனிமையுடன் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கிக்கொண்டிருக்கிறார், பிரேமா. 61 வயதாகும் இவர் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். பிரேமாவின் வாழ்க்கை தனிமையில் துயரங்களை அனுபவிக்கும் பெண்களின் சோகங்களை சுமக்கும் போராட்ட பின்னணியை கொண்டது. அதில் இருந்து மீள்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அவரை சமூக சேவகியாக மாற்றி இருக்கிறது.

தன்னை போல் ஆதரவின்றி தனிமையில் வாழ்க்கையை நகர்த்தும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ‘நேசம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். பொருளாதார ரீதியாக அவர் களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் கைத்தொழில், வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறார். கணவன், குடும்பத்தினர் ஆதரவு இன்றி நிராதரவாக நின்று குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்ட பெண்கள் இவரின் வழிகாட்டுதலால் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கும் உயர்த்தி இருக்கிறார்கள்.

இவர் நடத்தும் ‘வழிகாட்டும் ஒளி’ என்ற சேவை மூலம் கல்வி உதவி பெற்று படித்தவர்கள் ஏராளமானோர் என்ஜினீயர்களாக, தனியார் நிறுவனங்களில் அலுவலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நிறைய பேர் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். படிக்கும் வயதிலேயே குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கும் வகையில் ஏழை சிறுவர், சிறுமியர் களுக்கு வீட்டில் இருந்தே கைத்தொழில் செய்வதற்கும் பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கிறார், பிரேமா.

நிராதரவாக இருக்கும் பெண்கள், அவர்களின் குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வதற்கு பிரேமா அனுபவித்த துயரங்களும், படுக்கையில் இருந்து மீள முடியாத அளவிற்கு எதிர்கொண்ட நோய் பாதிப்புகளும் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த தன்னம்பிக்கை கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். பெற்றோர்: ராஜகோபால்- நாகம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். அண்ணனும், அக்காளும் இருக்கிறார்கள். எங்கள் படிப்பும், குடும்ப செலவுகளும் விவசாயத்தை நம்பித்தான் இருந்தது. பள்ளிப்படிப்பு வரை எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் வளர்ந்தேன். கல்லூரி படிப்பை தொடர்ந்தபோது விவசாயம் நொடிந்துபோனது. நான்தான் குடும்பத்தில் முதன் முதலாக கல்லூரியில் அடியெடுத்துவைத்திருந்தேன். என் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக பெற்றோர் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததால் ஏழ்மை நிலையில் படிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதே ஆழமாக வேரூன்றி விட்டது.

கல்லூரி படிப்பை முடித்ததும் தொலைநிலைக்கல்வி வழியே எம்.காம் முடித்தேன். குடும்ப செலவுகளை சமாளிக்க வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் வங்கி வேலையில் சேருவதற்கு போட்டித்தேர்வு எழுதும் நடைமுறை அமலுக்கு வந்தது. இப்போதுபோல் அப்போது தேர்வுக்கு தயாராகுவதற்கு புத்தகங்களோ, இணையதள வழிகாட்டுதல்களோ கிடையாது. ஏற்கனவே படித்த விஷயங்களை புரட்டி பார்த்து மனதில் பதித்து தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுவிட்டேன். வேலையில் சேர்ந்த பிறகு நிலைமை மெல்ல மாற தொடங்கியது. அப்போது தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 என்ற நிலையில்தான் இருந்தது. ஆனாலும் நான் ஆசைப்பட்டபடி தங்க நகை வாங்க முடியவில்லை’’ என்றவர், பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்திருக்கிறார். அந்த வாழ்க்கையும் நிலைக்காமல் போயிருக்கிறது. அந்த துயரமும், மீண்டும் பெற்றோருடன் சேர முடியாத தவிப்பும், தனிமை வாழ்க்கையும் மனதை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

‘‘என் காதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேரிட்டது. அன்றைய காலகட்டத்தில் காதல் திரு மணம் செய்தவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டார்கள். குடும்பத்தினருடன் இணைந்து பழைய வாழ்க்கைக்கு திரும்புவது ரொம்பவும் கஷ்டமான காரியமாக இருந்தது. ‘பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா? காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்கனவே அவமானத்தை சந்தித்த பெற்றோர் மீண்டும் அக்கம் பக்கத்தினரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்குமே’ என்ற கவலை, ‘காதலித்தவனுடன் வாழ்ந்து காட்டுவேன் என்று வீராப்புடன் வந்துவிட்டு இப்போது தோற்றுப்போய் நிற்கிறோமே’ என்ற பரிதவிப்பு போன்றவை அந்த காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. பெற்றோரே ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தாலும் அவர்களுடன் இணைவதற்கு அப்போது மனம் ஒத்துக்கொள்ளாமல்தான் இருந்தது.

இன்று நிலைமை அப்படி இல்லை. பிள்ளைகளை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கும் பெற்றோரே அவர்கள் வளர்ந்து ஆளான பிறகு காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஜெயித்தவர்களும், தோற்றவர்களும் இருக்கிறார்கள். நிச்சயித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர்களும் இருக்கிறார்கள். பெண்கள் ஒருபோதும் பிறந்த குடும்பத்தில் இருந்து விலகி வந்துவிடக் கூடாது. பெண்ணால் மட்டுமே குடும்பம் என்ற கட்டமைப்பை வலுப்படுத்த முடியும். அவர்கள் எதிர்பார்ப்பது வாழ்க்கை துணையின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு இந்த மூன்றையும்தான். இதனை வாழ்க்கைத்துணை புரிந்து கொள்ளாத போதும் சகிப்பு தன்மையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் பிரிவு பற்றிய சிந்தனை இல்லாமல் உறவை வலுப் படுத்த முன்வர வேண்டும்.

எவ்வளவோ பொறுமை காத்தும், அடியும் உதையும் தான் வாங்க வேண்டிய நிலை நீடித்து கொண்டிருந்தாலோ, இனி சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலோ மட்டுமே பிரிந்து வாழ்வது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படியே பிரிந்தாலும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு சூழல் அமையாமல் பிரிவை சந்திக்கும் பெண்களுக்கு தேவையான மனநல ஆலோசனை, சட்ட உதவிகள், வேலை வாய்ப்பு, சுயதொழில் தொடங்க பயிற்சி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்’’ என்பவர் பேச்சில் குடும்ப பந்தம் மீதான ஈர்ப்பு வெளிப்படுகிறது.

காதல் திருமண வாழ்க்கை தந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக விபத்து ரூபத்தில் மீண்டும் வேதனை தொடர்ந்திருக்கிறது. தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நடமாடமுடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.

‘‘என் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது துப்பட்டா சக்கரத்தில் சிக்கி கழுத்து இறுகி கீழே விழுந்தேன். அதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். அந்த விபத்து பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வீட்டில் படுத்த படுக்கையாகவே சில காலம் கழிந்தது. அந்த தனிமை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது. இனி யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அப்போது, ‘தனிமையில் இருந்தாலும் நாம் வேலை பார்த்துக்கொண்டு பொருளாதார ரீதியில் ஓரளவு நன்றாகவே இருக்கிறோம். அதேநேரத்தில் கணவரை இழந்தும், பிரிந்தும், விவாகரத்து பெற்று குழந்தைகளை வளர்ப்பதற்கும் எவ்வளவு பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவலாமே’ என்ற சிந்தனை உருவானது. ‘என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று வேண்டுவதை விட அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு நாம் உதவலாமே!’ என்ற எண்ணம் உண்டானது. அதுவே ‘நேசம்’ அமைப்பு தொடங்க காரணமானது.

என் தோழிகள் ரேவதி, சுஜாதா உள்பட நண்பர்கள் உதவியுடன் நேசம் அமைப்பின் ஒரு அங்கமாக ‘வழிகாட்டும் ஒளி’ இயக்கத்தையும் தொடங்கி கஷ்டப்படும் பெண் களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தோம். அவர்களின் படிப்பு, தனித் திறன் ஆகியவற்றிற்கு ஏற்ப வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். 2018-ம் ஆண்டு வளசரவாக்கத்தில் தொழிற்கூடம் ஆரம்பித்தோம். அங்கு தையல், எம்ப்ராய்டரி, அழகுகலை, கம்ப் யூட்டர் பயிற்சிகளும், ஆங்கிலம் சரளமாக பேசும் பயிற்சியும் இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பகுதி நேரமாக வருமானம் ஈட்டுகிறார்கள்.

துணையால், குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்கள் சுயமாக உழைத்து சொந்த காலில் நிற்கவும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும் எங்களால் இயன்ற உதவியாக இதை செய்து கொண்டிருக்கிறோம். அரசு பள்ளி யில் படித்து ‘பிளஸ்-டூ’ தேர்வில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவன் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டான். அவனுடைய படிப்பு செலவு மட்டுமின்றி எல்லா தேவைகளையும் நிறைவேற்றி கொடுத்து படிக்க வைக்கிறோம். தற்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். எங்களிடம் கல்வி உதவி பெற்று படித்த மாணவி ஒருவர் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். 22 வயதில் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சிரமப்பட்ட பெண்ணுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறோம். அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் வைராக்கியத்துடன் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரின் குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளிலெல்லாம் பள்ளிப்படிப்பின்போதே சுயதொழில் செய்வதற்கு கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். அந்த அடிப்படையில்தான் நாங்களும் 7 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கைத்தொழில் கற்றுக்கொடுக்கிறோம். இந்த வயதில் சுயமாக தொழில் செய்ய பழகுவது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுக்கும். குடும்பத்திற்கு சுமையாக இருக்கிறோம் என்ற எண்ணம் படிக்கும் வயதில் வராது. தாங்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக்கொடுக்கிறோம் என்ற மன நிறைவுடன் படிப்பை தொடருவார்கள்’’ என்பவர் புற்றுநோய் பாதிப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து சேவை மனப்பான்மையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

‘‘இடுப்பு எலும்பு முறிவு பாதிப்பில் இருந்து மீண்டாலும் அதன் தாக்கம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. 2016-ம் ஆண்டில் வயிற்று உபாதை களால் அவதிப்பட்டேன். பரிசோதித்தபோது குடல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இரண்டாவது கட்டத்தில் இருந்ததால் சிகிச்சையின் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுவந்துவிட்டேன். கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டபோது ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். அந்த சமயத்தில் தனிமையில்தான் நாட்களை செலவிட வேண்டியிருந்தது. மற்றவர்கள் நலம் விசாரிக்க வந்தால் அவர்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தது. மற்றவர்கள் தும்மினால் கூட அதுவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். தலை முடி மட்டுமின்றி கண் இமை, உருவ முடிகள் உதிர்ந்து அவதிப்பட்டேன். சிகிச்சையை விட தனிமையில் இருப்பதுதான் மிகவும் கொடூரமானது. கீமோதெரபி சிகிச்சையின்போது ரத்த தட்டுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். அப்போது அவர்களுக்கு ரத்ததானம் தேவைப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு ரத்தம் தானமாக கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். வங்கி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவதற்கும் திட்டமிட்டு இருக்கிறேன்’’ என்கிறார்.

இந்த ஒளி மக்களுக்கு பிரகாசமாய் வழிகாட்டட்டும்!

மேலும் செய்திகள்