பாரம்பரியச் சின்னங்கள் : கோவா தேவாலயங்கள்

கோவா என்றதும் அனைவருக்கும் அழகிய கடற்கரையும், பழம் பெருமை மிக்க தேவாலயங்களும் நினைவுக்கு வரலாம். கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை இந்த நகரம் பல மன்னராட்சியின் கீழ் இருந்துள்ளது.

Update: 2020-02-28 03:45 GMT
மவுரியர்கள், சாதவாகனர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல்வேறு அரச பரம்பரையினர் ஆட்சி செய்துள்ளனர். 1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவில் வந்திறங்கினார்கள். இதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு வாஸ்கோடகாமா ஆப்பிரிக்காவுக்கு நறுமணப் பொருட்கள் பாதை எனும் கடல் வழியை கண்டுபிடித்திருந்தார். அதன் வழியே இவர்கள் கிழக்கு நோக்கி ஆப்பிரிக்காவைக் கடந்து கோவாவை வந்தடைந்தனர்.

அடுத்த 50 ஆண்டுகளில் போர்ச்சுக்கீசியர்கள் கோவா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அருகில் உள்ள மும்பை மற்றும் சால்செட் போன்ற நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

1961 வரை கோவா போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆம், இந்தியா சுதந்திரம் அடைந்த 14 ஆண்டுகளுக்குப் பின்புதான் கோவா இந்தியாவுடன் இணைந்தது. 1987-ம் ஆண்டு மே மாதம் கோவா இந்தியாவின் 25-வது மாநிலமாக இணைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக பனாஜி உள்ளது.

போர்ச்சுகீசியர்களை கோவா வரலாற்றில் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அழகிய தேவாலயங்கள், கன்னியர்மடங்கள் போன்றவை அவர்களால் ஒப்படைக்கப்பட்டு செல்லப்பட்டன.

வெல்கா கோவா அல்லது பழைய கோவா எனப்படும் இடத்தில் புகழ்பெற்ற பல தேவாலயங்கள், பள்ளிகளும் உள்ளன. குறிப்பாக புகழ்பெற்ற நல்ல இயேசு பசிலிகா தேவாலயம் 1605-ல் கட்டப்பட்டது. இதன் அருகே புனித கேத்தரின் கத்தீட்ரல் உள்ளது. இங்கே அற்புத சிலுவை நிறுவப்பட்டுள்ளது.

மற்றொரு தேவாலயமான செயின்ட் பிரான்சிஸ் வெள்ளை நிறத்துடன் பளிச்சிடுகிறது. இங்கு தொல்லியல் அருங்காட்சியமும் செயல்படுகிறது. இதில் கோவாவின் வரலாற்று சிறப்புமிக்க கலைப்பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுகிறது.

புனித கஜடன் தேவாலயம், ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது. இங்கு இறையியல் கல்லூரி ஒன்றும் செயல்படுகிறது.

இங்குள்ள குன்றின் மீது, மாநிலத்தின் பழமையான தேவாலயமான புனித ஜெபமாலை மாதா ஆலயம் உள்ளது. பனாஜி நகரத்திலும் பழமையான பல தேவாலயங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது புனித அமலோற்பவ அன்னை ஆலயம். இங்குள்ள பழமை யான சான்டா மோனிகா கன்னியர் மடம் 1600-ல் கட்டப்பட்டது.

கோவாவில் உள்ள பழமையான தேவாலயங்களும், கன்னிமாடங்களும் உலக பாரம்பரிய சின்ன பகுதியாக 1986-ல் அறிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்