சிலம்பம் தந்த சிறப்பு

வருமானம் இல்லாததால் சாப்பாட்டிற்கும், செலவுக்கும் வழியின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டவர், சிறுவயதில் கற்ற சிலம்பக்கலையை கொண்டு வாழ்வாதாரத்திற்கு வழிதேட முடிவு செய்தார்.

Update: 2020-09-06 11:34 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனேயை அடுத்துள்ள ஹடாப்சர் பகுதியை சேர்ந்தவர், சாந்தா பாலு பவார். 85 வயது மூதாட்டியான இவர் அங்குள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரால் முன்பு போல் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. ஊரடங்கு காலமும் அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்டது.

வருமானம் இல்லாததால் சாப்பாட்டிற்கும், செலவுக்கும் வழியின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டவர், சிறுவயதில் கற்ற சிலம்பக்கலையை கொண்டு வாழ்வாதாரத்திற்கு வழிதேட முடிவு செய்தார். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் சிலம்பம் சுற்றி அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அன்றாட செலவுகளை சமாளித்து வந்தார்.

சாந்தா இரு கைகளிலும் சிலம்பத்தை பம்பரமாக சுழற்றிய விதம் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தது. அவர் சாலையோரம் நின்று சிலம்பு சுழற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த வயதிலும் சர்வசாதாரணமாக சிலம் பத்தை சுழற்றுகிறாரே என்று பலரும் பாராட்டினார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் மனிதநேயத்துடன் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், மூதாட்டிக்கு சிலம்ப பயிற்சி பள்ளி அமைத்துக்கொடுக்க விரும்புவதாக கூறி இருந்தார். அதன் மூலம் பெண்கள் தற்காப்புக்கலை நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது முயற்சியால் சாந்தா பாலு பவாரின் வாழ்க்கை சூழல் மாறி இருக்கிறது. தற்போது ஒரு அறக்கட்டளை வளாகத்தில் சாந்தா சிலம்ப பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு வாரத்தில் மூன்று நாட்கள் குழந்தைகள், பெண்களுக்கு ஒரு மணி நேரம் சிலம்ப பயிற்சி வழங்கி வருகிறார். நடிகர் சோனு சூட், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சாந்தாவுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து இருக்கிறார்கள். ‘தனக்கு கிடைத்திருக்கும் பணத்தை வீட்டை சரிசெய்வதற்கும், பேரக்குழந்தைகளின் படிப்புக்கும் பயன்படுத்தப் போவதாக’ சாந்தா கூறுகிறார்.

மேலும் செய்திகள்