பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தை நிறைவேற்ற தவறியதால் பிப்ரவரி 2021 வரை சாம்பல் பட்டியலில் தொடரும்.

Update: 2020-10-24 00:58 GMT
புதுடெல்லி: 

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் 27 நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்) தலைவர் மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஜாகூர் ரெஹ்மான் லக்வி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக இந்தியா வியாழக்கிழமை பாகிஸ்தானை மீண்டும் குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் விதிக்கபட்ட 27 நிபந்தனைகளில் 21  நிபந்தனைகளை மட்டுமே நிவர்த்தி செய்து உள்ளது. இன்னும் ஆறு முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை.

அனைத்து செயல் திட்ட காலக்கெடுவுகளும் காலாவதியானதால், பிப்ரவரி 2021 க்குள் தனது முழு செயல் திட்டத்தை விரைவாக முடிக்க பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு கடுமையாக வலியுறுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின்  சாம்பல் பட்டியலில் உள்ளது. இது ஜூன் 2018 இல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது, அதன் பிறகு 27 நிபந்தணைகள் கொண்ட செயல் திட்டம் வழங்கப்பட்டது, அதை செயல்படுத்தத் தவறினால் தடுப்பு பட்டியலில் நீடிக்க  வழிவகுக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாகிஸ்தான் தனது 27 அம்ச செயல் திட்டத்தை முடிக்க மூன்று மாத கால கேட்டது.

செயல் திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூன் ஆகும், ஆனால் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அதன் முழுமையான காலத்தை ஒத்திவைத்ததால் 2021 பிப்ரவரி அதை நீட்டித்தது.

 நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தலைவர் பதவி சீனாவிடமிருந்து ஜெர்மனிக்கு சென்றதால், பாகிஸ்தான் சிக்கலில் மாட்டியது. இந்த பணிக்குழுவில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது.

தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டால் தனது நாடு எதிர்கொள்ளும் கடுமையான விளைவுகளைப் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் ஒரு பேட்டியில் இம்ரான், கான் பாகிஸ்தான் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால் ஈரானைப் போலவே பெரும் சவால்களையும் சந்திக்கும். மக்கள் இப்போது பணவீக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள். நாம் தடுப்புப்பட்டியலில் இடம்பிடித்தால், பணவீக்கத்தை அனுபவிப்போம், அது நமது பொருளாதாரத்தை அழிக்கும் என கூறினார்.

பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.


மேலும் செய்திகள்