வடமாநிலங்களை அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்: டெல்லி, மராட்டியத்தில் பரவல் உறுதியானது

டெல்லி மற்றும் மராட்டியத்தில் பறவை காய்ச்சல் பரவல் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-01-11 08:31 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றால் பொருளாதார தேக்கம், இயல்பு வாழ்க்கை முடக்கம், உயிரிழப்புகள் போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  ஆனால், அதற்குள் மற்றொரு புது விவகாரம் வெடித்து உள்ளது.  புது வருட தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

ராஜஸ்தானில் கடந்த 4ந்தேதி பறவை காய்ச்சலால் 425 பறவைகள் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை கூறியது.  அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் பறவைகள் இறப்பு பதிவாகி உள்ளது.  மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்துள்ளன.  இதேபோல பறவைகள் அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ச்சி செல்லும் பல பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  அங்குள்ள காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.

கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் தாக்கி உள்ளது.  இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு பறவை காய்ச்சல் பரவியிருந்தது.

அரியானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9ந்தேதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.  டெல்லியில் பல்வேறு பூங்காக்களிலும் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 200 காகங்கள் இறந்துள்ளன.  அவற்றில் 5 காகங்களின் உடல்கள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டன.  அவற்றை ஜலந்தர் நகரில் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

பூங்காவை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது.  டெல்லி துவாரகா பகுதியில் டி.டி.ஏ. பூங்காவில் 2 காகங்களும், மேற்கு மாவட்டத்தில் ஹஸ்த்சால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்தன.  இதனால் பறவை காய்ச்சல் பரவி விட்டனவா? என அறிய அவற்றின் மாதிரிகளை டெல்லி அரசு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.  விரைவு பொறுப்பு குழு ஒன்றை அனுப்பி இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளும்படி டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டெல்லியில் நேற்றும் டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.  இவற்றில் சரிதா விகார் பகுதியில் உள்ள மாவட்ட பூங்காவில் 24 காகங்களும், துவாரகா பகுதியில் 14 காகங்களும், ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன.  அவை மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  104 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பறவை காய்ச்சல் பற்றிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  டெல்லியின் பசுமை பகுதியான சஞ்சய் லேக் எச்சரிக்கை மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சஞ்சய் லேக் பகுதிக்கு வந்த அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த 3 நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன.  அவற்றின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது.  இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  அதில், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார்.  

இதனால், அந்த கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.  கிராம மக்கள் அனைவருக்கும் வைரசால் ஏற்பட்ட தொற்று பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலியாக கோழி பண்ணை தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவல் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.  டெல்லி மாநகராட்சி பறவை காய்ச்சலை முன்னிட்டு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில், கோழி, வாத்து உள்பட பறவையினங்களை தாக்கும் வைரசுகளை கட்டுப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது அரசின் முன் கேள்வியாக உள்ளது.

மேலும் செய்திகள்