மோகன்லால்: உடற்பயிற்சி நாயகன்

விவசாயியாக நடிக்கும்போது அதற்கு ஏற்ற விதத்திலான உடற்பயிற்சிகளை செய்து தனது பாடி லாங்வேஜையே மாற்றிக்கொள்வார்.

Update: 2021-02-28 14:13 GMT
பயி்ற்சியாளருடன் மோகன்லால்
‘‘மோகன்லால் அன்று ஓட்டலில் தங்கியிருந்தார். அங்குள்ள ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மாரத்தான் வீரர் ஒருவர் அவரை சந்தித்தார். அவருக்கு 45 வயதிற்குள் இருக்கும். `உங்களால் இத்தகைய உடற்பயிற்சிகளை எல்லாம் செய்ய முடியுமா?' என்று கேட்பதுபோல், சில கடினமாக உடற்பயிற்சிகளை அவர் மோகன்லால் முன்பு செய்துகொண்டிருந்தார். 

மோகன்லாலும் அதுபோன்ற பயிற்சிகளை செய்வார் என்பதை உணர்த்தவேண்டும் என்ற பிடிவாதம் எனக்குள் உருவானது. இரண்டு பேரையும் ஒன்றாக நிறுத்திவைத்து `ஒர்க் அவுட்' செய்யவைத்தேன். சிறிது நேரத்தில் அவர் சோர்ந்து போனாலும் மோகன்லால் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். `சாரி.. ஆளை பார்த்துவிட்டு நான் தவறாக எடைபோட்டுவிட்டேன்' என்று கூறிக்கொண்டு அவர் நகர்ந்துபோய்விட்டார்..’’ என்று முந்தைய சம்பவம் ஒன்றை நினைவுகூர்கிறார், மோகன்லாலின் உடற்பயிற்சி ஆலோசகர் ஐனஸ் ஆண்டனி.

‘‘நான் நான்காம் வகுப்பு படித்தபோது `நரசிம்ஹா' என்ற படத்தின் போஸ்டரில் முதல்முறையாக மோகன்லாலை பார்த்தேன். அவர் 27 வயதான என்னோடு சேர்ந்து எனக்கு நிகராக ஓடும் வலுவுடன் இன்றும் இருந்துகொண்டிருக்கிறார். எவ்வளவு சிரமமான உடற்பயிற்சி என்றாலும் அசராமல் செய்வார். 20 கிலோ எடையை பயன்படுத்தி மூன்று நிமிடம் வரை அவர் `ப்ளாங்க்' செய்வார். ஷூட்டிங், மீட்டிங் போன்றவைகளால் ஒருநாள் பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் என்னை அழைத்து, `இன்று நான் வருவதற்கு தாமதமாகும். நாளை காலை நாம் ஒரு பிடிபிடிப்போம்' என்று சொல்வார். திட்டமிட்டபடி மறுநாள் அதிக நேரம் பயிற்சி செய்துவிட்டு, சிரித்துக்கொண்டே என்னை பார்த்து `உனக்கு சந்தோஷம்தானே!' என்று கேட்பார்.

காலை ஆறரை மணிக்கு ஷூட்டிங்குக்கு சென்று, இரவு சோர்ந்துபோய் திரும்பினாலும் வேகமாக நடைப்பயிற்சி மட்டுமாவது செய்துவிட்டுதான் வீடு திரும்புவார். நவீன கருவிகளை கொண்ட ஜிம்மினை வீட்டிலே உருவாக்கிவைத்திருக்கிறார். ஆராட்டி என்ற சினிமாவின் படப்பிடிப்பு பாலக்காடு பகுதியில் உள்ள குக்கிராமம் ஒன்றில் நடந்தது. தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதற்காக அங்கும் தற்காலிக ஜிம் ஒன்றை உருவாக்கிவைத்திருந்தார். வெளிநாடுகளில் வசிக்கும்போது அங்குள்ள ஜிம்மில் இருக்கும் கருவிகளை எனக்கு வீடியோ மூலம் காட்டி, அவைகளை பயன்படுத்தி எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளை செய்யலாம் என்று ஆலோசனை கேட்பார்.

ஒடியன் என்ற சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது நான் அவருக்கு அறிமுகமானேன். பின்பு `குஞ்சாலி மரைக்காயரில்' அவர் நடித்த போதி லிருந்து அவருக்கு நான் உடற்பயிற்சி ஆலோசகராக உள்ளேன்’’ என்று கூறும் ஐனஸ் ஆண்டனி, மோகன்லாலின் நடிப்புத்திறனையும் மதிப்பீடு செய்கிறார்.

‘‘தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப தனது உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் அவருக்கு உண்டு. லூசிபர் படத்தின் ஸ்டீபன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து கடினமாக்கிக்கொண்டார். அது எளிதான காரியம் இ்ல்லை. கடுமையான உடற்பயிற்சி மூலமாகவே அது நடந்தது. இளமையான தோற்றத்திற்கும் திடீரென்று அவரால் மாறிக்கொள்ள முடியும். விவசாயியாக நடிக்கும்போது அதற்கு ஏற்ற விதத்திலான உடற்பயிற்சிகளை செய்து தனது பாடி லாங்வேஜையே மாற்றிக்கொள்வார்.
சரியான நேரத்திற்கு அவர் பயிற்சி மேற்கொள்ள வந்துவிடுவார். முழுமனதோடு ஆத்மார்த்தமாக அவர் அதில் ஈடுபடுவதால் நானும் அவர் வரும் நேரத்திற்கு தயாராகிவிடுவேன். உடற்பயிற்சிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவருக்கு பயிற்சியாளராக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்.

ருசியான உணவு மோகன்லாலின் பலவீனம். அதை ஒருபிடிபிடித்துவிடுவார். ரவா தோசை, இறால் குழம்பு போன்று சில கிராமிய உணவுகள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் `பிடித்ததை சாப்பிடுங்கள். உடற்பயிற்சி மூலம் கலோரியை கழித்துவிடலாம்' என்று நான் சொல்வேன். நாம் சோர்ந்து போயிருக்கும்போது அவருக்கு கைகொடுத்தால் போதும். உற்சாகம் நமக்கும் தானாக வந்துவிடும்’’ என்கிறார், ஐனஸ் ஆண்டனி.

மேலும் செய்திகள்