இது இலந்தைப் பழமும் அல்ல, பலாப் பழமும் அல்ல; வேறு என்ன?

மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நியாசின், கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு தாதுப்பொருட்கள் நிறைந்தது.

Update: 2021-04-09 14:36 GMT
ஜுஜுபி ப்ரூட்

சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பழம் நம்மூர் இலந்தைப்பழம் போலவே சிவப்பான தோற்றத்தைக் கொண்டது. ஆனால் இது ஜுஜுபி ப்ரூட். இதை சீமை இலந்தை என்றே அழைக்கிறார்கள். இனிப்பு சுவை கொண்டது.

மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நியாசின், கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு தாதுப்பொருட்கள் நிறைந்தது. சத்துக்கள் நிறைந்த பழம் என்பதால் சீனாவில் இந்தப் பழத்தை உலர வைத்து மருந்தாகவே பயன்படுத்துகிறார்கள். மற்ற சிட்ரஸ் பழங்களைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான வைட்டமின் சி கொண்டது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது; கல்லீரல் நோய்களுக்கு எதிரானது; ரத்த சோகையை நீக்குவது; புற்றுநோய்களின் செல்களை அழிப்பது என்று இதன் பலன் தரும் பட்டியல் ரொம்பவும் நீளம். தோல் சுருக்கம், வறட்சியைப் போக்கி முகத்தைப் பொலிவாக்குவதால் சருமப் பராமரிப்பு மருந்துகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

துரியன் பழம்

பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கும். இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

மேலும் செய்திகள்