கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும் - மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்

இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும் ; அதனால் குறைந்தது இரு வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

Update: 2021-05-05 12:29 GMT
படம்: ANI
புதுடெல்லி

நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகை உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில்  ஒரே நாளில் 15,41,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்திவருகின்றனர்.

தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க  ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் பாசி இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து கூறியுள்ளதாவது:

இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவை போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும்.

தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும். தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். 

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் கூறும் போது

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, ஆனால் இந்த மூன்றாம் கட்டம் எப்போது அல்லது எந்த நேர அளவில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நாம் முன்கூட்டியே தயாராக  வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா மிக விரைவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலையை சந்திக்கவுள்ளது. அதனால் குறைந்தது இரு வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம். மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்