விவசாய கழிவுகளில் கொரோனா சிகிச்சை கட்டிடம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரிதி பாண்டே விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். இந்தக் கட்டிடங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.

Update: 2021-05-15 12:48 GMT
கட்டிடக் கலை நிபுணரான ஸ்ரிதி பாண்டே, கடந்த 2019-ம் ஆண்டில் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி புதுமையான நுட்பங்களின் மூலம் நிலையான வீடுகளை உருவாக்கினார். அதே வகையான தொழில்நுட்பத்தை மீண்டும் பயன்படுத்தி, தற்போது பாட்னா மற்றும் ஜலந்தர் நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டிடங்களை அமைத்துள்ளார். இந்த சிவில் இன்ஜினீயர் வெறும் 80 நாட்களிலேயே ‘டாக்டர்ஸ் பார் யூ' என்ற கொரோனா சிகிச்சை மையத்தை பாட்னாவில் உருவாக்கினார். அதற்கு செல்கோ பவுண்டேஷன் நிதியுதவி செய்தது. அதேபோல பாத்ரா மருத்துவமனையின் உதவியுடன் ஜலந்தரில் இரண்டாவது கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துக்கொடுத்தார்.

‘‘கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுமான வேலைகளை நிறுத்தி வைத்திருந்தோம். பிறகு ஏப்ரலில், மசாஹ்ரி என்ற ஊரில் குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு கட்டிடத்தைக் கட்டித் தரமுடியுமா? என்று செல்கோ பவுண்டேஷனில் கேட்டார்கள். 75 படுக்கை வசதிகளுடன் 6 ஆயிரம் சதுர அடியில் கட்டிக்கொடுத்தோம். அதில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் வசதியுடன் தனி அறைகள் உள்ளன’’ என்கிறார் ஸ்ரிதி பாண்டே.தண்ணீரை அதிகம் பயன்படுத்தாமல் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் சூரிய 
சக்தியால் இயங்குகிறது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு இடங்களில் கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார் ஸ்ரிதி.

தற்போதைய நுகர்வு பழக்கங்களால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அவர் கருத்தில்கொண்டார். பிறகு ஏகோபேனலி என்ற ஐரோப்பிய நிறுவனத்தின் மறுசுழற்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் கட்டிடங்களை ஸ்ரிதி வடிவமைத்துள்ளார். கான்கிரீட் சுவர்கள் மற்றும் கூரைகளுக்குப் பதிலாக அவர் பைபர் பொருட்களைப் பயன்படுத்தினார். அவை விவசாயக் கழிவுகளால் உருவாக்கப்பட்டவை.வைக்கோலால் உருவாக்கப்படும் ஸ்ட்ரக்சர் பேனல்கள் மூன்று அடுக்குகளான மறுசுழற்சி செய்த காகிதங்களால் இணைக்கப்பட்டவை. இந்த வைக்கோல் பேனல்கள் 100 ஆண்டுகள் உழைக்கக்கூடியவை.

‘‘சுவர்கள் எளிதில் தீப்பற்றாமல் இருப்பதற்காக நாங்கள் சிலிக்காவைப் பயன்படுத்துகிறோம். இந்த சுவர் அமைப்பு 3 கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடை சேமிக்கக்கூடியது. ஒவ்வொரு சுவரும் வெப்பத்தை உறிஞ்சி சூழலைக் குளுமையாக வைத்திருக்கும். கூரையும் வெப்பத்தைத் தணிப்பதாக இருக்கும்’’ என்கிறார் ஸ்ரிதி பாண்டே.

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மின் தட்டுப்பாடு நிலவுவதால், இங்கே முழுமையாகச் சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்தை நம்ப வேண்டியதில்லை. இந்தக் கட்டிடங்களுக்குத் தேவையான பணிகள் 60 சதவிகிதம் ஸ்ரிதியின் தொழிற்கூடத்தில் நடந்தன. 400 சுவர் பேனல்களை ஐந்தே நாட்களில் அமைத்துவிட்டனர். நுரை போன்ற பொருட்களைப் பயன்படுத்தியிருப்பதால் கட்டிடத்தின் எடை குறைந்திருக்கிறது. இதனால் கட்டுமானங்களுக்கான செலவுகளும் குறைந்தன. ஸ்ரிதி பாண்டே மற்றும் அவரது குழுவினர் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அல்லது நகர்த்தக்கூடிய கொரோனா சிகிச்சை அறைகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பயன்படுத்தக்கூடிய சிறு சிகிச்சை மையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்காக உருவாக்குகிறார்கள்.

மேலும் செய்திகள்