குழந்தைகளின் உணர்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள்

குழந்தைகள் மனதில் என்ன விதமான எண்ண ஓட்டம் நிலவுகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியாது.

Update: 2021-05-17 12:26 GMT
நாம் இயல்பாக செய்யும் காரியங்கள் கூட அவர்கள் மனதை காயப்படுத்திவிடும். நாமும் குழந்தைகளாக மாறி சிந்தித்தால் மட்டுமே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். தன்னை விட யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபம், வருத்தம், பொறாமை இவையெல்லாம் வெளிப்பட்டு அவர்களது மனதை அலைக்கழிக்கும். அந்த சமயத்தில் பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும். பொறாமை குணம் தோன்றும்போது சமாதானப்படுத்தி, அவர் களுக்கு பொறுப்புணர்வை புரியவைக்க வேண்டும். தான் நிராகரிக்கப்படவில்லை என்பதை உணரும்போதுதான் அவர்களது மனம் அமைதி அடையும்.

தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.

பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.

தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது 
என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.

சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.

உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.

வெறுப்பு: எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்கள் மீது வெறுப்பை காண்பிப் பதற்கு அனுமதிக்காதீர்கள். அது அவர்களை பலவீனப்படுத்திவிடும். தனிமையிலும் ஆழ்த்திவிடும். தங்களை சூழ்ந்திருக்கும் நட்பு வட்டத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள். சிறு வயதிலேயே நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும். நேசிப்புதான் சுற்றி இருக்கும் நட்பை பலப்படுத்தும். வெறுப்பு உணர்வோ எதிரிகளைத்தான் உருவாக்கும்.

கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கோபம்: அடிக்கடி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஏதோ ஒரு வகையில் கோபம் இருந்து கொண்டிருக்கும். அது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் வேறு விதத்தில் பெற்றோர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை அடிக்காதீர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசு பொருட்கள் கூட அவர்களை கோபப்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துங்கள். சில 
சமயங்களில் எதற்கு கோபித்துக்கொள் கிறார்கள் என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால் அவர்களுக்குள் கோபம் குடி கொண்டிருக்காத வண்ணம் அன்புடன் நடத்துங்கள்.

பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.

மேலும் செய்திகள்