ஆர்வமாய் பயிலுங்கள், தனிமையை விரட்டுங்கள்

‘‘ஆன்லைனில் பாட வகுப்புகள் நடக்கின்றன. என்னை போன்ற குழந்தைகளுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. பள்ளிப்படிப்பை தாண்டி, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Update: 2021-06-19 16:07 GMT
இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் ‘சாதாரண குழந்தைகள்' என்பதில் இருந்து ‘சாதனை குழந்தைகளாக' நம்மை நாமே தரம் உயர்த்தி கொள்ளமுடியும். நாங்கள் அந்த முயற்சியில்தான் இறங்கியிருக்கிறோம்’’ என படபடவென வெடிக்கிறார்கள், தற்காப்பு கலை இரட்டையர்கள்.

காரைக்காலை சேர்ந்தவர்களான ஸ்ரீ விசாகன், ஸ்ரீ ஹரிணி இருவருக்கும் 11 வயதாகிறது. 3 வயதில் இருந்தே தற்காப்பு கலை பயின்று, 9 வயதிற்குள்ளாகவே இரண்டு ‘பிளாக் பெல்ட்' வென்றிருக்கிறார்கள். கராத்தே, குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்... என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளையும் மிகக்குறைந்த வயதிலேயே கற்றுத்தேர்ந்து, அந்தந்த கலைகளில் பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள். இவர்கள் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை ஊரடங்கை எப்படி பயனுள்ள வழியில் கழித்தனர் என்பதை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டனர்.

‘‘பள்ளி வாழ்க்கையின்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு ஓய்வு நேரம் கிடைக்காது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது. பள்ளிப்படிப்பை தவிர்த்து, புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்தலாம். நானும், என் தங்கையும் வரவிருக்கும் போட்டிகளுக்கு எங்களுக்குள்ளாகவே பயிற்சி மேற்கொண்டு, எங்களை பிசியாக வைத்து கொண்டோம். தற்காப்பு பயிற்சிகளில் மும்முரமாக இருந்ததால், எங்களுக்கு வீட்டிற்குள் முடங்கியிருக்கும் உணர்வோ, தனிமை உணர்வோ ஏற்படவில்லை. எப்போதும் போலவே உற்சாகமாக கண் விழிக்கிறோம், பயிற்சி எடுக்கிறோம். நாட்களை சந்தோஷமாக கழிக்கிறோம்.

அதேபோல, மற்ற குழந்தைகள் ஏதாவது ஒரு கலையில், ஒரு துறையில் தங்களை பிசியாக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஊரடங்கு காலங்களில் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, ஸ்பானிஷ் போன்ற புதுப்புது மொழிகளை கற்கலாம். கராத்தே, குங்பூ, சிலம்பம், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு பயிற்சிகளை ஆன்லைன்/ஆப்லைன் முறைகளில் பயிலலாம். இல்லையேல் ஓவிய பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, ஓட்டப்பயிற்சி... இப்படி ஏதாவது ஒன்றில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதனால், அவர்களும் பிசியாக இருக்கலாம், பொதுவாக ஏற்படக்கூடிய தனிமை உணர்வையும் விரட்டலாம்’’ என்று தங்களுடைய அனுபவத்தை, நம்மோடு பகிர்ந்து கொண்டார், ஸ்ரீ விசாகன்.

‘‘வெளிநாட்டுகளில், பள்ளிப்படிப்பின் போதே தற்காப்பு கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இல்லாதபட்சத்தில் கூடுதல் திறன் பயிற்சிகள் கற்பிக்கப்படும். அதேபோல, நாமும் நம் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான், சிறப்பான எதிர்காலம் அமையும்’’ என்று பேச தொடங்கிய ஸ்ரீஹரிணி, ஆன்லைன் வாயிலாக கிடைக்கப்பெறும் இலவச பயிற்சிகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறார். ‘‘நிறைய விஷயங்களை ஆன்லைனில் பயில முடியும். யூ-டியூப் தளங்களில் புதுப்புது விஷயங்களை தேடி படிக்கலாம். நாங்களும், ஆன்லைன் வாயிலாக பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கினோம். வாய்ப்புகள் நிறைய இருக்கிறது, அதை நாம்தான் முறைப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’’ என்றார், ஸ்ரீ ஹரிணி.

தற்காப்பு கலையில் பட்டைய கிளப்பும் இரட்டையர்கள், பள்ளி படிப்பிலும் அசத்துகிறார்கள். தற்காப்பு பயிற்சிகள் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகளிலும் ஆர்வமாக படிக்கிறார்கள்.

‘‘பிள்ளைகளை விளையாட்டு துறையில் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் என் ஆசை. அதற்கான பாதையில் அவர்களை நடக்க பழக்கி கொடுத்தேன். தற்போது அவர்களாகவே நடக்கிறார்கள். தற்காப்பு பயிற்சி திட்டமிடுதலை நான் பார்த்து கொள்ள, மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமார் பயிற்சி அளிக்கிறார். படிப்பு சம்பந்தமான விஷயங்களை என் மனைவி பிரியா கவனித்துக் கொள்கிறார்’’ என்று குழந்தைகளின் திறன்களை மனநிறைவாக முடித்தார், தந்தை முருகானந்தம்.

மேலும் செய்திகள்