நட்பிடம் தோற்றுப் போன பதக்க கவுரவம்

ஒலிம்பிக் பதக்கம் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம். நட்புறவுக்கு அடையாளமாக அந்த பதக்கத்தையே இரண்டாக பிளந்த விேனாதம் 1936-ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் நடந்தது.

Update: 2021-07-08 05:29 GMT
இந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கம்பூன்றி உயரம் தாண்டுதலில் (போல் வால்ட்) அமெரிக்காவின் ஏர்லே மியாடோஸ் (4.35 மீட்டர்) தங்கப்பதக்கம் வெல்ல, அடுத்த இடத்தை ஜப்பானின் ஷாஹி நிஷிடா, சூவோ ஓயி தலா 4.25 மீட்டர் உயரம் தாண்டி சமநிலை வகித்தனர். இதையடுத்து 2-வது மற்றும் 3-வது இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க மீண்டும் ஒரு முறை கம்பூன்றி உயரம் தாண்டும்படி இருவரையும் போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் நெருங்கிய சினேகிதர்களான இவர்கள் தங்களுக்குள் போட்டியிட மாட்டோம் என்று மறுத்தனர். அதற்கு பதிலாக பதக்கத்தை பகிர்ந்து கொள்வதாக கூறினர். ஆனால் அவர்களின் கோரிக்கையை போட்டி குழுவினர் நிராகரித்து விட்டனர். பிறகு யார் குறைந்த முயற்சிகளில் இந்த உயரத்தை எட்டியது என்பதை அணி நிர்வாகத்தின் கணிப்புபடி ஷாஹி நிஷிடாவுக்கு வெள்ளிப்பதக்கமும், சூவோ ஓயிக்கு ெவண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த முடிவு அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

தாயகம் திரும்பியதும் நிஷிடா தனது வெள்ளிப்பதக்கத்தையும், சூவோ தனது வெண்கலப்பதக்கத்தையும் இரண்டாக வெட்டினர். பிறகு பாதி வெள்ளி, பாதி வெண்கலம் என்று இரண்டு பதக்கத்தையும் கொஞ்சம் உருக்கி ஒன்றாக இணைத்து நட்புறவு பதக்கமாக உருவாக்கி அணிந்து கொண்டனர். நட்புக்கு அவர்கள் அளித்த கவுரவம் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஜப்பான் ராணுவத்தில் இணைந்த சூவோ தனது 27-வது வயதிலேயே 1941-ம் ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார். நிஷிடா 87-வது வயதில் 1997-ம் ஆண்டு மறைந்தார். சூவோவின் பதக்கம் தனியாரிடம் உள்ளது. நிஷிடாவின் பதக்கம் அவர் படித்த வாசிடா பல்கலைக்கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்