போட்டி தேர்வுக்கு பயிற்சி கட்டணமாக 18 மரக்கன்றுகள்

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கு வழிகாட்டும் நோக்கில் பயிற்சி மையங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்கான பயிற்சி கட்டணமாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதுண்டு. பீகார் மாநிலத்தில் இயங்கும் பயிற்சி மையம் ஒன்று மாணவர்களிடம் இருந்து 18 மரக்கன்றுகளை கட்டணமாக வசூலித்துக்கொண்டிருக்கிறது.

Update: 2021-08-01 17:01 GMT
அங்குள்ள சமஸ்திபூரில் ‘கிரீன் பாத்ஷாலா’ என்ற பெயரில் இயங்கும் இந்த பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் ராஜேஷ்குமார் சுமன். 33 வயதாகும் இவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்த தனது தாய்மாமாவின் நினைவாக இந்த பயிற்சி மையத்தை தொடங்கி இருக்கிறார். இங்கு ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது. அத்துடன் போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு அரசு வேலை பெறுவதற்கு ஊக்குவிப்பதோடு பசுமையான சுற்றுப்புற சூழலை உருவாக்கவும் போதிக்கப்படுகிறது.

‘‘அரசு வேலை பெற விரும்புபவர்களுக்கு காலையும், மாலையும் இலவச ஆயத்த பயிற்சி அளிக்கிறோம். அதற்கு 18 மரக்கன்றுகளை கட்டணமாக வசூலிப்பதற்கு பின்னால் அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. 18 மரங்கள் உருவாக்கும் அளவிலான ஆக்சிஜனை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உள் இழுக்கிறான். எனவே நாங்கள் 18 மரக்கன்றுகளை கட்டணமாக வசூலிக்கிறோம். அவை பல்வேறு இடங்களில் நடப்படுகின்றன’’ என்பவர் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்று நடுவது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

‘‘2008-ம் ஆண்டு முதல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்றுள்ளனர். சமீபத்தில், மூன்று பெண்கள் உட்பட 13 மாணவர்கள் பீகார் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்பவர் மாணவர்களிடம் இருந்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வாங்கி நட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்