121 ஆண்டுகளுக்கு பின் தடகளத்தில் பதக்கம்- ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய வரலாறு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

Update: 2021-08-08 00:47 GMT

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கி விட்ட ஒலிம்பிக்கில் நேற்று இந்தியாவுக்கு பெரும் தித்திப்பும், ஆனந்தமும் நிறைந்த நாளாக அமைந்தது. நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று தந்து ஒட்டுமொத்த தேசத்தையும் நேற்று பரவசத்தில் ஆழ்த்தி விட்டார்.

இந்தியா 1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. ஆனால் தடகளத்தில் மட்டும் இந்தியாவுக்கு பதக்கம் இல்லாத வெற்றிடம் ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில், அந்த 121 ஆண்டு கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தணித்திருக்கிறார்.

1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் நார்மன் பிரிட்சார்ட் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றாலும் அவர் ஆங்கிலோ இந்தியன் என்பதும், அதன் பிறகு அவர் நிரந்தரமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியர்களை பொறுத்தவரை மில்கா சிங் (1960 ரோம் ஒலம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டம்) ஆகியோர் ஒலிம்பிக் தடகளத்தில் 4-வது இடத்தை பிடித்து மயிரிழை வித்தியாசத்தில் பதக்கத்தை நழுவ விட்டனர். இதுதான் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

அத்துடன் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற மகத்தான சிறப்பையும் நீரஜ் சோப்ரா பெற்றார். ஏற்கனவே 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.

ஒலிம்பிக் தடகளத்தில் புதிய அத்தியாயத்தை பதித்துள்ள 23 வயதான நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் மற்றும் உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா இப்போது உச்சத்தை எட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த ஒலிம்பிக்

முன்னதாக நேற்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரரை தோற்கடித்து வெண்கலம் வென்று இருந்தார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தத்தில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் 50 இடத்திற்குள் நுழைந்துள்ளது. இத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் நிறைவடைந்தன.

ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் வென்றதே (2 வெள்ளி, 4 வெண்கலம்) இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.

மேலும் செய்திகள்