10 வயது சிறுமியின் அசாத்திய உலக சாதனை

கொரோனா காலகட்டம் குழந்தைகளின் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டாலும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. தங்களின் தனித்திறன்களை மெருகேற்றிக் கொண்டிருப்பதோடு சாதனை களையும் படைக்கிறார்கள். அந்த வரிசையில் இடம்பெற்றிருக்கிறார், 10 வயது சிறுமி சாரா ஷிபா.

Update: 2021-09-20 15:13 GMT
இவர் 195 நாடுகள், அதன் தலைநகரங்கள், அந்தந்த நாடுகளின் நாணயங்கள் அனைத்தையும் சற்றும் யோசிக்காமல் உடனுக்குடன் ஒப்புவித்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதுநாள் வரை உலக நாடுகள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை விரைவாக சொல்வதுதான் சாதனையாக பதிவாகி இருக்கிறது. நாடுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இடம்பெற்றிருக்கிறது. ஆனால் சாராவோ 195 நாடுகளின் நாணயங்களையும் சேர்த்து கூறி அசத்தி இருக்கிறார். இத்தகைய உலக சாதனையை நிகழ்த்திய முதல் நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

சிறுமி சாராவின் இந்த உலக சாதனைப் பயணத்துக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த சுஷாந்த் மைசொரேக்கர் என்பர் வழிகாட்டி இருக்கிறார். படைப்பாற்றல், நினைவுத் திறன், நுட்பங்கள் மூலம் தகவல்களை மனப்பாடம் செய்வது குறித்து சாராவுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். சாராவின் சாதனைகளுக்கு அவரது பெற்றோர் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். “லாக் டவுன் காலகட்டங்களில் நினைவுத்திறன் வகுப்புகளில் சாரா பங்கேற்க தொடங்கிவிட்டார். இருப்பினும் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சி முன்கூட்டியே திட்ட மிடப்படவில்லை” என்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா இவர்களின் பூர்வீகம். சாராவுக்கு ஒரு வயது ஆனபோது துபாயில் குடியேறி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் சாரா, நினைவுத்திறனை அதிகரிப்பதற்கு பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

‘‘இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சாதனை படைப்பதற்கு எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருக்கிறது. ஏனெனில் தொலைநோக்கு தலைமையால் முற்போக்கான முன்னேற்றங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு வாழ்வதற்காக சந்தோஷப்படுகிறேன். நன்றியுள்ளவளாக இருப்பேன்’’ என்கிறார். சாராவைப் பொறுத்தவரை, அவளுடைய வயதுக்கு இது சுலபமான விஷயம் கிடையாது. குறிப்பாக நாடுகள் மற்றும் தலைநகரங்களின் பெயர்களை உச்சரிப்பதற்கு ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

சாரா வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை என்பதும் இன்னொரு சுவாரசியமான விஷயம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரை சந்திக்க ஆவலாக இருப்பதாக சொல்கிறார். துபாயின் குளோபல் வில்லேஜில் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை நடத்திய சாரா, பாலிவுட் பிரபலம் கரிஷ்மா கபூருடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் அசத்தியிருக்கிறார்.

யோகா மற்றும் சுவாச நுட்பங்களின் நடைமுறைகளையும் எளிமையாக வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார். மேலும், ‘ஷைன் வித் சாரா’ என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை உள்ளடக்கிய தொடர் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதற்கு இன்கிரிடிபிள் இந்தியா’ என்று பெயரிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க முடிவு செய்திருக்கிறார். சுற்றுலா செல்வது தனக்கு ரொம்பவே பிடித்தமான விஷயம் என்றும் சொல்கிறார்.

மேலும் செய்திகள்