அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்க திட்டம்..! பா.ஜ.க.வுடன் கூட்டணி...?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் அமரிந்தர் சிங் பா.ஜ.க.விற்கு செல்ல விரும்பினால் போகலாம் என கூறி உள்ளார்.

Update: 2021-10-20 12:24 GMT
புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் திடீர் பயணமாக  டெல்லி சென்றார்.அங்கு பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். ஆனால்  பா.ஜ.க.வில்  இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். 

இந்த நிலையில் இந்நிலையில் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அமரிந்தர் கூறியதாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், “பஞ்சாப் எதிர்காலத்துக்காக போராட்டம் தொடருகிறது. மிக விரைவாகவே பஞ்சாப் மாநில மற்றும் மக்களின் நலன், கடந்த ஓராண்டாக போராடி வரும் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்.

விவசாயிகளில் நலனை காக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன். மேலும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட அகாலிதளத்தில் இருந்து தனியாக பிரிந்த குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்புரா பிரிவுகளுடனும் கூட்டணி வைப்பேன்.

பஞ்சாப் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டேன். உள்ளிருந்து மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காக்க பஞ்சாபுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது. இன்று ஆபத்தில் இருக்கும் அதன் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” இவ்வாறு கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் கூறுகையில் ‘‘அமரிந்தர் சிங் பா.ஜ.க.விற்கு செல்ல விரும்பினால் போகலாம். மதசார்பற்ற பழைய உடன்பாட்டில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்றால், அவரை யார் தடுக்க முடியும்?. காங்கிரஸ் உடன் தொடர்புடைய பாரம்பரியமாக கருதப்பட்டார். அவர் பா.ஜனதாவுக்கு செல்ல விரும்பினால் செல்லலாம்.

எல்லையில் 10 மாதங்களாக காக்க வைத்த பா.ஜனதாவை யார் மன்னிப்பது? பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் கையாளப்பட்ட விதத்தில் அவர்களை மன்னிக்க முடியுமா? அவரது அறிக்கை உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. அவருக்குள் இருக்கும் 'மதச்சார்பற்ற அமரிந்தரை' அவர் கொன்றதாகத் தெரிகிறது. காங்கிரஸ் எந்த இழப்பையும் சந்திக்காது, இது உண்மையில் நம்  வாக்குகளை பிரிக்கும்’’ என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்