ஜே.சி.பி.இயக்கும் இரும்பு பெண்

பெரிய கனரக வாகனங்களை எல்லாம் எளிதாகக் கையாளுகிறார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 57 வயது தமயந்தி சோனி.

Update: 2021-10-24 15:07 GMT
தெற்காசியக் கட்டுமான உபகரணங்கள் கண்காட்சிக்காகத் தமயந்தியை டாடா ஹிட்டாச்சி நிறுவனம் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றது. அந்தக் கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் ஒரே பெண் பங்கேற்பாளர் இவர் மட்டுமே. 8 நாடுகளிலிருந்து 32 பெண் ஓட்டுநர்கள் வந்திருந்தார்கள்.

இவரது வாகனம் ஓட்டும் திறமையைப் பார்த்து, 2020 மார்ச்சில் ஜப்பானில் நடைபெற இருந்த ஆட்டோ கண்காட்சிக்கு வெளிநாட்டுப் பொறியாளர்களும், நம் நாட்டுப் பொறியாளர்களும் அழைத்தனர். கொரோனா காரணமாக அந்த நிகழ்வு நடைபெறாமல் போய்விட்டது.

“குஜராத் மாநிலம் குட்ச்தான் நான் பிறந்த ஊர். 1986-ம் ஆண்டு திருமணம் ஆனதும், என் கணவரோடு சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்றுவிட்டேன். என் கணவர் உத்தம் குமார் சோனி சிறிய அளவில் சுரங்க வேலையை காண்ட்ராக்ட் எடுத்து செய்துகொண்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு அவர் இறந்தார். அதன்பிறகு குடும்பப் பொறுப்புகள் அத்தனையும் என் தோள்களில் ஏறிக்கொண்டன. 4 சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு நான் எப்போதும் விரும்பியதில்லை. காண்ட்ராக்ட் பணிக்காக நான் வைத்திருக்கும் ஜே.சி.பி. இயந்திர வாகனத்தை ஓட்ட முயற்சி செய்திருக்கிறேன். அவ்வளவுதான். கணவரை இழந்து நிராயுதபாணியாக நின்றபோது, என் குடும்பத்துக்காக வாகன ஓட்டுநராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் கனரக வாகனங்களை ஓட்டிய பிறகுதான், ஆண்களைவிடப் பெண்களால் ஜே.சி.பி. அல்லது லாரிகளை சிறப்பாக ஓட்ட முடியும் என்று புரிந்தது. அதன்பிறகு கட்டுமான நிறுவனத்தில் கனரக வாகனங்களை ஓட்டினேன். வாகன ஓட்டுநராக இருந்துகொண்டே, என் மகளுக்கு குஜராத்தில் திருமணம் செய்து கொடுத்தேன்.

மகனை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க வைத்திருக்கிறேன். நான் 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என் கணவர் மட்டும் ஊக்குவிக்காமல் இருந்திருந்தால், நான் கனரக வாகன ஓட்டுநராகியிருக்க முடியாது.

ஆரம்பத்தில் குடும்பத்தை நடத்துவது கடினமாக இருந்தது. சம்பாதிப்பது எல்லாம் கடன் கொடுப்பதற்கே சரியாகப் போனது. ஜே.சி.பி.யை குத்தகைக்கு எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன். தற்போது 10 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நான் கனரக வாகனங்களை ஓட்டிய பிறகுதான், ஆண்களைவிடப் பெண்களால் ஜே.சி.பி. அல்லது லாரிகளை சிறப்பாக ஓட்ட முடியும் என்று புரிந்தது.

மேலும் செய்திகள்