மனச்சோர்வை விரட்டும் புதுமை உணவகம்
மனதில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டாலே மன அழுத்தம் காணாமல் போய்விடும்.;
ஆனால், பகிர்ந்து கொள்ள இடம் கிடைக்காமல் பலரும் ஏங்குவதுதான் இன்றைய நிலைமை. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், மன அழுத்தத்தைப் போக்க உணவகத்தைத் தொடங்கியுள்ளார். இந்த உணவகத்துக்கு வந்து சாப்பிடலாம், சிரிக்கலாம். மன அழுத்தத்தைப் போக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த தனித்துவமான மன அழுத்தம் போக்கும் உணவகத்துக்கு சொந்தக்காரர் 21 வயது ஏஞ்செல் டிசோசா. இவர் கடந்த மாதம் மொஹாலியில் `யுவர் சுகர் டாடி’ என்ற பெயரில் நாட்டிலேயே முதல் முறையாக மனநல உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மக்கள் இங்கு வந்து தங்கள் பிரச்சினைகளை கொட்டித் தீர்க்கலாம். இங்கு வழங்கப்படும் பல சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்ளலாம். சிரிக்கவும், சாப்பிடவும், மனப் பிரச்சினையைக் குணப்படுத்தவும் இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் தோழமையுடன் நடத்தப்படுவார்கள்.
கொரோனா பொது முடக்கத்தின்போது, கனடாவின் வான்கூவரில் உள்ள பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் ஆன்லைன் மூலம் பட்டம் பெற்றபோது, இந்த உணவகத்தை தொடங்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. கொரோனா பரவலின்போது மனநலப் பிரச்சினை அதிகரித்தது. அப்போதுதான் மக்களின் உணவு, விளையாட்டு மற்றும் செயல்பாடுகளுடன் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சிரிக்க வைக்கும் உணவகத்தைத் திறந்தேன்.
நினைவாற்றல் மீட்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றை சிகிச்சையாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். `பப்பி’ சிகிச்சையையும் அறிமுகம் செய்துள்ளோம். 5 பேருக்கு ஒரு குட்டி நாயை விளையாட வழங்குவோம்.
ஒவ்வொரு நாளும் வேறுபட்ட உணவுகளை வழங்குகிறோம். உணவு தயாராகும் வரை எங்கள் விருந்தினர்களுடன் அறிவாற்றல் தொடர்பான விளையாட்டுகளை விளையாடுவோம். மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் எங்கள் உணவகத்துக்கு வரலாம். தங்கள் சொந்தக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் நாங்கள் உருவாக்கித் தருகிறோம்” என்றார்.