சூரிய சக்தியில் இயங்கும் படகு

பசுமை படர்ந்த மலைகள், திரும்பிய திசையெல்லாம் பசுமை போர்த்திய இடங்கள், நீண்ட நீர் நிலைகள் என இயற்கையின் அத்தனை படைப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்ற மாநிலங்களுள் ஒன்றாக கேரளா விளங்குகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அவற்றுள் முதன்மையானது படகு சவாரி.

Update: 2021-12-21 10:04 GMT
அங்குள்ள சுற்றுலா தலங்கள் பலவும் படகு சவாரியையே சார்ந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் டீசலில் இயங்கும் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. அவை உமிழும் கார்பன் போன்ற கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

அவற்றுக்கு மாற்று தீர்வை முன் வைத்து வெற்றியும் பெற்றவர், சந்தித் தண்டாஷேரி. கொச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சூரிய சக்தியில் இயங்கும் படகை உருவாக்கியுள்ளார். இந்தியாவிலேயே சோலார் பேனலில் இயங்கும் முதல் படகு இவருடையதுதான். சோலார் படகுகள் வடிவமைப்புக்கு முன்னோடியாக கருதப்படுகிறார்.

‘‘இந்த படகு சுமார் 92 டன் கார்பன் உமிழ்வை குறைக்க உதவுகிறது. எரிபொருள் செலவில் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்துகிறது’’ என்றும் கூறுகிறார், சந்தித்.

சந்தித் படிப்பை முடித்ததும் பல்வேறு கப்பல் கட்டுமான தளங்களில் பணிபுரிந்திருக்கிறார். படகு வடிவமைப்பிலும் ஆர்வம் செலுத்தி இருக்கிறார். அப்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த படகை வடிவமைக்கும் எண்ணம் தோன்றி இருக்கிறது. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு சோலார் படகுதான் சிறந்த தீர்வாக அமையும் என்று முடிவு செய்தவர் அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர கடும் சிரமங்களை சந்தித்திருக்கிறார்.

‘‘பொதுவாக படகுகள் ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 8 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்கின்றன. அவை கரியமில வாயுக்களை வெளியிடுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் இந்தியாவின் முதல் சூரிய ஒளி படகாக எனது படகு பயணம் 2016-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. ஒரு நாளில் 22 பயணங்கள் மேற்கொள்வதற்கு சாதாரண படகுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதே நேரத்தில் சோலார் படகுக்கு 200 ரூபாய் மட்டுமே தேவைப்படும்’’ என்கிறார்.

தற்போது கேரள அரசு படகுகளில் சோலார் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. டீசலில் இயங்கும் படகு என்ஜின்களை மின் மோட்டார்கள் மூலம் இயக்குவதற்கான மாற்று திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இதற்காக, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. கார்பன் உமிழ்வை குறைப்பதும், பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது சுற்றுலா படகுகளின் என்ஜின்கள் மட்டுமின்றி படகுகளின் உள்பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் அறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள், டி.வி, மிக்சி, ஏ.சி. போன்ற மின் சாதனங்களும் டீசல், பெட்ரோல் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

அத்தகைய டீசல், பெட்ரோல் ஜெனரேட்டர்களுக்கு பதிலாக சோலார் பேனல்கள் மூலம் மின் சாதனங்களை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்