இலவசமாக வழங்கப்படும் பாரம்பரிய அகப்பை

பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் உள்ளன.

Update: 2022-01-14 23:19 GMT
பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘அகப்பை.’ மண்பானையில் பொங்கல் வைக்கும்போது, அரிசியை கிளறுவதற்கு அகப்பையை நமது முன்னோர்கள் பயன்படுத்தினர். இன்றும் கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் அகப்பைகளை பயன்படுத்துவதை காணலாம். இந்த ‘அகப்பை’ தயாரிக்க தேங்காய் கொட்டாங்குச்சியை சுத்தம் செய்ய வேண்டும். பின் மூங்கிலை இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக செதுக்கி, கொட்டங்குச்சியில் சொருகினால் அகப்பை தயார். காலப்போக்கில் நாகரிகத்தின் வெளிப்பாடாக, பித்தளை மற்றும் சில்வர் கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போகும் நிலை உருவாகிவிட்டது.

ஆனால் தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வசித்து வரும் மக்கள், பொங்கல் அன்று அகப்பையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கணபதி கூறியதாவது:-

“எங்களது மூதாதையர் காலம்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் ஊரில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் போதும். பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கி விடுவோம். இந்த அகப்பையை நாங்கள் யாரிடமும் விலைக்கு விற்பதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை வழங்குகிறோம். நாங்கள் அதிகாலையிலேயே எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கொடுத்து விடுவோம்.

பின்னர் பொங்கல் பண்டிகை அன்று மதியம் எந்தெந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தோமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்தத் தொழிலை மகிழ்வோடும், மனநிறைவோடும் செய்து வருகிறோம்” என்றார்.

கொஞ்சம், கொஞ்சமாக நமது பாரம்பரியத்தை மறந்து வரும் சூழ்நிலையில் தஞ்சை அருகே ஒரு கிராமமே இன்றளவும் பழமை மாறாமல், ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வருவது பாராட்டுக்குரியதே.

மேலும் செய்திகள்