கடல் வழிப் பயணத்துக்கு வழிகாட்டிய ஆமைகள்

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலிலும், அந்த நாட்டில் குவிந்து கிடக்கும் கலைப் பொக்கிஷங்களான ஆயிரக்கணக்கான கோவில்களிலும் இருக்கும் அற்புதமான சிற்பங்களில் ஓர் ஒற்றுமையைக் காணமுடிகிறது.

Update: 2019-05-26 07:33 GMT
ம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலிலும், அந்த நாட்டில் குவிந்து கிடக்கும் கலைப் பொக்கிஷங்களான ஆயிரக்கணக்கான கோவில்களிலும் இருக்கும் அற்புதமான சிற்பங்களில் ஓர் ஒற்றுமையைக் காணமுடிகிறது.

கண்களைக் கவரும் சிற்பங்களுக்கு மத்தியில், ஏதோ ஒரு ரூபத்தில் ஆமை சிலைகள் அங்கே இடம்பிடித்து இருக்கும்.

இந்தியாவின் தாக்கத்தால் விஷ்ணு வழிபாட்டை ஏற்றுக்கொண்ட கம்போடிய மன்னர்கள், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்ம அவதாரம் என்பதால், ஆமைக்கு அதிக கவுரவம் கொடுத்து தாங்கள் கட்டிய கோவில்களில் சிலைகளாக வைத் தனர்.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது அந்த மத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்கிப் பிடித்தது ஆமை என்று இந்து மத புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாலும், ஆமைகள் மீது கம்போடிய மன்னர்களுக்கு அலாதி பக்தி உண்டு.

அதே சமயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்த சோழர்கள், வேறு காரணத்திற்காக ஆமைகளைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

கடல் வழிப்பயணத்துக்கு ஆமைகளே சிறந்த வழிகாட்டிகள் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததால், அந்தக்காலத்தில் ஆமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எந்த நவீன போக்குவரத்து வசதியும் இல்லாத காலமான ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய அந்த நேரத்தில், தமிழர்கள் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போடியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிக எளிதாகக் கடல் கடந்து சென்று வாணிபம் நடத்தியதோடு, அங்கே தங்களது கலாசாரத்தையும் பதித்தனர்.

இந்த மகத்தான சாதனை புரிய சோழர்களுக்குப் பேருதவியாக இருந்தவை ஆமைகள் என்பது வியப்புக்கு உரிய செய்தி.

அந்தக்காலத்தில் நாடுகளுக்கு இடையே பண்டமாற்று வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக வணிகர்கள், முதலாம் நூற்றாண்டில் இருந்தே கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்த வணிகர்களை நடுக்கடலில், வழிமறித்து அவர்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற பொருள்களைக் கொள்ளையடிக்கும் கும்பல் நடமாட்டமும் அப்போது இருந்தது.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், நாடு பிடிக்கும் ஆசையை நிறைவேற்றவும், ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று கப்பல் படைகளை ஏற்படுத்திக் கொண்டன.

இதில் முன்னணியில் இருந்தது இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளே.

உலகின் ஒரு கோடியில் உள்ள சீனாவையும், மேற்கே மறு கோடியில் இருக்கும் ரோம் நகரையும் இணைக்கும் வர்த்தகக் கடல் வழிப் பயணத்தின் நடுநாயகமாக இந்தியாவும் எகிப்தும் இருப்பது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

அதேபோல அப்போதைய தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி துறைமுகங்கள், பூகோள ரீதியாக வெளி நாட்டு வணிகத்துக்கு வசதியான கேந்திரங்களாக இருந்ததால் அவை முக்கியத்துவம் பெற்ற துறை முகங்களாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

சீனாவில் இருந்து வரும் வணிகக் கப்பல்கள், தமிழகத்தின் கிழக்குப் பகுதி துறைமுகங்களுக்கு வந்து, மேலும் பொருள்களை ஏற்றிக்கொண்டு, குமரிமுனையைச் சுற்றி மேற்குப் பகுதி துறைமுகங்களுக்குச் செல்லும். பின்னர் அங்கு இருந்து எகிப்து வழியாக ரோம் நகரை சென்று சேர்ந்தன.

இத்தகைய வர்த்தக வழி காரணமாகவே, அப்போது தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி கடற்கரை பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள், கப்பல் கட்டுவதிலும், தூர தேசங்களுக்கு ஆபத்து இல்லா கடல் பயணம் மேற்கொள்ளும் உத்தியிலும் தேர்ந்தவர்களாகவும் விளங்கினார்கள்.

கப்பல்கள் கட்டும் கலையை ஆரம்ப காலத்தில் பல்லவர்களிடம் இருந்து சோழர்கள் கற்றுக்கொண்டார்கள் என்று கூறப்பட்டாலும், வெகு தொலைவுக்கு படகுகளை விரைவாக செலுத்தும் கலையை சோழர்கள் தாங்களாக பின்னர் வளர்த்துக் கொண்டார்கள்.

இதற்கு அவர்களது வழிகாட்டிகளாக இருந்தவைகள் தான் கடல் ஆமைகள்.

கடல் ஆமைகளிடம் ஒரு விஷேச குணம் உண்டு.

அவை, தாங்கள் பிறந்த கடற்கரைப் பகுதி எது என்பதை மறக்காமல் இருக்கும். இரை தேடுவதற்காக பல ஆண்டுகளாக கடலின் வேறு பகுதிகளில் எல்லாம் சுற்றி அலைந்தாலும், அந்த ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் மறக்காமல் தாங்கள் பிறந்த அதே கடற்கரைக்கு வந்தே முட்டைகளை இடும்.

எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஒரு குழுவைச் சேர்ந்த ஆமைகள் முட்டைகளை இடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த முட்டைகளில் இருந்து வரும் ஆமைக் குஞ்சுகள், உடனே கடலுக்குள் பாய்ந்து சென்றுவிடும்.

அப்போது அவை, தங்களது பிறப்பிடமான மெரினாவை நன்றாக அறிந்து கொள்ளும். கடலுக்குள் செல்லும் அந்த ஆமைக் குஞ்சுகள், இரையைத் தேடி பல மைல் தூரம் பயணம் செய்யும். சில ஆண்டுகளில் அவை பெரிய ஆமைகளாக வளர்ந்த பிறகு, எந்த தூர தேசத்தில் இருந்தாலும் இனப் பெருக்கத்துக்கும், முட்டைகளை இடுவதற்கும், தாங்கள் பிறந்த அதே மெரினா கடற்கரையை அடையாளம் கண்டு வந்துவிடும். அங்கே தான் அவை முட்டைகளை இடும்.

கடலின் நீரோட்டத்தையும், தாங்கள் பிறந்த இடத்தின் காந்த அலைகளையும் நினைவில் வைத்துக் கொண்டு, ஆமைகள் இவ்வாறு பயணம் மேற்கொள்வதாக சமீபத்தில் ஆய்வு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆமைகளின் இந்தப் போக்கு, அந்தக்கால சோழர்களுக்கு அப்போதே அத்துப்படியாக இருந்தது.

ஆமைகள், கடல் நீரோட்டத்தை நன்றாக அறிந்து கொண்டு, அந்த நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும். பின்னர் நீந்திச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே, அந்த நீரோட்டத்துடன் பயணம் மேற்கொண்டு தங்கள் இலக்கை அடையும் என்பதையும் சோழர்கள் அறிந்து இருந்தார்கள்.

இந்த ரகசியத்தின் மூலம், அவர்கள் தங்களது கடல் பயணத்துக்கு ஆமைகளை வழிகாட்டியாகக் கொண்டு கடலில் மிக எளிதாக பல மைல் தூரம் பெரிய படகுகளில் பயணித்தார்கள்.

கீழைக்காற்று எந்தத் திசையில் வீசுகிறது? ஆமைகள் செல்லும் கடல் நீரோட்டம் எப்படி இருக்கிறது? என்பதை எல்லாம் மிகச்சரியாகக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் படகைச் செலுத்தும் போது, படகு அந்த நீரோட்டத்துடன் இழுத்துச் செல்லப்பட்டு இலக்கை அடைந்துவிடும்.

இந்த நுணுக்கத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கடலில் பயணம் மேற்கொண்டு அரிய பல சாதனைகளை அரங்கேற்றினார்கள்.

மன்னர் ராஜேந்திரசோழன் காலத்தில் இந்தோனேஷியா பகுதியில் இருந்த ஸ்ரீவிஜய பேரரசு, கடற்கொள்ளையர்களை ஆதரித்ததோடு, அவர்கள் அடிக்கும் கொள்ளையிலும் பங்கு பெற்றுக்கொண்டு இருந்தது.

இந்த அடாத செயலை முறியடிக்கவும், தங்கள் நாட்டு வணிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், நாட்டின் எல்லையை விரிவுபடுத்தவும் சோழர்களுக்கு வலிமையான கடற்படை தேவையாக இருந்தது.

இதனால் அவர்கள், தீப்பந்துகளை வீசும் ஆயுதங்களையும், கவண் கல் எறிவதற்கு ஏற்ற ஆயுதங்களையும் கொண்ட கடற்படையை வைத்து இருந்தனர்.

“சோழ நாட்டு வணிக கப்பல்களும், மன்னரின் கப்பலும் கடலில் செல்லும்போது, அவற்றுக்கு பாதுகாப்பாக, இத்தகைய ஆயுதங்களைத் தாங்கிய கப்பல்கள் உடன் சென்றன” என்ற செய்தியை, பழங்கால வரலாற்றுக் குறிப்பு கொண்ட ‘பெரிப்புளூஸ் ஆப் த எரித்திரேயன் சீ’ என்ற புத்தகத்தில் காணமுடிகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வின்போது, சோழர் கால படகின் உடைந்த பாகம் ஒன்று, பூம்புகார் துறை முகத்தில் இருந்து 19 மைல் தொலைவில் கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அதை மாதிரியாக வைத்து, அதே போன்ற படகு ஒன்றைச் செய்து, திருநெல்வேலியில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இப்போது வைத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு கிடைக்கும் ஒன்றிரண்டு சான்றுகள் தான் பழங் காலத்தின் புகழ்பெற்ற வரலாற்றுக்கு ஆவணங்களாகத் திகழ்கின்றன.

அவைகள் கிடைக்காமல் இருந்தால் வரலாற்றுப் பக்கங்கள் இருண்டே காணப்படும்.

தற்போது உலகம் போற்றும் பழங்காலச் சின்னங்கள் பல, ஒரு காலத்தில் வரலாற்றில் இருந்து காணாமல் போய்விடுவது போன்ற நிலையில் இருந்து, தற்செயலாக நடைபெற்ற அரிய நிகழ்வு மூலம் பின்னர் மீட்கப்பட்டவைதான்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகள், சில ஆண்டுகள் ஆள்நடமாட்டமே இல்லாமல் புதர் களுக்குள் மறைந்து போய்விடும் நிலையில் இருந்தன. ஓர் அற்புதம் நிகழ்ந்ததன் மூலம் அந்த குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது அவை உலக மக்களால் கொண்டாடப்படுகின்றன.

இதே போன்ற அற்புதம் கம்போடியாவிலும் நிகழ்ந்தது.

தமிழகத்தின் கட்டிடம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் அற்புதமான வழிகாட்டியால் கம்போடியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான சிற்பக் கலைப் பொக்கிஷங்கள், 150 ஆண்டு களுக்கு முன் தடயமே இல்லாமல் மறைந்து போக இருந்தன.

என்ன காரணத்தாலோ அங்கு இருந்த லட்சக்கணக்கான மக்கள் திடீர் என்று மாயமாக மறைந்துவிட, கோவில்கள் மட்டும் தனித்து விடப்பட்டன.

400 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கோவில்கள் இருக்கும் பகுதிக்கு யாருமே செல்லவில்லை என்பதால், கோவில்கள் அனைத்தையும் காடுகள் சூழ்ந்து கொண்டன. அதிசய சிற்பங் களைக் கொண்ட அந்தக் கோவில்கள் ஏறக்குறைய அழியும் நிலைக்குச் சென்றுவிட்டன.

பல நூறு ஆண்டுகளாக அந்த கலைப் பொக்கிஷங்கள் எவ்வாறு காடுகளால் சூழப்பட்டு யாருமே அண்ட முடியாதவைகளாக இருந்தன? பின்னர் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு அவை உயிரூட்டப்பட்டன? என்பவை எல்லாம் பரபரப்பான மர்ம நாவலுக்கு சமமான தகவல்கள் ஆகும்.

அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)

மேலும் செய்திகள்