400 ஜோடிகளுக்கு நடந்த பிரமாண்ட திருமணம்

தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள சிறிய கிராமத்தில் 400 ஜோடிகளுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்ட சமூக திருமணம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.;

Update:2023-03-12 20:18 IST

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அருகில் உள்ள படந்தோரை கிராமத்தில் நடந்த இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை கேரளாவை சேர்ந்த சன்னி யுவஜன சங்கம் என்ற இஸ்லாமிய இளைஞர் அமைப்பு செய்திருந்தது. இதில் இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 74 மணமக்களும் கலந்து கொண்டது சிறப்பம்சம்.

முஸ்லிம் ஜோடிகளின் திருமண நிகழ்வுகள் இமாம்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. இந்து மற்றும் கிறிஸ்தவ மணமக்களின் திருமண சடங்குகள் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் தேவாலயத்தில் நடந்தது. அங்கு திருமண சடங்குகளை முடித்ததும் இஸ்லாமிய திருமண ஜோடிகளுடன் இணைந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பிரமாண்ட திருமண வைபோகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

''இதுபோன்ற அற்புதமான தருணத்தை பார்த்ததும் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்த நிகழ்வைப் பார்த்த ஆயிரக்கணக்கான மக்களிடம் வெளிப்பட்ட மத நல்லிணக்க உணர்வுகள் என்னையும் ஆட்கொண்டு மன நிறைவு கொள்ளச்செய்தது'' என்கிறார் கேரள முஸ்லிம் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் ஜமால்.

பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் கிராமப்புற இளைஞர்கள்-இளம் பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்து புதிய வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் நோக்கத்தில் இந்த திருமண ஏற்பாடுகளை இஸ்லாமிய இளைஞர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அப்துஸ் சலாம் முஸ்லியார் என்பவர் கேரள முஸ்லிம் ஜமாத் தலைவர்களுடன் இணைந்து 5-வது முறையாக இந்த திருமண நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

திருமண ஆடைகள், இதர திருமண செலவுகள் தவிர ஒவ்வொரு ஜோடிக்கும் ஐந்து பவுன் தங்கம் வழங்கப்பட்டது. இந்த சமூக திருமணத்தை நடத்துவதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்