இறக்கை இல்லாத பறவை 'கிவி'
நியூசிலாந்தில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக இருக்கிறது, “கிவி பறவை’. இவை வீட்டில் வளர்க்கப்படும் கோழியின் அளவைப் போலவே காட்சியளிக்கும்.;
அழகும், ஆச்சரியமும் நிறைந்தவை பறவைகள். வானில் சிறகடித்துப் பறக்கும் சக்தி பெற்றதனால், அவை "பறவை' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்த உலகத்தில் இறக்கையே இல்லாத, பறக்கவே இயலாத பறவை இனம் ஒன்றும் உள்ளது. அதனைப் பற்றி இங்கே பார்ப்போம். நியூசிலாந்தில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக இருக்கிறது, "கிவி பறவை'. இவை வீட்டில் வளர்க்கப்படும் கோழியின் அளவைப் போலவே காட்சியளிக்கும். பறவை இனங்களில் ஒவ்வொரு பறவைக்கும் அதன் அலகு மாறுபடும். ஆனால் ஒவ்வொரு பறவைக்குமான அலகும், அழகு வாய்ந்தது. ஆனால் கிவி பறவையின் அலகு, கூரான நீண்ட தன்மையுடன் காணப்படுகிறது. இதன் நுனியில்தான். இதன் நுகர்ச்சி புலன் இருக்கிறது. பொதுவாக வெட்கம் நிறைந்த பறவையாக கிவி பறவை உள்ளது.
இது தன்னுடைய கூரான அலகை, நிலம், நீர்நிலைகளில் செலுத்தி, புழுக்கள், பூச்சிகள், நீரில் வாழும் சிறிய வகை மீன்கள் போன்றவற்றை பிடித்து உணவாக சாப்பிடுகின்றது. பறவை இனங்கள் பறப்பதற்கு ஏதுவாக, அதன் எடையை குறைக்கும் வகையில் உள்ளீடற்ற எலும்புகள் கொண்டுள்ளன. ஆனால் கிவி பறவைக்கு பாலூட்டிகளைப் போல, எலும்புகளில் மஞ்ஜைகள் காணப்படுகின்றன. இந்தப் பறவை இனம், சாம்பல் மற்றும் அடர் பழுப்பு நிறங்களில் காட்சியளிக்கும்.
இந்த பறவை இனத்தில், மூன்று வகை காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு துணை இனமும் இருக்கிறது.
வடதீவு மண்ணிறக் கிவி: இதுதான் கிவி இனங்களிலேயே பொதுவான கிவி ஆகும். இவற்றில் பெண் கிவி 400 மில்லிமீட்டர் உயரமும், 2.8 கிலோ கிராம் எடையும் கொண்டிருக்கும். ஆண் பறவை 2.2 கிலோகிராம் எடை கொண்டவை.
பெண் கிவி ஒரே நேரத்தில் இரண்டு முட்டைகள் இடும். அதை ஆண் பறவை தான் அடைகாக்கும்.
ஒக்காரிட்டோ மண்ணிறக் கிவி: வடதீவு மண்ணிறக் கிவியின் துணை வகை இது. இது அளவில் கொஞ்சம் பெரியது. இந்த இனத்தில் உள்ள பெண் பறவை, ஒரே நேரத்தில் மூன்று முட்டைகள் வரை இடும். ஆனால் ஒவ்வொரு முட்டையையும், வெவ்வேறு இடத்தில் இடும் வழக்கம் இவற்றிடம் உண்டு. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை அடைகாக்கின்றன.
பெரியபுள்ளிக்கிவி: இதுதான் கிவி இனங்களிலேயே மிகவும் பெரியதாகும். பெண் பறவை 450 மில்லிமீட்டர் உயரமும், 3.3 கிலோ எடையும்கொண்டிருக்கும். ஆண் பறவை 2.4 கிலோகிராம் எடையோடு இருக்கும். இந்த இனத்தின் பெண் பறவை, ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். அதனை ஆண், பெண் இரண்டு பறவைகளும் இணைந்தே அடைகாக்கும்.
சிறிய புள்ளிக் கிவி: இவை அளவில் சிறியது. பன்றிகள், பூனைகள் போன்றவற்றால் வேட்டையாடப்பட்ட காரணத்தால், இவை அழியும் தருவாயில் உள்ளது. மாமிசம் சாப்பிடும் உயிரினங்கள் இல்லாத பகுதிகளில் இவற்றை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 250 மில்லிமீட்டர் உயரமும், 1.3 கிலோகிராம் எடையும் கொண்ட பறவை இது. பெண் பறவை ஒரு சமயத்தில் ஒரு முட்டை மட்டுமே இடும். அதனை ஆண் பறவை அடைகாக்கும்.