தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.;
10 லட்சம் பனை விதைகள்
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளரும், மூத்த விவசாயியுமான செ.நல்லசாமி:-
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ரூ.6 ஆயிரம் கோடி அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையை ஒப்பிடும் போது மிக குறைவானதாகும். சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சி நிலையம் அமைப்பது, 10 லட்சம் பனை விதைகள் வழங்குவது வரவேற்கத்தக்கது.
அதே நேரம் பனை மரங்களை காப்பாற்ற ஆட்சியாளர்கள் கோடி கணக்கில் பணம் செலவு செய்வதை விட கள்ளுக்கு அனுமதியை மட்டும் அளித்தால் போதும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உணவு தேடும் உரிமையாக கள் இறக்குவது உள்ளது. எனவே சட்டப்படி கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
இதுபோல் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் தொகை, மானியம் அளிக்க தேவை இல்லை. சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் வழங்கும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் மொலாசிஸ் (மது உற்பத்திக்கு தேவையான பொருள்) எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்கான தொகையை கொடுத்தால் போதும். அதை செய்யாமல் விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி இலவசம், மானியம் என்று ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு
கடம்பூர் மலை பவளகுட்டையை சேர்ந்த விவசாயி மகேஸ்:-
எங்கள் மலைக்கிராமங்கள் மானாவாரி பயிர்களை நம்பி உள்ளன. எங்கள் பகுதியில் தொடர்ந்து சிறுதானியங்கள் பயிரிட்டு வருகிறோம். ஆனால், பல ஆண்டுகளாக சிறுதானியங்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. கட்டுப்படியாகாத விலை கிடைக்காததால், மலைக்கிராம விவசாயிகள் பலரும் வேறு விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள். கிணற்று பாசனத்தை நம்பி மாற்று விவசாயத்துக்கு அவர்கள் மாறினாலும், போதிய மழை இல்லை என்றால் அதிலும் நஷ்டம் வருகிறது. எனவே விவசாய தொழில் வேண்டாம் என்று பலரும் ஒதுங்கி விடும் அபாயம் இருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு சிறுதானிய உற்பத்திக்கு மிகுந்த ஆதரவு அளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அரசே கொள்முதல் செய்கிறது என்ற அறிவிப்பு விற்பனை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என்று கருதுகிறோம். தற்போது வெளி சந்தையில் சிறு தானியங்கள் அதிக விலையில் விற்பனையானாலும், எங்களிடம் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30-க்கும் குறைவாகவே வாங்கிசெல்கிறார்கள். இது எங்களுக்கு முழுமையாக கட்டுப்படியாகாது. எனவே குறைந்த பட்சம் ரூ.50-க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மகிழ்ச்சி
பர்கூர் மலைக்கிராம விவசாயி கணேசன் கூறியதாவது:-
எங்கள் பர்கூர் மலை என்ற பெயரே முற்காலத்தில் வரகூர் என்று இருந்ததாக எங்கள் முன்னோர்கள் கூறுவார்கள். அதாவது வரகு அதிக அளவில் விளையும் பகுதியாக இது இருந்தது. அதுவே மருவி பர்கூர் என்று ஆனது. இன்னும் வரகு, சாமை, கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் விளையும் நிலப்பகுதியாக இது இருந்தாலும், செலவுக்கு ஏற்ற விலை கிடைப்பது இல்லை என்பதால் பலரும் வேறு பயிர்களுக்கு மாறி விட்டனர். ஆனால் கொஞ்ச நாளில் நிலத்தின் தன்மை மாறி விடுகிறது. மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவை நன்றாக வந்தாலும் நடவுகூலி கட்டுப்படியாவது இல்லை.
இந்த சூழலில் சிறுதானிய விளைச்சலை மேம்படுத்த அரசு அறிவித்து உள்ள திட்டம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷனில் கேழ்வரகு தரப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியாக இருப்பதுடன் கண்டிப்பாக ஏராளமானவர்கள் கேழ்வரகு பயிரிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
வரவேற்பு-சிறப்பு
விவசாயி கே.ஆர்.சுதந்திர ராசு கூறியதாவது:-
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் வரவேற்புக்கு உரியது. சிறப்பாக வேளாண் உற்பத்தி செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருது வழங்குவது வரவேற்புக்கு உரியது. சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது சிறப்பானது. புதிய வேளாண் கருவிகளுக்கு மானியங்கள் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தொழிலாளர்களுக்கு அதிக கூலி...
திங்களூர் பகுதியை சேர்ந்த தெற்குப்பாளையம் பெண் விவசாயி மாராயம்மாள்:-
விவசாய பணிகளுக்கு வரும் ஆண் தொழிலாளர்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்தால் 700 ரூபாயில் இருந்து 1000 ஆயிரம் ரூபாய் வரையும், ெபண் தொழிலாளர்களுக்கு ரூ.350 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையும் கூலியாக தரவேண்டும். சிறு விவசாயிகள் என்றால் அவர்களே தோட்டத்தில் வேலை செய்துவிடலாம். அதுவே பல ஏக்கர் கணக்கில் விவசாயம் பார்ப்பவர்கள் கூலி ஆட்களை வைத்தே தீரவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு கிைடக்கும் சொற்ப லாபமும் கிடைக்காமல் போகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் 100 நாள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை மாதத்தில் 15 நாட்கள் விவசாய பணிக்கும் அனுப்பும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று நினைத்தேன். ஆனால் அறிவிக்கப்படவில்லை. அடுத்த பட்ஜெட்டிலோ அல்லது இடையிலோ இதை அறிவித்தால் விவசாயிகள் ஆறுதல் அடைவார்கள்.
மனநிறைவு
கோபி அருகே உள்ள என்.தொட்டியபாளையத்தை சேர்ந்த பெண் விவசாயி ஜோதிமணி:-
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு என இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லுக்கு பிறகு பயிர் சாகுபடி மானியம் ரூ.24 கோடி வழங்கப்படும் என்பதை பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மனநிறைவை தருகிறது. கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்யப்படும். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நம்மாழ்வார் பெயரில் விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.