ஈரோடு கருங்கல்பாளையம்காவிரிக்கரையில் படித்துறை அமைக்கப்படுமா?பொதுமக்கள்-சலவை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் படித்துறை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்-சலவை தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் படித்துறை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்-சலவை தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
காவிரிக்கரை
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் சோழீஸ்வரர், ராகவேந்திரா, பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடிவிட்டு கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். மேலும், கோவிலுக்கு தேவையான புனிதநீரும் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.
இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஏராளமான கோவில்களில் திருவிழா நடக்கும்போது பக்தர்கள் காவிரிக்கரைக்கு சென்று புனிதநீராடிவிட்டு அங்கிருந்து புனிதநீர் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கம்.
தர்ப்பணம்
புண்ணிய தலமாக கருதப்படும் காவிரிக்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசையின்போது காவிரிக்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது பக்தர்கள் பாதுகாப்பின்றி குளிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் கற்களை போட்டு துணி துவைத்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். எனவே கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் படித்துறை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
படித்துறை
ஈரோட்டை சேர்ந்த ஹேமலதா:-
கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் முனியப்பன் நகர் உள்ளது. அங்கு 220 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு காவிரிக்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கு ரோடு வசதி கிடையாது. புதிதாக ரோடு போட்டு, படித்துறை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். படித்துறை அமைத்து விட்டால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க முடியும். உயிரிழப்பை தடுக்கலாம்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்கரையில் படித்துறை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே மாநகராட்சி சார்பில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தார் ரோடு
காவிரிக்கரை முனியப்பன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன்:-
காவிரிக்கரையில் படித்துறை அமைத்து தார் ரோடு அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது முனியப்பன்நகருக்கு செல்லும் மண்ரோடு துண்டிக்கப்படுகிறது. இதனால் தனித்தீவாக மாறிவிடுகிறது. எனவே காவிரிக்கரையில் இருந்து முனியப்பன்நகர் வரை நீளமான சுவர் எழுப்பி 3 இடங்களில் படித்துறை அமைக்கலாம்.
அருகில் ஆத்மா மின் மயானம் உள்ளதால் இறுதி சடங்கில் பங்கேற்க வருபவர்களும் படித்துறை இல்லாத காரணத்தினால் குளிக்காமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவே படித்துறை அமைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டால், ஆற்றில் குளிக்க முடியும்.
துணி துவைக்க...
கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரம் துணி துவைக்கும் தொழிலாளி ஈஸ்வரி:-
என்னைப்போன்று ஏராளமான தொழிலாளர்கள் பொதுமக்களிடம் இருந்து துணிகளை பெற்றுக்கொண்டு இங்கு துணி துவைத்து காய வைத்து அதை இஸ்திரிபோட்டு கொடுக்கிறோம். இதை நாங்கள் காலகாலமாக செய்து வருகிறோம். இதன் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருமானத்தை பெற்று குடும்பம் நடத்தி வருகிறோம்.
இங்கு படித்துறை இல்லாததால் நாங்கள் பெரிய அளவிலான கற்்களை இங்கு கொண்டு வந்து போட்டு துணி துவைக்கும் நிலை உள்ளது. அதேநேரத்தில் கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரம் படித்துறை அமைத்து கொடுத்தால் துணி துவைக்க எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் எந்தவித பாதுகாப்பு இல்லாத நிலையில் தற்போது தொழில் செய்து வருகிறோம். எனவே இங்கு படித்துறை அமைத்து கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும்.
குளிக்க ஆசை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி புஷ்பராணி:-
கோவில் திருவிழாவின்போது தீர்த்தம் எடுப்பதற்காக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு செல்வேன். அப்போது நிறையபேர் வருவதால் பயமின்றி அங்கு குளித்துவிட்டு தீர்த்தம் எடுத்து வருவேன். ஆனால் குழந்தைகளுடன் சென்று அங்கு குளிக்க ஆசையாக உள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாததாலும், நீச்சல் தெரியாததாலும் காவிரி ஆற்றுக்கு செல்ல பயமாக உள்ளது.
அதேநேரத்தில் அங்கு படித்துறை இருந்தால் அதில் அமர்ந்து பாதுகாப்புடன் குளிக்க முடியும். மேலும் குழந்தைகளையும் அழைத்து சென்று குளிக்க வைக்கலாம். எனவே கருங்கல்பாளையம் காவிரிக்கரையோரம் படித்துறை அமைத்து கொடுத்தால் ஏராளமானோர் அங்கு சென்று பாதுகாப்புடன் குளித்துவிட்டு ஆனந்தமாக செல்வார்கள். எனவே படித்துறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.