மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? என மன்னர்கள் கேட்டதாக படித்திருப்போம். காரணம், விண்ணில் இருந்து மழை பொழிந்தால் தான் மண்ணில் பயிர்கள் விளைந்து மக்கள் பசியின்றி வாழ முடியும்.
ஆனால் அந்த விண்ணிலே விவசாயம் செய்வதுதான் நவீன விஞ்ஞானத்தின் சாதனை. விண்வெளியில் விவசாயம் செய்வது எவ்வளவு சாத்தியம் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், அதன் அவசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தற்சமயம் பூமியில் இருந்துதான் விண்வெளிக்கு உணவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் பெருமளவு பணம் விரயமாகிறது. மேலும் விண்வெளியில் எதிர்காலத்தில் மனிதர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டி இருப்பின் அதற்கு தேவையான உணவையும் கூடவே எடுத்துச்செல்லும் நிலை ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இம்முயற்சியானது தொடங்கப்பட்டது.
இதற்கான அடித்தளம் 1971-ல் போடப்பட்டாலும் சரியாக செயல்படுத்தப்பட்டது 2010-ம் ஆண்டில்தான். விண்வெளியில் பயிரிடுவதில் உள்ள முக்கிய சிக்கல் அங்கு பயிருக்குத் தேவையான ஈர்ப்பு விசை இல்லாமைதான். மேலும் சூரிய ஒளி கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
இதுபோன்ற சிக்கல்களைக் கடந்து விஞ்ஞானிகள் விண்வெளியில் விவசாயம் செய்து சாதித்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டில் விண்வெளியில் முதன் முதலில் பூத்தது சூரியகாந்தி பூ தான். அதைத்தொடர்ந்து 2016-ல் ஜின்னியா மலர்ந்தது. கடந்த 2015-ம் ஆண்டு விண்வெளி விவசாயத்தில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்தனர்.
அன்று பயிரிடப்பட்ட தாவரத்தின் பெயர் 'வெஜ் 01'. இது ஒரு சிவப்பு நிறக்கீரை. இது முளைத்து 33 நாட்கள் கடந்து கீரையான பின்னர் அங்கிருந்த விண்வெளி வீரர்கள் இதனை உணவாக்கி கொண்டனர். இதை சாப்பிடும் முன்பாக சிட்ரிக் அமிலம் சார்ந்த ஒரு வகை கரைசல் மூலம் சுத்தப்படுத்தி பிறகு உண்டனர்.
விண்வெளி விவசாயத்தில் விஞ்ஞானிகள் மண்ணில்லா வளர்ப்பு என்னும் முறையை பேணுகின்றனர். இம்முறையில் மண் தேவையில்லை. நீர் அல்லது களிமண் பயன்படுத்தி பயிரை வளர்த்து விடலாம். இம்முறையில் பயிர்கள் விதவிதமான வெப்பநிலைகள், செயற்கை வெளிச்சங்கள் கொண்ட சிறப்பு அறைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. அத்துடன் பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் மிகவும் கவனமாக வழங்கப்படுகிறது.
விண்வெளியில் இதுவரை உருளைக்கிழங்கு, தானியங்கள், அரிசி, தக்காளி, மிளகு, கீரை, முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெரி, வெங்காயம், மிளகு, துலிப் மலர், சூரியகாந்தி ஆகியவை பயிரிட்டு சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் விண்ணில் பயிரிடும் முறை மனிதர்களால் இன்னும் சாத்தியம் ஆகவில்லை. ஆனால் எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதன் பயிர்செய்து பூமிக்கு உணவு அனுப்பும் நிலை உருவாகலாம் என்பதில் ஆச்சரியமில்லை.